இலங்கை: சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க மதம் மாறி 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் காதல் விவகாரத்தால் சிக்கிய கதை

இலங்கை: சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க மதம் மாறி 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் காதல் விவகாரத்தால் சிக்கிய கதை

சிறைத்தண்டனை

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் ஒரு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட இந்து நபர், அதிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறி, கடந்து எட்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்திருக்கிறார். சமீபத்தில், அவரது உறவினர் ஒருவரின் காதல் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் அவரை விசாரித்தபோது உண்மை வெளிவந்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திரைப்படங்களில் வருவதுபோன்ற திருப்பங்கள் நிறைந்த இச்சம்பவத்தில் என்ன நடந்தது?

இலங்கையில் ஒரு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகி – தனது மதத்தையும் பெயரையும் மாற்றிக் கொண்டு, எட்டு ஆண்டுகள் வேறொரு பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ஒரு நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல் நிலையத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நடராஜசிவம் என்பவர் (வயது 48) இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி, முஹம்மட் ஹுசைன் எனும் பெயரில் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை எனும் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், கடந்த எட்டு வருடங்களாக தலைமறைவாக இவர் வாழ்ந்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை குற்றம்

பட மூலாதாரம், Getty Images

என்ன நடந்தது?

மட்டக்களப்பு – திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை நடராஜசிவம் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு நாவற்கேணி பகுதியைச் சேர்ந்த தங்கராசா தர்ஷினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தர்ஷினியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நடராஜசிவம் தனது இரண்டாவது மனைவியின் குழந்தைகள் இருவரை அடித்து துன்புறுத்தியதாக 2009-ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் நடராஜசிவம் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் அவர் ஆஜராகவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். இறுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடராஜசிவம் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையிலேயே அவருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி நடராஜசிவம் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ஐந்து வருட சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் இரண்டு லட்சம் ரூபாவை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதேவேளை அந்த வழக்கில் அவருக்கு 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைச் செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

இலங்கை, இஸ்லாம், இந்து, குற்றம்
படக்குறிப்பு,

அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் நடராஜசிவம் ஆஜராகவில்லை

காணாமல் போன நடராஜசிவம்

ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றில் நடராஜசிவம் ஆஜராகாமையினால், அவருக்கு எதிரான பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார்.

இதனையடுத்து நடராஜசிவம் வசித்து வந்த முகவரியில் அவரை காவல்துறையினர் தேடிச்சென்றனர். ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை என்றும், குடும்பத்துடன் நடராஜசிவம் தலைமறைவாகியிருந்தார் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியில், தற்போது ‘யுத்திய’ எனும் பெயரில், இலங்கை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கையின்கீழ், நடராஜசிவம் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல் நிலையத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை தேடிக் கைது செய்வதே ‘யுத்திய’ நடவடிக்கையின் இலக்காகும்.

அவ்வகையில், காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மாதம் 11-ஆம் தேதி நடராஜசிவம் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அவர் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

நடராஜசிவத்தின் மனைவி சொல்வது என்ன?

இது தொடர்பாக நடராஜசிவத்தின் மனைவியிடம் பிபிசி தமிழ் பேசியது.

44 வயதாகும் அவர், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு, தர்ஷினி எனும் தனது பெயரை தற்போது ராஷிதா என மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது கணவருக்கு எதிரான வழக்கு, முடிவுக்கு வந்து விட்டதாக தாம் விளங்கிக் கொண்டமையினால்தான், வேறு ஊருக்கு குடும்பத்துடன் தாங்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறினார்.

தனது இரண்டாவது கணவர் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் நீதிமன்ற உத்தரவின்படி பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னிடம் குழந்தைகளை நீதிமன்றம் ஒப்படைத்தமையினால், வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக தாங்கள் நினைத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

”நடராஜசிவம் என்பவரை 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். அவர் எனது முதல் திருமணத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளையும் என்னுடன் வைத்து நன்றாகவே பராமரித்து வந்தார். இடையில் எனது முதல் கணவர், அவருக்கும் எனக்கும் பிறந்த பிள்ளைகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால்தான் எனது முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகள் இருவரை, எனது இரண்டாவது கணவர் துன்புறுத்தியதாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது,” என்கிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு தனது இரண்டாவது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டமையினை அடுத்து, அவர் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த 2012-ஆம் ஆண்டு அந்தப் பிள்ளைகள் இருவரையும் நீதிமன்றம் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் நடராஜசிவமுடைய மனைவி கூறுகின்றார்.

”குழந்தைகளை நீதிமன்றம் என்னிடம் ஒப்படைத்தமையினால் எனது கணவருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக நாங்கள் நினைத்துக் கொண்டோம். அதனையடுத்து எனது முதற்கணவர் இருக்கும் பிரதேசத்தில் வசிப்பதற்கு விருப்பம் இல்லாமையினால் நாங்கள் வேறு இடத்துக்குச் சென்றோம்,” என அவர் குறிப்பிட்டார்.

குற்றம்

பட மூலாதாரம், Getty Images

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

இதன்போது, ‘இஸ்லாம் மதத்துக்கு ஏன் திடீரென மாறினீர்கள்?’ என நடராஜசிவத்தின் மனைவியிடம் கேட்டோம்.

