இங்கிலாந்தின் புதிய சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தற்போது இந்திய விசாவைப் பெற்றுள்ளார். அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வந்து இங்கிலாந்து அணியுடன் இணைவார்.
எனினும், அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அபுதாபியில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தபோது, சோயப் பஷீர் மட்டும் அபுதாபியில் இருந்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று, பஷீர் இங்கிலாந்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, புதன்கிழமை அவருக்கு இந்திய விசா கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
யார் இந்த ஷோயப் பஷீர்?
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளரான ஷோயப் பஷீர், இங்கிலாந்தின் சர்ரேவில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தார்.
அவர் இதுவரை ஆறு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாட திடீரென தேர்வு செய்யப்பட்டார். இதில் வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது முதல் சர்வதேச போட்டியை இந்தியாவில் விளையாடுவார்.
சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்ததற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
“இந்த விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவ்வாரியம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. “சோயபிற்கு விசா கிடைத்துவிட்டது, அவர் இந்த வார இறுதியில் இந்தியா சென்று அணியில் சேருவார்”.
எனினும், வியாழக்கிழமை ஐதராபாத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பஷீர் விளையாடும் வாய்ப்பு முடிந்துவிட்டது.
இந்தியா, இங்கிலாந்து அரசுகள் கூறுவது என்ன?
பஷீருக்கு லண்டனில் விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்திய விசா வழங்குவது தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் இந்த வழக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
“இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவில் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தனது அரசாங்கம் எதிர்பார்க்கிறது” என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், செவ்வாய்கிழமையன்று கூறியிருந்தார்.
மேலும், “இதுகுறித்த விவரங்களைப் பற்றி பேச முடியாது. ஆனால் இந்திய தூதரகத்திடம் இதுபோன்ற பிரச்சினைகளை பல முறை எழுப்பியுள்ளோம்” என்று இங்கிலாந்து செய்தி தொடர்பாளர் கூறினார்.
அந்த அறிக்கையில், “பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா வழங்குவதில் இந்தியா எப்போதும் நேர்மையை கடைபிடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல் டெஸ்டை புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா?
கடந்த புதன்கிழமை, பஷீருக்கு விசா கிடைக்கவில்லை என்ற செய்தி வந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “பஷீரின் பங்களிப்பு இல்லாமல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட வாய்ப்பில்லை” என்றும் “போட்டி புறக்கணிக்கப்படும்” என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் யோசனையை அணிக்கு முன்வைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அது சர்ச்சையாக மாறியது.
“ஒரு தலைவராக, ஒரு கேப்டனாக, குழு உறுப்பினர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது, நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள், நான் அவருக்காக (பஷீர்) வருத்தப்படுகிறேன்”, என்று தெரிவித்தார் பென் ஸ்டோக்ஸ்.
அதே நேரத்தில், பஷீருக்கு விசா கிடைக்காதது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் வருத்தம் தெரிவித்தார்.
அவர், “பஷீருக்காக நான் வருந்துகிறேன். அவர் இங்கிலாந்து அணியுடன் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார். இது யாருக்கும் எளிதானது அல்ல” என்றார்.
“துரதிர்ஷ்டவசமாக இது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க நான் விசா அலுவலகம் இல்லை. அவர் விரைவில் நம் நாட்டிற்கு வந்து, கிரிக்கெட் விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்றார் ரோகித் சர்மா.
பாகிஸ்தானிய வீரர்களுக்கு விசாவில் சிக்கல்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நெடுங்காலமாக இருக்கும் பதற்றம் விளையாட்டுத் துறையையும் பாதித்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர், இந்தியா செல்வதில் சிரமப்படுவது இது முதல் முறையல்ல.
ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தார். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டி சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் விசா பெறுவதில் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்தார்கள்.
டெஸ்ட் போட்டிகளுக்கான பிபிசியின் சிறப்பு வர்ணனையாளரான ஆதிப் நவாஸும் உலகக்கோப்பைக்காக இந்திய விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரால் இந்தியா செல்ல முடியவில்லை.
இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது பாகிஸ்தானை வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு அவருக்கு விசா கிடைத்ததால், அவர் உலகக்கோப்பை போட்டியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்