சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரித் தலைவரான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட தமிழ்நாடு ஆளுநர் மறுத்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும் மூத்த இடதுசாரி தலைவருமான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருக்கும் நிலையில், அது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வியாழக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், என். சங்கரய்யா தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு – சிண்டிகேட் – கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் (D. Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, என்று கூறப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கை மேலும், “இதற்குப் பின்னர் செப்டம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை -செனட்- கூட்டத்திலும் இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்று கூறுகிறது.
நவம்பர் 2ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கக் கோரிக்கை
பொன்முடி, தன் அறிக்கையில், “இந்த கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி Iஇல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. கௌரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று கூறியிருக்கிறார்.
“எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் – வேந்தருக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார்,” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
நவம்பர் 2ஆம் தேதியன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்குமாறு ஆளுநர் – வேந்தர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்றும் தனது அறிக்கையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“விடுதலை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என். சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள்.
அவரால்தான் பட்டத்திற்கு பெருமை என்பதை உணராத கூட்டம்தான், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்பது இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது,” என அவருடைய ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.
மதுரை பல்கலைக்கழக செனட்டில் என்ன நடந்தது?
“மதுரை காமராஜர் பல்கலைக்கழக சட்டப்படி, செனட் தான் உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டது. அதில் முடிவெடுத்துவிட்டால், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை,” என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத செனட் உறுப்பினர் ஒருவர்.
“இந்தத் தீர்மானம் சிண்டிகேட், செனட் ஆகிய இரண்டிலுமே நிறைவேற்றப்பட்டுவிட்டது. செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது 35 உறுப்பினர்கள் இருந்தார்கள். யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக சட்டத்தின்படி செனட் தான் உச்சகட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை,” என்கிறார் அவர்.
மேலும், “எல்லா பட்டங்களிலும் துணை வேந்தரே கையெழுத்திடுவார். ஆனால், கௌரவ முனைவர் பட்டங்களில் கூடுதல் மதிப்பு சேர்க்கும் விதமாக, வேந்தராக உள்ள ஆளுநர் கையெழுத்திடுவார் என்ற விதி வைக்கப்பட்டுள்ளது. அந்த விதியை வைத்துக் கையெழுத்திட மறுக்கிறார் ஆளுநர். இதுபோலச் செய்வது எல்லாவற்றையும் சீர்குலைக்கும்,” என்கிறார் அந்த செனட் உறுப்பினர்.
அந்தக் கோப்பில் கையெழுத்தைப் பெற மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை வரை முயன்றும் நடக்காத நிலையில்தான் உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிக்கை வெளியானதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
யார் இந்த என். சங்கரய்யா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட மாணவர் தலைவர்களில் ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தவர் சங்கரய்யா. பிறகு இவரது குடும்பம் மதுரைக்குக் குடிபெயர்ந்தது. மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெறச் சேர்ந்தார்.
இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், 17 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1941இல் இறுதித் தேர்வு நெருங்கிய போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சங்கரய்யா உள்ளிட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். தனது பி.ஏ. தேர்வை எழுத முடியவில்லை. அதோடு அவருடைய படிப்பு முடிவுக்கு வந்தது. 1942இல் பல மாணவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், சங்கரய்யா மட்டும் விடுவிக்கப்படவில்லை. தேசத்துரோகம், கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபாடு போன்றவற்றைக் காரணம் காட்டி அவருடைய தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புக்காக பலமுறை சிறை சென்றுள்ளார் சங்கரய்யா. மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவிய தகை சால் தமிழர் விருது முதல் முறையாக என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்