ஒன்றரை கோடி ரூபாய் சம்பளத்துடன் ஸ்காட்லாந்து தீவுகளில் மருத்துவர், ஆசிரியர் வேலை – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஒன்றரை கோடி ரூபாய் சம்பளத்துடன் ஸ்காட்லாந்து தீவுகளில் மருத்துவர், ஆசிரியர் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஸ்காட்லாந்து தீவுகளில் வேலை

பட மூலாதாரம், Getty Images

இந்திய மதிப்பில் வருடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் (ஒன்றரை லட்சம் பவுண்டுகள்) சம்பளத்துடன் ஸ்காட்லாந்து நாட்டின் அழகிய தீவுகளில் வேலை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹெப்ரைட்ஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா தீவுகளில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்கு இந்த சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தத் தீவுகளுக்கு அருகில் உள்ள ரம் என்ற மற்றொரு தீவில், தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கு இந்திய மதிப்பில் வருடத்திற்கு 71 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து தீவுகளில் வேலை

பட மூலாதாரம், BENBECULA MEDICAL PRACTICE

படக்குறிப்பு,

தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்கள் பென்பெகுலா தீவின் மருத்துவமனையில் வேலை செய்ய வேண்டும்

இவ்வளவு சம்பளம் ஏன்?

ஸ்காட்லாந்தின் தொலைதூர கிராமங்கள், தீவுகளில் புதிய மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க அதிக ஊதியம் வழங்கி மக்களைக் கவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை, இவை வெறும் வேலைகள் அல்ல. ஸ்காட்லாந்தின் தீவுகளில் புதிய மக்களை குடியமர்த்துவதற்கும், தங்களுக்கான அடிப்படை சேவைகளை பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

“இங்கு வாழ யாராவது குடும்பத்துடன் வருவார்கள் என்று நாங்கள் தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்று மேற்கு தீவுகளின் தேசிய சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாகி கோர்டன் ஜேமிசன் கூறுகிறார்.

“இங்கு வரும் தொழில்முறை வல்லுநர்களுக்கு மட்டுமல்லது அவர்களின் இணையர்களுக்கும் சிறப்பான வேலை வாய்ப்புகளை வழங்க முயற்சித்து வருகிறோம்,” என்றார் ஜேமிசன்.

தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற ஒரு தொலைதூர தீவிற்கு வந்து, இங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழவும், வேலை செய்யவும் எல்லோரும் விரும்புவதில்லை தான். குறிப்பாக மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா போன்ற இடங்கள் உலகின் வேறு பகுதியில் இருப்பது போன்ற உணர்வைத் தரலாம்,” என்கிறார்.

பென்பெகுலா தீவுக்குத் தேவையான அடிப்படை மருத்துவச் சேவைகளை கருத்தில் கொண்டு, இந்தத் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிய விரும்பும் ஊழியர்களை ஊக்குவிக்க தேசிய சுகாதார அமைப்பு 40% அதிக சம்பளத்தை வழங்குகிறது.

கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்கான ஆர்வமும் உத்வேகமும் கொண்ட மருத்துவர்களை இங்கு வருமாறு தேசிய சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இங்கு பணிபுரிய வரும் மருத்துவர்கள், ஹெப்ரைட்ஸின் ஆறு தீவுகளில் வசிக்கும் 4,700 மக்களுக்கு மருத்துவச் சேவைகளை செய்ய வேண்டும்.

ஸ்காட்லாந்து தீவுகளில் வேலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அர்த்னமுர்சன் தீபகற்பத்தில் உள்ள கின்லோச் தொடக்கப் பள்ளியின் 15 குழந்தைகளுக்கு கற்பிக்க ஒரு ஆசிரியர் தேவை

குறைவான மக்கள்தொகை கொண்ட அழகிய தீவுகள்

நல்ல சம்பளத்துடன் ஸ்காட்லாந்தின் அழகான பகுதிகளில் பணிபுரிவதற்கான அட்டகாசமான வாய்ப்பு இது என்று அந்நாட்டுச் சுகாதார அமைப்பு கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தத் தீவுகளுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்வதற்கான செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.

இதுதவிர ‘கோல்டன் ஹலோ’ என்ற பெயரில் சிறப்பு போனஸாக 10,000 யூரோக்கள் வழங்கப்படுகின்றன (இந்திய மதிப்பில் இது 10.5 லட்சம் ரூபாய்).

“அதே நேரத்தில் நினைத்தவுடன் எல்லோருக்கும் இந்த தீவுகளில் வேலை எளிதாக கிடைத்து விடாது. இங்கு வேலை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆளுமையும், திறமையும், பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். எனவே தான் இந்த ஊக்கத்தொகையை அளிக்கிறோம்,” என்று பிபிசி வானொலியின் குட் மார்னிங் ஸ்காட்லாந்து நிகழ்ச்சியில் ஜேமிசன் கூறினார்.

