கூகுள் டாக்டர்: ChatGPT சொல்வதைக் கேட்டு மருந்து எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?

கூகுள் டாக்டர்: ChatGPT சொல்வதைக் கேட்டு மருந்து எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?

கூகுள் டாக்டர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இணையத்தில் மருத்துவம் சார்ந்த தகவல்களை பார்த்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நோய் என்னவென்று மருத்துவர் கண்டறிந்து கூறிய காலம் மாறி, தற்போது ‘கூகுள் டாக்டர்’ ஐ கேட்டறிந்து நோயாளிகளே தனக்கு என்ன நோய் உள்ளது என மருத்துவரிடம் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நோயாளி : எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருக்கிறது, தொண்டை வலியும் இருக்கிறது. இது மழைக்காலத்தில் ஏற்படும் வைரல் ரைனைடிஸ் என்று இணையத்தில் படித்தேன்.

மருத்துவர் : தற்போது காய்ச்சலுக்காக பாராசிடாமல் மற்றும் சளிக்கான மருந்தை தருகிறேன், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் ரத்த பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

நோயாளி : இந்த மருந்துகள் தான் தரப்படும் என்றும் எனக்கு தெரியும் டாக்டர். இணையத்தில் அந்த தகவலையும் பார்த்தேன்.

மருத்துவர்: மருந்துகளையும் நீங்களே வாங்கியிருக்கலாமே

நோயாளி : மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கடையில் மருந்துகள் தரமாட்டார்கள். எனவே உங்களிடம் வந்தேன்.

இது கற்பனை உரையாடல் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன், தான் சந்தித்த ஒரு நோயாளி தன்னிடம் கூறியது என்கிறார் சென்னையில் உள்ள பொது மருத்துவர் அஷ்வின்.

“தங்களுக்கான அறிகுறிகள் குறித்து இணையத்தில் தேடி படித்து விட்டு, தாங்களே என்ன நோய் என்றும் கண்டறிந்து விட்டு வருகிறார்கள் நோயாளிகள். எங்களது வேலையை மிக எளிமையாக்கி விட்டார்கள்” என்று கிண்டலாக கூறுகிறார் மருத்துவர் அஷ்வின்.

இது போன்ற அனுபவத்தை எதிர்கொள்வது மருத்துவர் அஷ்வின் மட்டுமல்ல. பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்களும் கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பட்ட போக்கை நோயாளிகளிடம் எதிர்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?
படக்குறிப்பு,

தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளே செய்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார் பொது மருத்துவர் அஷ்வின்.

விரல் நுனியில் அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன என்பது நம் அன்றாட வாழ்வை பல்வேறு விதங்களில் எளிமையாக்கினாலும் மருத்துவம் சார்ந்த தகவல்களுக்கு இணையத்தை மட்டும் நம்பி இருப்பதில் அபாயங்களும் இருக்கின்றன.

அண்மையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே, ஒருவர் இணையத்தில் பார்த்த தகவல்களை கண்டு பயந்து தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனை சென்றவருக்கு உடலில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்புச் சத்து அதிகமாக இருந்தால் என்னவாகும் என இணையத்தில் படித்துள்ளார். அதில் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருப்பதை படித்து, பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல, கர்பிணி பெண்ணுக்கு யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொண்டதும், மருத்துவமனையை தவிர்த்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்த வேதனையான நிகழ்வுகளும் அடிக்கடி வருகின்றன.

இணையத்தை தேடுவது 2K கிட்ஸ் மட்டுமல்ல!

ஆங்கில மருத்துவம் முதல் பாட்டி வைத்தியம் வரை இணையதளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன. உடல் உபாதைகளுக்கு மருத்துவர்களை நம்புவதை விடவும், இணையதளத்தை நம்பும் போக்கு ஒரு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற போக்கு 2K கிட்ஸ் இடம் மட்டும் இருப்பதில்லை எனவும், 18 வயது முதல் சுமார் 45 வயது வரையிலானவர்களிடம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2021ம் ஆண்டு வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று, அமெரிக்காவில் 71.8% பேர் உடல்நலம் சார்ந்த தகவல்களை வணிக ரீதியிலான இணையதளங்களை பார்த்து தெரிந்துக் கொள்கின்றனர் என்று கூறுகிறது. மேலும், கூகுள் போன்ற இணையத்தின் மூலம் நேரடியாக 11.6% பேர் மருத்துவ தகவல்களை தேடுவதாகவும், ஆய்வுகள் சார்ந்த இணையதளங்களிலிருந்து 11.1% பேரும், அரசு சார்ந்த இணையதளங்களிலிருந்து 5.5% பேரும் தகவல்களை பெறுவதாக கூறுகிறது. இதே போன்ற போக்கு இந்தியாவிலும் இருக்கிறது என்பது ஆச்சர்யபடும் விசயம் அல்ல.

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?
படக்குறிப்பு,

மருந்து சீட்டை வைத்துக் கொண்டு, அதிலுள்ள மாத்திரைகள் குறித்து கூகுளில் ஆராய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

“இரண்டு வாரங்களுக்கு கூகுள் பார்க்காதீர்கள்” – மருத்துவர்களின் அட்வைஸ்

தற்போது எல்லாம் மருந்து சீட்டை கையில் கொடுப்பதோடு “இரண்டு வாரங்களுக்கு இணையத்தில் எந்த தகவலையும் தேடி படிக்காதீர்கள்”என்று சேர்த்தே கூறுவதாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையின் மூத்த பேராசிரியர் பூர்ண சந்திரிகா தெரிவிக்கிறார்.

“துரிதமான மனநிலை மாற்றத்துக்கான (mood swings) மருந்துகளை ஒருவருக்கு வழங்கினேன். அந்த மருந்து வலிப்புகளை தவிர்க்கவும் கொடுக்கப்படுவதாகும். இணையத்தில் மருந்து குறித்து படித்துவிட்டு, தனக்கு ஏன் வலிப்புக்கான மருந்து கொடுக்கப்படுகிறது என குழம்பிப் போகிறார், பதட்டமடைகிறார் நோயாளி.

சில நோயாளிகள் இது போன்ற தகவல்களால் மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடும் போக்கையும் காண முடிகிறது. இதனால் நோயாளிகளின் சிக்கல்களும் மருத்துவரின் வேலை பளுவும் அதிகரிக்க தான் செய்கின்றன” என்கிறார் அவர்.

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கூகுளை தொடர்ந்து தற்போது நோயாளிகள் சாட் ஜிபிடியையும் நாடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது கூகுள் மட்டுமல்லாமல் புதிய வரவாக சாட் ஜிபிடியையும் சேர்ந்து விட்டது என்கிறார் அவர்.

சாட் ஜிபிடியின் பயன்பாட்டை ஒப்புக் கொள்ளும் மருத்துவர் அஷ்வின், மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, மருத்துவருக்கு இணையானதாக இருக்காது என்கிறார்.

“சாட் ஜிபிடியில், உங்களுக்கான அறிகுறிகளை நீங்கள் பதிவிட்டால், உங்களுக்கு என்ன நோய் இருக்கலாம் என்ற பட்டியலை சாட் ஜிபிடி தரும். ஆனால் மருத்துவரிடம் சென்றால் மட்டும் தான் உங்கள் வயது, பாலினம், இணை நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப சரியான தகவல்களை பெற முடியும்” என்கிறார்.

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாலியோ, கீடோ, இண்டர்மிட்டண்ட் பாஸ்டிங் போன்ற உணவுப் பழக்கங்களை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இணையத்தை பார்த்து டயட் மேற்கொள்ளலாமா?

இணையத்தை பார்த்து அதிகமாக பின்பற்றப்படும் மற்றொரு விசயம் டயட் எனப்படும் உணவுப் பழக்கங்கள். பாலியோ டயட், கீடோ டயட், இண்டர்மிட்டண்ட் பாஸ்டிங் என பல்வேறு விதமான உணவு பழக்கங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை பயன்படுத்துவதால், என்னென்ன எதிர்மறையான பாதிப்புகளுடன் நோயாளிகள் வருகிறார்கள் என பட்டியிலிடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி லவ்ஸ்லி.

“சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் போகும், உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படக்கூடும், சுண்ணாம்பு சத்து குறைபாடு, புரத குறைபாடு ஏற்படலாம்” என்கிறார் அவர்.

“ஒரே ஒருவருக்கு எங்கோ நேர்ந்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகிறது. அது தனக்கும் ஏற்படலாம் என தேவையற்ற பதட்டம் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது” என்கிறார் அவர்.

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?
படக்குறிப்பு,

இணையத்தில் பார்த்து பல்வேறு உணவு பழக்கங்களை தாங்களே மேற்கொள்ளுதல் ஆபத்தாகக் கூடும் என ஊட்டச்சத்து நிபுணர் டாஃப்னி லவ்ஸ்லீ கூறுகிறார்.

கர்ப்பிணிகள் இணையத்தில் தகவல்களை தேடுவதால் என்ன பாதிப்பு?

மகப்பேறு காலத்தில், அதுவும் முதல் முறை கர்பிணிகளாக உள்ள இளம்பெண்களிடம் இணையத்தில் தகவல்களை தேடி படிக்கும் பழக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

“இணையத்தில் தகவல்களை தேடுவது இருமுனை வாள் தான்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜோஸ்பின் வில்சன். இணையதளத்தில் படித்துவிட்டு வரும் மகளிர் மகப்பேறு குறித்து தகவல்களை முன்பே அறிந்துகொண்டிருப்பது மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.

ஆனால் தகவல்களை தவறாக புரிந்துக் கொள்ளும் போது அதுவே சவாலாகி விடும் என்கிறார் அவர்.

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வெற்றிகரமான பிரசவங்கள் குறித்து கர்பிணிகள் படிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

“இரண்டு மாத கர்பிணிக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டால், கூகுள் உடனடியாக அதனை கருச்சிதைவு என கூறும். ஆனால் அது எல்லா நேரங்களிலும் உண்மையல்ல. தவறான தகவலை படித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, அதையும் சேர்த்து மருத்துவர் கையாளும் நிலை ஏற்படும்.

வீட்டில் ஒரு ஏசி மாட்ட வேண்டும் என்றால், அதை நீங்கள் செய்ய மாட்டீர்கள் அல்லவா? ஷாக் அடித்து விடலாம் என்ற பயம் இருக்கும் அல்லவா. அதே போல தான் மருத்துவமும். கர்ப்பிணி பெண்கள், வெற்றிகரமான பிரசவ அனுபவங்கள் பற்றி இணையத்தில் படித்து தெரிந்துக் கொள்ளலாம், மகப்பேறு குறித்த நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம்.

இணையத்தில் கிடைக்கும் தகவல்களை கொண்டு தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவே கூடாது” என்கிறார் மருத்துவர் ஜோஸ்வின் வில்சன்.

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?
படக்குறிப்பு,

கர்ப்பிணி பெண்கள் தேவையற்ற தகவல்களை இணையத்தில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜோஸ்பின் வில்சன்.

மருத்துவ தவல்களுக்கு ஏன் இணையத்தை மட்டும் நம்பக்கூடாது என்பதற்கு மற்றொரு உதாரணம் தருகிறார் மருத்துவர் அஷ்வின்.

“ஒருவருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், அவர் ‘Low Hb” என்று இணையத்தில் தேடுவார். அப்படி தேடினால் ரத்த புற்றுநோய் குறித்த கட்டுரை தான் முதலில் வரும். இணையத்தில் எந்த கட்டுரையை அதிகம் வாசிக்கிறார்களோ, எந்த குறியீட்டு வார்த்தைகள் (key words) அதிகம் தேடப்படுகிறதோ அவை தான் முதலில் வரும்” என்று விளக்குகிறார்.

இணையத்தில் மருத்துவம் சார்ந்த சரியான தகவல்களும் இருக்கும், போலியான தகவல்களும் இருக்கும் எனக் கூறும் மருத்துவர் அஷ்வின், சரியான இணையதளம் எது என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்கிறார்.

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் அனைவருக்கும் தேவையா?

மருத்துவர்களின் புதிய தலைவலியா  ‘கூகிள் டாக்டர்’ ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

“இணையத்தை பார்த்து தாங்களே ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனைகள் செய்து கொள்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். தற்போது அனைவரும் மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்துக் கொண்டு அதல் கிடைக்கும் முடிவுகளை வைத்து தங்களுக்கு என்ன நோய் இருக்கலாம் என தாங்களே முடிவு செய்துக் கொள்கின்றனர்.

முன்பெல்லாம், அந்த மருத்துவரிடம் செல்லாதே, நிறைய பரிசோதனைகள் செய்ய சொல்வார் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது அந்த பழியை கூகுள் எடுத்துக் கொண்டு விட்டது”என்கிறார் அவர்.

மேலும், “ப்ராக்டோ போன்ற இணையத்தில் நல்ல ரேட்டிங் கிடைக்க, ரூ.600 மருத்துவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி ரேட்டிங்க் வாங்கும் மருத்துவர்களை இணையத்தில் தேடி சென்றால், எப்படி சரியான தீர்வு கிடைக்கும்?

பொதுவாக இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகமாக இணையத்தை நம்புகிறார்கள். ஒரு வேளை 45 வயதுக்கு மேல் தான், உடல் ஆரோக்யத்தின் மற்றும் பணத்தின் மதிப்பு தெரிகிறது போல” என்று ஆதங்கப்பட்டார் அஸ்வின்.

மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகள்

மருத்துவர்களே சிலரே கூட இணையத்தில் வீடியோக்களை பதிவிடுவதை நாம் காண முடிகிறது. அதில் கூறும் தகவல்களை அப்படியே ஒருவருக்கு பொருத்தி பார்க்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதில் சிலர் தவறான வழிகாட்டுதல்களை தருவதற்கான வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் தெரிவிக்கிறார்.

“கொரோனா காலத்தில் கொரோனா எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என தவறான தகவலை பரப்பிய மருத்துவரை ஆறு மாத காலம் வரை சஸ்பெண்ட் செய்தோம்.

மற்றொரு பிரபல மருத்துவர், பத்ம விபூஷன் விருது பெற்றவர், தவறான தகவலை பகிர்ந்து கொண்டதற்காக, அவருக்கு மருத்துவ கவுன்சில் சார்பாக கடிதம் எழுதியிருந்தோம்” என்று மருத்துவ கவுன்சில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கிறார்.

ஆனால், மருத்துவ கவுன்சிலுக்கு பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களை கண்காணிக்க மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே, இணையத்தில் மற்ற இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறித்து, அதனை வாசிப்பவர் தான் எப்படி கையாள வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் செந்தில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *