
பட மூலாதாரம், Getty Images
ஐந்து மாநிலங்களில் நடந்த நான்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது, தெலுங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்ற பா.ஜ.க, அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் காங்கிரஸைத் தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
அதேசமயம் ராஜஸ்தானில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றும் வழக்கத்தை மாற்ற நினைத்த காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
முதன்முறையாக, இந்தியாவின் இந்த புதிய மாநிலத்தில் பிஆர்எஸ் (முன்னதாக டி.ஆர்.எஸ்) தவிர்த்து வேறு ஒரு அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது.
இந்தத் தேர்தல்கள் 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் அரையிறுதிப் போட்டியாகக் கருதப்பட்டது, இதில் 28 எதிர்க்கட்சிகள் பாஜக-வை வென்று ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்துடன் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரில் கூட்டணி அமைத்தன.

பட மூலாதாரம், Getty Images
‘தேர்தலின் போது காங்கிரஸ் கூறியது பொய்’
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த முடிவுகள் இந்த கூட்டணியிலும் அதன் எதிர்காலத்திலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்குக் காரணம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸின் அணுகுமுறை குறித்து இந்திய அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா காங்கிரசை குறிவைத்து பேசியுள்ளார்.
தேர்தலின் போது காங்கிரஸ் கூறியது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர். கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“வரும் 6-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ‘இந்தியா’ கூட்டணியை விருந்துக்கு அழைத்திருக்கிறார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு மீண்டும் இந்தியா கூட்டணி நினைவுக்கு வந்துள்ளது. இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்றார்.
இதேபோல், ஐக்கிய ஜனதா தளமும் காங்கிரஸை சாடியுள்ளது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி தெரிவித்தார்.
இந்த மாநிலங்களில் வரலாற்று ரீதியாக சோசலிசக் கட்சிகள் இருந்தன, ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் இந்தியக் கூட்டணியின் மற்ற கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவோ அல்லது கருத்து கேட்கவோ இல்லை என்று அவர் கூறினார்.
மேலும், ‘தேர்தல் பிரசாரத்தின் போது, போபாலில் இந்திய கூட்டணியின் பேரணி நடைபெற இருந்தது, ஆனால், இந்த பேரணியை நடத்த வேண்டாம் என, கட்சி தலைமை முடிவு செய்தது’ என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
‘கிடைத்த வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டுள்ளது’
முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி பல சவால்களைச் சந்தித்து வருகிறது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல மாநிலங்களில் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய போட்டியாளர்களாக இருப்பதைப் போலவே, அவை தொடர்ந்து ஒன்றுக்கொன்று எதிராக தேர்தலில் போட்டியிடவும் செய்கின்றன.
இதனுடன், பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தலைப்புகளில் அவர்களது கருத்தும் நிலைப்பாடும் வேறுபட்டவையாக உள்ளன.
தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும் மூத்த பத்திரிக்கையாளர் சீமா சிஷ்டி, இந்தியக் கூட்டணியும், காங்கிரஸும் இந்தத் தேர்தல்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்டதாகக் கூறுகிறார்.
அவரது பார்வையில், இந்தத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசியல் மாற்றத்தைத் தொடங்குவதற்கு ஒரு முன்முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம், இது இந்திய கூட்டணியின் உணர்வை வலுப்படுத்தியிருக்கும்.
பிபிசி இந்தி போட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், சிறிய கட்சிகளை தன்னுடன் சேர்த்துக் கொண்டதன் மூலம் கிடைத்த பலன்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்வதில் தவறு செய்துவிட்டதாக கூறினார்.
“கூட்டணி அமைப்பதால் மாறக்கூடிய அரசியல் அமைப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உதாரணமாக தெலுங்கானாவில் சிபிஐயுடன் கூட்டணி வைத்தார்கள் ஆனால் சிபிஎம் உடன் கூட்டணி அமைக்கவில்லை. இதே போல மற்ற இடங்களிலும் சிறிய கட்சிகளை ஒன்றிணைப்பதால் பலன் உண்டு. அவர்களால் அந்த பலனை எடுக்க முடியவில்லை.” என்று கூறினார்.