மேலும், “உலகெங்கிலும் உள்ள பலர் இதுபோன்ற அழகான தொலைதூர தீவுகளில் மருத்துவத் துறையில் பணிபுரிய ஆர்வமாக இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

தீவுகளில் மருத்துவ சேவைகளை வழங்க தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைத் தேர்ந்தெடுப்பதில் பல சவால்கள் இருப்பதாகவும், அதே நேரத்தில் அதிக சம்பளம் கிடைப்பதால் இங்கு பணியாற்ற வருபவர்கள் குடும்பத்துடன் இங்கேயே தங்கி விடுவார்கள் என தான் நம்புவதாகவும் ஜேமிசன் கூறுகிறார்.

“இங்கு வருபவர்கள் தொடர்ந்து நிலையான சேவைகளை வழங்கி, இங்குள்ள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார் அவர்.

ரம் தீவில் உள்ள கின்லாக் கிராமத்தில் 40 பேர் மட்டுமே வாழ்கின்றனர். ரம் தீவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஐந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள்.

இங்கு பணிபுரிய விரும்பும் தலைமை ஆசிரியருக்கு 65 லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் தரப்படும் என இத்தீவின் மலையக பேரவை கூறுகிறது. இது தவிர, தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிவோருக்கு கூடுதலாக வழங்கப்படும் 5,500 பவுண்டுகளும் (இந்திய மதிப்பில் 5.79 லட்சம்) தரப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த வேலைக்கு சிலர் முன்வந்துள்ளதாகவும் பேரவை தெரிவித்துள்ளது. இருப்பினும், நேர்காணல் செயல்முறைகள் இன்னும் முடியவில்லை என்று கூறியது.

ஸ்காட்லாந்து தீவுகளில் வேலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரம் தீவில் சிவப்பு மான்கள் அதிகளவில் உள்ளன

ஆசிரியர்களுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

பிரதான நிலத்திலிருந்து ரம் தீவை அடைய ஒன்றரை மணிநேரம் படகு சவாரி செய்ய வேண்டும். இங்குள்ள சில நீர் மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தத் தீவில் சிவப்பு மான்கள் அதிகளவில் உள்ளன. தீவின் பெரும்பாலான நிலங்கள் ஸ்காட்டிஷ் அரசாங்க நிறுவனமான நேச்சர்ஸ்காட்டிற்கு (NatureScot) சொந்தமானது. நான்கு வருடங்களுக்கு முன்னர் கின்லோச்சில் புதிதாக நான்கு வீடுகள் கட்டப்பட்டன.

வேலைக்காக வழங்கப்படும் வெகுமதிகள் இளைஞர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்த தீவுகளை நோக்கி வரவைக்கும் எனவும், இதனால் தீவு மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றும் தாங்கள் நம்புவதாக கூறுகிறது ரம் சமூக அறக்கட்டளை.

அர்த்னமுர்சன் தீபகற்பத்தில் உள்ள கின்லோச் தொடக்கப் பள்ளியின் 15 குழந்தைகளுக்கு கற்பிக்க ஒரு ஆசிரியர் தேவை, சம்பளம் இந்திய மதிப்பில் 55.88 லட்சம் அளிக்கப்படும் என இந்த அறக்கட்டளை விளம்பரம் செய்துள்ளது.

ஷெட்லாண்ட் தீவில் இருந்து 16 மைல் தொலைவில் உள்ள மற்றொரு தீவின் ஆரம்பப் பள்ளிக்கு பணிக்கு வரும் ஆசிரியருக்கு 65 லட்சம் சம்பளமும் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடும் வழங்கப்படும் என 2022-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தீவில் 28 பேர் வசிக்கின்றனர்.

பள்ளி அமைந்துள்ள பகுதி, தீவின் மக்கள் தொகை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு அதிக சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக மலையகப் பேரவை கூறுகிறது.

“தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புடன், இடம்பெயர்வதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறோம். வீட்டு வாடகை மற்றும் பயணச் செலவுகளும் அதில் அடங்கும்,” என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அரசு விதிகளுக்கு உட்பட்டு, தலைமை ஆசிரியர் பணிக்கு தொலைதூர தீவுகளில் வேலை செய்வதற்கான சிறப்பு படித்தொகையையும் வழங்குகிறோம். மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு முழுமையான தலைமைத்துவ திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இதேபோன்ற பயிற்சியை மற்ற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் வழங்குவோம்,” என்று மலையக பேரவையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *