அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்ததையடுத்து, வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சில சங்கங்களும், பேருந்துகள் இயங்கும் என சில சங்கங்களும் அறிவித்தன. என்ன நடக்கிறது?
ஆயுத பூஜையை ஒட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இதற்காக இயங்கிய ஆம்னி பேருந்துகள் மிக அதிக கட்டணங்களை வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் தமிழ்நாடு முழுவதும் 120 ஆம்னி பேருந்தகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு ஒட்டுமொத்தமாக 37 லட்ச ரூபாய் அளவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆம்னி பேருந்துகள் இயங்குமா?
இந்த நடவடிக்கையைக் கண்டித்து அக்டோபர் 24ஆம் தேதி மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில், “ஆம்னி பேருந்துகளுக்கு என கட்டணங்கள் ஏதும் நிர்ணயிக்கப்படாத நிலையில், சங்கங்களே கட்டணம் நிர்யணம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பரில் போக்குவரத்துத் துறை அமைச்சரிடமும் ஆணையரிடமும் அதற்கு ஒப்புதல் பெற்று, அந்தக் கட்டணத்திலேயே பேருந்துகளை இயக்கி வந்தோம்.
இந்த நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகளில் சோதனை செய்து, அதிக கட்டணம் வசூலித்ததாகக் கூறி 120க்கும் மேற்பட்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்தும் இனிமேல் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என வலியுறுத்தியும் 24ஆம் தேதி மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” எனக் கூறப்பட்டிருந்தது.
24ஆம் தேதி மட்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சுமார் ஒரு லட்சம் பேர் இந்தப் பேருந்துகளில் பதிவு செய்திருப்பதாக அந்தச் சங்கம் தெரிவித்திருக்கிறது.
விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து திரும்பக் காத்திருந்தவர்களுக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஆனால், திடீர் திருப்பமாக, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் மாறன், “தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும். எங்கள் சங்கத்தில்தான் பெரும் எண்ணிக்கையிலான பேருந்துகள் இருக்கின்றன. அவை அனைத்தும் இயங்கும்” என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு – அரசு அளித்த உறுதிமொழி என்ன?
இதற்கிடையில், வேலை நிறுத்தம் அறிவித்திருந்த தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்புடன் தமிழ்நாடு மாநில போக்குவரத்து துறையின் இணை ஆணையர் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது சிறை பிடிக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து அவற்றை விடுவிக்க அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இனி சோதனை செய்யும்போது பயணிகளை பாதிவழியில் இறக்கிவிடும் வகையில் சோதனை நடத்தாமல் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தங்களுடைய வாகனங்கள் ஏதாவது வரியைச் செலுத்தாமல் இருந்தால், அதைச் செலுத்திவிடுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ஆம்னி பேருந்துகளை வெளி மாநிலங்களில் பதிவது ஏன்?
“தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு என கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருப்பதுதான் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். இதனால், எல்லா சங்கங்களும் கூடிப் பேசி ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் பேருந்துகளை இயக்குவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சரிடமும் போக்குவரத்துத் துறை ஆணையரிடமும் பட்டியலை சமர்ப்பித்தோம். அந்தக் கட்டணத்தின் அடிப்படையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக 120 பேருந்துகளை முடக்கியிருப்பது ஏற்க முடியாதது. இதுபோல இதற்கு முன்பாக நடந்ததே இல்லை. அதனால்தான் வேலை நிறுத்தம் அறிவிக்க வேண்டியதாயிற்று” என்கிறார் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன்.
அதேபோல, வெளிமாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட பேருந்துகள், நாகாலாந்தில் பதிவுசெய்யப்பட்ட பேருந்துகள் தமிழக நகரங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்றன. இது அரசுக்கு வரி வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
“இதற்குக் காரணம், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் பதிவுசெய்ய விதிகள் இல்லை. அதனால்தான் வேறு மாநிலங்களில் பதிவுசெய்து இங்கே இயக்குகிறோம். அங்கே பதிவுசெய்தாலும், தமிழ்நாட்டிற்குச் செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்திவிடுகிறோம். இப்போது தமிழ்நாட்டிலேயே இதற்கான விதிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. ஆகவே, பதிவுகள் தற்போது மாற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்” என்கிறார் அன்பழகன்.
ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் எப்போது?
கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று உரிமையாளர்கள் கூறினாலும், புக்கிங் ஆப்களிலேயே அதீத கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, தீபாவளிக்கு கோயம்புத்தூருக்கும் மதுரைக்கும் இடையில் இயங்கும் ஒரு பேருந்திற்கு 5,000 ரூபாய் கட்டணமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். நாகமுத்து, எம்.வி. முரளிதரன் அடங்கிய அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
“ஆனால், இந்தக் குழுவுக்கு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது. அந்தக் குழு கட்டணம் நிர்ணயம் செய்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது” என்கிறார் அன்பழகன்.
“வெளிமாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் ஓட்டுவதே பிரச்னை”
ஆனால், வெளி மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட வண்டிகள் தமிழ்நாட்டில் ஓடுவதுதான் மிகப் பெரிய பிரச்சனை என்கிறார் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாறன்.
“நாகாலாந்திலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் ரூ. 25 ஆயிரம் செலுத்தி வண்டிகளை பதிவுசெய்து கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பதிவுசெய்தவர்கள் வருடத்திற்கு ஆறு லட்சம் ரூபாய் வரியாக செலுத்த வேண்டும். இது எப்படி நியாயமாக இருக்க முடியும்? அதேபோல, தமிழ்நாட்டில் பதிவுசெய்தவர்கள் வரி செலுத்திவிட்டார்களா என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். ஆனால், வெளி மாநில வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தால்தான் அவர்கள் தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய சாலை வரிகளைச் செலுத்திவிட்டார்களா என்பது தெரியும். அதனால்தான் அந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன” என்கிறார் மாறன்.
தமிழ்நாட்டில் ஓடும் சுமார் 1,800 ஆம்னி பேருந்துகளில் சுமார் 15 சதவீதம் இதுபோல வெளி மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்டவை என்கிறார் அவர். “இந்த சூழலில் வெளி மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட பேருந்துகளும் இங்கே பதிவுசெய்யப்பட்ட பேருந்துகளும் ஒரே கட்டணத்தை எப்படி வசூலிக்க முடியும்?” என்கிறார் அவர்.
ஆனால், விழாக்காலம் நெருங்கும்போது ஆம்னி பேருந்துகள் அதீத கட்டணத்தை வசூலிப்பது ஏன்? “எல்லாச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விழாக் காலங்களில் சிறிதளவு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மைதான். ஆனால், அதற்காக அதீத கட்டணங்கள் வசூலிப்பதை ஏற்க முடியாது” என்கிறார் அவர்.
இப்போதைக்கு பிரச்சனை ஓய்ந்திருக்கிறது. ஆனால், வெளி மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட பேருந்துகள் விவகாரம், கட்டண நிர்ணயம் ஆகியவற்றுக்கு ஒரு முழுமையான தீர்வைக் காணாமல் இந்த விவகாரம் முடிவுக்கு வரப் போவதில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்