மூத்த பத்திரிக்கையாளர் சீமா சிஷ்டி ஒரு உதாரணம் கூறும்போது, “அஜித் ஜோகியின் (ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்) கட்சியின் வாக்குகள் பாஜகவுக்கு மாற்றப்பட்டது. அதேபோல், ராஜஸ்தானில் பாரத் ஆதிவாசி கட்சியுடன் (பிஏபி) கூட்டணி அமைத்திருக்கலாம். அகிலேஷ் யாதவின் கட்சியான எஸ்பி மத்தியப் பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பியிருந்தால், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் கொடுத்திருக்கலாம்.
“இடதுசாரி கட்சிகளுக்கு சில இடங்களை நீங்கள் கொடுத்திருந்தால், நீங்கள் ஒரு புதிய அரசியலைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் இந்துத்துவா எனும் அதே வெளிச்சத்தில் விழுந்தீர்கள். நீங்கள் இந்துத்துவாவை கேள்வி கேட்கவும் இல்லை, அல்லது நீங்கள் அதை வைத்து காய்களை நகர்த்தவும் இல்லை. பிறகு ஏன் உங்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்?”
மூத்த பத்திரிக்கையாளர் நளின் வர்மா கூறுகையில், தெலுங்கானாவில் பிராந்திய இயக்கம் இருந்ததால் காங்கிரசுக்கு பலன் கிடைத்தது.
பிபிசி ஹிந்தியின் போட்காஸ்ட் ‘தின் பர் புரா தின், புரா கபர்’ முடிவுகளை ஆய்வு செய்த அவர், “மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சிறிய கட்சிகளை சேர்த்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். எடுத்துக்காட்டாக, அகிலேஷ் கட்சி (எஸ்பி) மத்திய பிரதேசத்தில் நல்ல ஆதரவைப் பெற்றது. மேலிடம் அவர்களுக்கு (மத்தியப் பிரதேசத்தில்) ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால், பீகார் மற்றும் உ.பி.யின் கட்டமைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், ஏற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இப்போது அதற்கு ஒரு நீண்ட போராட்டம் தேவைப்படும், ஏனெனில் அத்தகைய அமைப்பு அங்கு இல்லை”

பட மூலாதாரம், Getty Images
பாஜகவை தோற்கடிப்பது கடினமானதா?
அவர் மேலும் கூறியது, “இந்தி இதயப் பிரதேசமான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்தக் கூட்டணியின் எந்தக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன? காங்கிரஸ் மட்டுமே. இங்கு காங்கிரஸ்-பா.ஜ.க இடையேதான் மோதல் ஏற்பட்டது. இது இந்தியக் கூட்டணியின் சோதனை அல்ல. இந்த சட்டசபை தேர்தல் முடிவுகளை இந்திய கூட்டணியின் தோல்வியாக கருத முடியாது, அதன் எதிர்காலம் குறித்து எந்த கருத்தையும் கூற முடியாது.
“தேர்தல் முடிவுகள் குறித்த பிபிசி ஹிந்தியின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்வராஜ் அபியான் தலைவரும், தேர்தல் ஆய்வாளருமான யோகேந்திர யாதவ், இந்த முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை,” என்று கூறினார்.
“எண்ணிக்கையைப் பற்றி பேசினால், பெரிதாக மாறவில்லை, ஏனென்றால் முன்பும் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது, இந்த முறையும் பாஜக வென்றுள்ளது. ஆனால் பாஜகவை தோற்கடிக்கும் வாய்ப்பு முன்பை விட கடினமாகிவிட்டது” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியது, “சட்டசபை தேர்தலில் நடந்ததுதான் மக்களவையிலும் நடக்கும் என்று அவசியமில்லை. ஆனால், ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்கள் தங்கள் பணியை கடினமாக்கியுள்ளனர்.
“மத்தியில் இருந்து பா.ஜ.க-வை அகற்ற வேண்டும் என்றால், குஜராத்தில் தொடங்கி பீகார் வரை வடஇந்தியாவில் தோற்கடிக்க வேண்டும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு கொடுத்ததன் மூலம் மூன்று முதல் நான்கு லோக்சபா இடங்களே உள்ளன. இங்கு இடங்கள் உள்ளன. இந்த சில இடங்களை வெல்வது காங்கிரசுக்கு மிகவும் தேவையானதாக இருக்கும், ஆனால் இந்த நாளுக்கு பிறகு அவ்வாய்ப்பு கடினமானதாக மாறிவிட்டது,” என்று கூறினார் யோகேந்திர யாதவ்.

பட மூலாதாரம், Getty Images
சாதிவாரி கணக்கெடுப்பின் தாக்கம் என்ன?
தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் இந்தத் தேர்தல்களில் கிட்டத்தட்ட எல்லா மேடைகளிலும் இந்த வாக்குறுதியை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவின் முக்கியப் பிரச்சினையும் இதுதான். இந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பெங்களூருவில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி இந்திய கூட்டணி கூட்டறிக்கையை வெளியிட்டது.
உயர் சாதியினரின் பாரம்பரிய இந்து வாக்காளர்களை கோபப்படுத்தலாம் என்று அஞ்சுவதால், இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் பிஜேபி கவலைப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கு கூட, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு முக்கியமான பிரச்சினையாக ஆக்கி வருகின்றன.
‘ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை’
இத்தகைய சூழ்நிலையில், இந்த மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான ஓ.பி.சி வாக்காளர்கள் இருப்பதால், இந்தத் தேர்தல்களும் இந்த பிரச்சினைக்கு ஒரு லிட்மஸ் சோதனையாக இருந்தனவா?
இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் நளின் வர்மா கூறும்போது, “மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சோசலிஸ்ட் அல்லது பிற்படுத்தப்பட்டோர் இயக்கத்துக்கு உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருக்கும் செல்வாக்கு இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு. பிரச்சினைக்கு ஒரு கேடர் உள்ளது,” என்றார்
பீகாரில் கர்பூரி தாக்கூர், லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேசத்தில் லோஹியா, முலாயம் சிங் யாதவ் ஆகியோர் சண்டையிட்டது போல, இந்த மாநிலங்களில் அது போல எந்த சண்டையும் நடக்கவில்லை. எனவே பாஜகவுக்கு எதிரான காங்கிரசின் களம் காலியாக தான் இருந்தது. இந்தியா கூட்டணி அமைத்த பிறகுதான் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் இயக்கம் பற்றிப் பேசியது என்கிறார் நளின் வர்மா.
உத்தரப் பிரதேசம் அல்லது பீகாருடன் ஒப்பிடும்போது, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவகாரம் குறித்து அதிக விழிப்புணர்வு இல்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் சீமா சிஷ்தி நம்புகிறார்.
அவர் தொடர்ந்து கூறியது, ‘ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரபுத்துவ அமைப்பு, இந்தப் பிரச்னைகளைப் பற்றி பேச எந்த ஆதிக்க சாதியும் இல்லை. சாதிக் கணக்கெடுப்பின் தாக்கம் இங்கு அதிகம் இல்லை என்று சொல்லலாம், ஏனென்றால் இங்குள்ள மக்களுக்கு இந்த விவகாரம் புதியது, அதேசமயம் பீகார் போன்ற மாநிலங்களில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே மக்களிடையே அணிதிரட்டல் நடந்துள்ளது.’

பட மூலாதாரம், Getty Images
‘காங்கிரஸ் தோற்றது இந்தியா கூட்டணிக்கு நல்லது’
மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ள இந்தியக் கூட்டணிக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் இந்திய கூட்டணியின் வேலையை எளிதாக்கும் என்று தேர்தல் ஆய்வாளரும் ஸ்வராஜ் இந்தியா தலைவருமான யோகேந்திர யாதவ் கூறுகிறார்.
“இந்த தோல்வியால், இந்திய கூட்டணியின் உள் சமன்பாடுகள் சற்று எளிதாகும். ஏனென்றால் காங்கிரஸ் வலுவாக வெற்றி பெற்று வந்திருந்தால் பிரச்சனை இன்னும் அதிகரித்திருக்கும், காங்கிரஸிலிருந்தும் மற்ற கட்சிகளிலிருந்தும். ஆனால், இந்த உந்துதலுக்குப் பிறகு, காங்கிரஸும் மற்ற கட்சிகளும் இந்தக் கூட்டணியை பலப்படுத்தி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.” என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் இந்தியக் கூட்டணிக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருப்பினும், ராஜஸ்தானில் சிபிஎம் மற்றும் பிஏபியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால், அது ஒருதலைப்பட்ச வெற்றியாக இருந்திருக்காது, விஷயம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும்.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார், அசாம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த கூட்டணி தேவை என்று அவர் கூறினார். உண்மையான வேலை இருக்கும். இந்த முடிவுகளால் இந்த கூட்டணியில் சீட் பங்கீடு முன்பை விட எளிதாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்றார்.
ஆனால், இந்த மதிப்பீடு சரியா தவறா என்பது டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்குப் பிறகுதான் தெரியவரும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்