“அப்போது எனக்கு வாழ்வதற்குச் சொந்தமாக வீடு இல்லை. ஒரு காணித்துண்டு நிலம் கூட இருக்கவில்லை. எனது சொந்தங்கள் எனக்கு உதவவில்லை. அப்போது எனது முதல் கணவரும் நான் வசித்த பகுதியில்தான் இருந்தார். அந்த நிலை எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் குடும்பத்துடன் ஏறாவூர் பிரதேசத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறவுள்ளதாகச் சொன்னோம். எங்களின் கஷ்ட நிலையைக் கண்ட முஸ்லிம் காவல் உத்தியோகத்தர் ஒருவர் எங்களுக்கு அவரின் வீட்டில் மூன்று மாதங்கள் இருப்பதற்கு இடம் தந்தார். இஸ்லாத்துக்கு நாங்கள் மாறுவதற்கான சம்மதக் கடிதத்தை வழங்கினோம். காவல்துறை அறிக்கையினையும் பெற்றுக் கொடுத்தோம். அதன் பின்னர் ஏறாவூர் பள்ளிவாசலில் கடந்த 2012-ஆம் ஆண்டு நாங்கள் இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டோம்,” என்றார்.

தானும் தனது கணவரும், தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் அப்போது பிறந்திருந்த இரண்டு பிள்ளைகளுடனும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டதாக ராஷிதா கூறினார். தனது முதல் திருமணத்தில் பிறந்த ஆண் பிள்ளையொன்று அப்போது தனது அம்மாவிடம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ராஷிதாவுக்கு இரண்டாவது திருமணத்தில் ஒரு பெண், இரண்டு ஆண் என, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது, தனது இரண்டாவது திருமணத்தில் பிறந்த பிள்ளைகள்தான் தங்களுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகளில் பெண் பிள்ளை மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாகவும், ஆண் பிள்ளைகள் இருவரில் ஒருவர் இஸ்லாமியப் பெயருடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“பின்னர் ஏறாவூரிலிருந்து பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்தை சேனபுர எனும் பகுதிக்கு சென்றோம். எனது வற்புறுத்தலின் பேரில்தான் அங்கு நாங்கள் இடம்பெயர்ந்தோம்,” என்றார்.

“அங்கே ஒருவர் அன்பளிப்பாக ஒரு துண்டு நிலத்தை வழங்கினார். அதில் வீடு ஒன்றை நிர்மாணிக்கத் தொடங்கினோம். ஆனால் எனது கணவரின கூலித் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, வீட்டைக் கட்டி பூரணப்படுத்த எங்களால் முடியவில்லை. அதனால் அங்குள்ள மசூதி நிர்வாகம் எங்கள் வீட்டுக்கு கூரை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். அரச நிவாரணங்கள் பெறுவதற்காக எங்கள் பெயர்களையும் அங்கு பதிந்துள்ளோம். எனது கணவர் பல மாவட்டங்கள் தாண்டி வேலைக்குச் சென்றுவருவார். நாங்கள் தலைமறைவாகியிருந்தால், இவ்வாறு எங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி இருக்க மாட்டோம்,” என ராஷிதா குறிப்பிட்டார்.

இலங்கை, இஸ்லாம், இந்து, குற்றம்
படக்குறிப்பு,

நடராஜசிவம் தனது இரண்டாவது மனைவியின் குழந்தைகள் இருவரை அடித்து துன்புறுத்தியதாக 2009-ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்

காதலால் வெளிவந்த குற்றம்

இந்தப் பின்னணியில் தனது அக்காவின் மகன் ஒருவர், அவரின் காதலியை குடும்பத்தினருக்குத் தெரியாமல் திருமணம் செய்யும் பொருட்டு அழைத்துக் கொண்டு, வெலிக்கந்தையிலுள்ள தங்கள் வீட்டுக்கு அண்மையில் வந்ததாக ராஷிதா கூறினார்.

”எனது அக்காவின் மகன், யுவதியொருவரை அழைத்து வந்து, எங்கள் வீட்டில் தங்கியிருந்தமை எனது கணவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அக்காவின் மகனையும் அவருடன் வந்திருந்த அவரின் காதலியையும் ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்,” என்றார்.

”அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியமை தொடர்பாக, காவல் நிலையத்தில் அவர்கள் குடும்பத்தினர் முறையிட்டிருந்ததால், எனது அக்கா மகனை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதன்போது எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து காவலர்கள் எங்களை விசாரித்தனர். அப்போதுதான் எனது கணவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை பற்றி காவலர்கள் கூறினார்கள். எனது கணவருக்கு சிறைததண்டனை விதிக்கப்பட்டதை அப்படித்தான் அறிந்து கொண்டோம்,” என, ராஷிதா விவரித்தார்.

இதனையடுத்து தனது கணவரை இம்மாதம் 11-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்ததாகவும், அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ராஷிதா கூறினார்.

இந்த நிலையில் தனது கணவரின் வழக்கு நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு சட்டத்தரணியொருவரை அணுகியுள்ளதாக ராஷிதா கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *