சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்றிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சனிக்கிழமை நாடு திரும்பினார். அப்போது அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் அவர் தனது நாடு சிறியதாக இருக்கலாம், ஆனால் “அவர் எங்களை கொடுமைப்படுத்த உரிமம் பெற்றுள்ளார் என்று அர்த்தமல்ல,” என்று கூறினார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் நேரத்தில் அவரிடம் இருந்து இப்படியொரு கருத்து வந்துள்ளது. சமீபத்தில், முய்சு அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்து சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டனர்.
கடந்த நவம்பரில் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் முய்சு முதன்முறையாக சீனாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.
சீனாவில் இருந்து திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் கடலுக்குள் இருக்கும் சிறிய தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடு. 9 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலம் உள்ளது. அந்த வகையில் அதிக பரப்பளவில் பொருளாதார மண்டலம் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று.” என்றார்.
மேலும், “இந்தக் கடல் குறிப்பிட்ட நாட்டிற்குச் சொந்தமானது அல்ல. இந்த இந்தியப் பெருங்கடல், அதைச் சுற்றிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது,” என்றார். அவரது கருத்து இந்தியாவைப் பற்றியதாகத் தான் இருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.
மாலத்தீவின் ‘சன் ஆன்லைன் போர்ட்டலில்’ வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முய்சு, “நாங்கள் யாரோ ஒருவரின் கொல்லைப்புறத்தில் இருக்கும் நாடு அல்ல;, நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாடு,” என்று கூறினார்.
முய்சுவின் சீனப் பயணத்தின் போது என்ன நடந்தது?
சீனப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை முய்சு சந்தித்தார். அதன் பிறகு இரு நாடுகளும் சுமார் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
சீன உயர்மட்டத் தலைவர்களுடன் முய்சுவின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் “இரு தரப்பும் ஒருவருக்கொருவர் நலன்களைப் பாதுகாக்க ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஒப்புக்கொண்டன,” என்று கூறப்பட்டது.
“மாலத்தீவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய கவுரவத்தை சீனா உறுதியாக ஆதரிக்கிறது. மாலத்தீவின் தேசிய நலன்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் மாலத்தீவை ஆதரிக்கிறது என்பதுடன் அதற்கு உரிய மரியாதையை அளிக்கிறது.”
மேலும், எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், “மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் எந்த நாடும் தலையிடுவதை இரு நாடுகளும் அனுமதிக்காது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும், அது இந்தியாவைத் தான் குறிக்கும் என நம்பப்படுகிறது.
மாலத்தீவுக்கான சீனத் தூதர் வாங் லிக்சின், அதிபர் ஷி ஜின்பிங்கின் இந்த முயற்சியுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், மாலத்தீவு மேலும் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு சீனாவிடம் இருந்து அதிக பொருளாதார உதவிகளைப் பெறும் என்று கூறியுள்ளார்.
முய்சுவின் சீனப் பயணத்தின் போது வாங் லிக்சின் உடன் சென்றார். சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான வலுவான உறவுகளுக்கு மூன்று முக்கிய காரணிகள் இருப்பதாக அவர் கூறினார்.
இது குறித்து அவர் பேசியபோது, “முதலாவது, பரஸ்பர அரசியல் நம்பிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; இரண்டாவது, மாலத்தீவு மக்களுக்கான கூடுதல் திட்டங்களை பரிசீலிக்க சீன அதிபர் ஷியின் முன்முயற்சி மற்றும் மாலத்தீவு அதிபர் முய்சுவின் வளர்ச்சி உத்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்; மூன்றாவது, கூட்டுக் கொள்கையை கடைபிடிக்கும் விரிவான ஆலோசனையை மேற்கொண்டு அதனடிப்படையில் எதையும் கட்டமைப்பது மற்றும் பொதுவான நலன்கள் தான் அவை,” என்றார்.
சீனா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே கையெழுத்தான உடன்படிக்கைகள்
மாலேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாலத்தீவுக்கு 130 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்க சீனா ஒப்புக்கொண்டதாக முய்சு கூறினார். இந்த உதவியின் பெரும்பகுதி தலைநகரில் உள்ள சாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இந்த பயணத்தின் போது, மாலத்தீவு நாட்டுக்குச் சொந்தமான மாலத்தீவு தேசிய விமான நிறுவனம் மூலம் சீனாவில் இருந்து உள்நாட்டு விமானங்களை இயக்கத் தொடங்குவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
மேலும், மாலத்தீவில் உள்ள ஹுல்ஹுமாலேயில் ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இதற்காக சீனா 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும்.
இது தவிர விளிமலேயில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்கவும் சீனா மானியம் அளிக்கும்.
மாலேயில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட இந்திரா காந்தி நினைவு மருத்துவமனை (IGMH), நாட்டிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டது. பின்னர் 2018 இல், மீண்டும் இந்தியாவின் உதவியுடன், இந்த மருத்துவமனையில் நவீன சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணம்
இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகள் மோசமாக இருந்த நேரத்தில் முய்சுவின் சீனப் பயணம் இடம்பெற்றது. மாலத்தீவில் பிரதமர் மோதியை அவதூறாகப் பேசியதற்காக 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதே நேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மாலத்தீவின் தேர்தல் கண்காணிப்பு அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஆளும் மாலத்தீவின் முற்போக்குக் கட்சி (பிபிஎம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) ஆகியவை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் இந்தியாவை எதிர்த்தன என்றும் கூறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது தவறான தகவல்களை பரப்பவும் இந்த கட்சிகள் முயற்சித்தன.
இந்தத் தேர்தலில் பிபிஎம் வேட்பாளராக முய்சு போட்டியிட்டார். அப்போது சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையில் கட்சி இருந்தது. அப்துல்லா யாமீன் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
சமீபத்தில், மாலத்தீவின் அமைச்சர் மரியம் ஷியூனா மற்றும் பிற தலைவர்கள் பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அரசு, இதனால் உருவான பிரச்னைகளை ஈடுசெய்யும் முயற்சியைத் தொடங்கியது. முதலில் அவர் அந்த அமைச்சரின் கருத்துக்கு வெளியில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். பின்னர் ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்தார்.
அந்த அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் தங்கள் மாலத்தீவு பயணங்களை ரத்து செய்துவிட்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினர்.
பல பிரபலங்களும் இந்த சர்ச்சையில் நுழைந்து லட்சத்தீவு பற்றி எழுதினர். இந்தியாவில் பார்க்க லட்சத்தீவு போன்ற இடம் இருக்கும் போது, மாலத்தீவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் எழுதினர்.
தாயகத்தில் மக்கள் தந்த அதிர்ச்சி
மாலே நகரில் மேயர் பதவிக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. அதிபர் ஆவதற்கு முன்பு, முய்சு மாலே மேயராக இருந்தார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த பதவி காலியாக இருந்தது.
இந்த மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) வேட்பாளர் ஆதம் அசீம் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
மாலத்தீவு ‘சன் ஆன்லைன்’ இணையதளத்தின்படி, 41 வாக்குப் பெட்டிகள் எண்ணப்பட்டதில், ஆதம் அசீம் 5,303 வாக்குகளையும், மக்கள் தேசிய காங்கிரஸ் வேட்பாளர் 3,301 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
எம்டிபி கட்சித் தலைமை இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கருதப்படும் முகமது இப்ராகிம் சோலியின் கைகளில் உள்ளது. அதிபர் தேர்தலில் அவரது கட்சி முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸிடம் தோற்றது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்