கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில், குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள் எரிக்கப்பட்டு சாம்பலாயின. அந்த வடுக்கள் முழுதும் ஆறவில்லை எனினும், அங்குள்ள மக்கள் சமீபத்தில் ஒரு திருமண விழாவைக் கொண்டாட ஒன்று கூடினர். தற்போது அங்கு என்ன நிலவரம் என்பதை அறிய பிபிசி குஜராத்தி சேவை அங்கு நேரடியாகச் சென்றது.
குல்பர்க் சொசைட்டி முழுவதும், ஒரு காலத்தில் மக்களால் சூழப்பட்டிருந்தது. இப்போது மழை நாளில் கூட வெறிச்சோடி காணப்படுகிறது.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள் 22 ஆண்டுகளுக்கு முன் எரிந்து சாம்பலாயின. ஒரு சில வீடுகளைத் தவிர, பெரும்பாலான வீடுகள் தீயில் கருகின. அந்த வீடுகள் இன்னும் அதே நிலையில் உள்ளன.
சில வீடுகளில் செடி கொடிகள் மண்டிக்கிடக்கின்றன, அதே நேரத்தில் காய்ந்த விஷச்செடிகளின் கொடிகளும் ஆங்காங்க காணப்படுகின்றன. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகும், தீயினால் கருகிப்போன வீடுகளின் கூரைகள், சுவர்கள் இன்னும் கருமையாகவே உள்ளன.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் உயிர்ப்புடன் இருந்த சமுதாயம், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் போல் காட்சியளிக்கிறது. தற்போது சுற்றுவட்டார சமுதாய மக்கள் தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்துகின்றனர்.
இருப்பினும், இந்த அடக்கமான சமுதாயம் இந்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி, மேளம் அடித்து, முகங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
சமூகத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விழாவை
அங்கு வாழும் 19 வயதான மிஸ்பா திருமண விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு குல்பர்க் சொசைட்டியில் ஒரு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
2002-க்குப் பிறகு குல்பர்க் சொசைட்டியை விட்டு வெளியேறிய மக்கள் விழாவைக் கொண்டாடுவதற்காக அங்கு மீண்டும் கூடினர்.
“நான் எண்பது வயதைத் தாண்டிவிட்டேன்,” என்று அக்குடும்பத்தின் மூத்தவரான ஏய் ஜெதுன்பானோ பிபிசியிடம் புன்னகையுடன் தனது கையில் மருதாணியைக் காட்டினார்.
“இத்தனை வருஷத்திற்கு அப்பறம் வீட்டில் விழா கொண்டாடுவதால், பாட்டிகளின் கை சும்மா இருக்கக் கூடாது என்று என் பேத்திகள் சொன்னார்கள். வீட்டு மருமகள்கள் ஆசையாக கையில் மருதாணி வைத்துவிட்டார்கள், நானும் மருதாணி வைத்துக்கொண்டேன். என் கைகளில் எங்கள் வீட்டுப் பெண்கள் 22 வருடங்களுக்குப் பிறகு மருதாணியை வைத்தனர்,” என்றார்.
2002-ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்திற்குப் பிறகு ஆமதாபாத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில், சமன்புரா பகுதியில் உள்ள இந்த குல்பர்க் சமுதாயத்தின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீட்டில் இருந்த மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் மிஸ்பா மன்சூரியின் குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர்.
பெண் வீட்டினர் என்ன சொல்கின்றனர்?
பிபிசியிடம் பேசிய மிஸ்பாவின் தந்தை ரஃபிக் மன்சூரி, குல்பர்க் சொசைட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே மண்டபம் மற்றும் இதர கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
“குல்பர்க் சொசைட்டியில் கடைசியாக 2001-இல் திருமணம் நடந்தது. அதன் பிறகு மதக் கலவரங்கள் ஏற்பட்டு இவ்விடம் சீரழிந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இந்த இடிபாடுகளில் சிக்கிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சி காணப்படுகிறது. எனது மகளின் விழாவில் சுமார் 500 பேர் பங்கேற்றனர்,” என்றார் ரஃபிக் மன்சூரி.
“பால் அல்வா, தயிர், இறைச்சி, ரொட்டி போன்றவை பரிமாறப்பட்டன. என் மகளின் திருமணத்திற்கு பிறகு, எங்கள் சமுதாயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் கொண்டாடப்பட வேண்டும்,” என்றார் அவர்.
குல்பர்க் சமூகத்தில் இப்போது, ரஃபிக்பாய் மன்சூரி போன்ற ஒரு குடும்பம் மட்டுமே வாழ்கிறது. 2002-இல் சமுதாயத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றனர்.
இதுகுறித்து ஜெதுன்பானோ கூறுகையில், “கலவரத்தில் எங்கள் குடும்பத்தில் இறந்த 19 பேரை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம். அவர்களின் ஆன்மா சாந்தியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்காக குல்பர்க் சொசைட்டியில் எங்கள் மகளின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்,” என்கிறார்.
மிஸ்பாவின் மாமா அஸ்லம்பாய் மன்சூரி ஜெதுன்பானோவின் கருத்தை ஆமோதிக்கிறார். “நாங்கள் விரும்பினால் பெரிய மண்டபத்தில் நிகழ்வை நடத்தியிருக்கலாம், ஆனால் எங்கள் நினைவுகள் இந்த சமூகத்துடன் இணைந்திருப்பதால் நாங்கள் நிகழ்வை இங்கே கொண்டாடினோம். சமன்புராவைச் சேர்ந்த எங்கள் சில இந்துக் குடும்பங்களும் எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாங்கள் அவர்களுக்கு உணவளித்தோம். அவர்கள் திருமணத்திற்கு பரிசளித்தனர்,” என்றார்.
‘2002-க்கு முன் குல்பர்க் பசுமையாக இருந்தது’
மிஸ்பாவின் திருமணம் மத்திய பிரதேச மாநிலம் பத்வானியில் நடைபெற்றது. இது மார்ச் 6 அன்று நிறைவடைந்தது. அவரது திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குல்பர்க் சொசைட்டியில் நடைபெற்றன.
மகளின் திருமணத்தையொட்டி, மன்சூரி குடும்பத்தினர் வீட்டிற்கு வர்ணம் பூசியுள்ளனர், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒன்றிரண்டு பாழடைந்த வீடுகளுடன், வெளியிலும் வெள்ளையடித்து கொஞ்சம் வெளிச்சம் காட்டியுள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், மும்பையிலிருந்து அகமதாபாத் வந்த குலாப்பனோ இஸ்லாம் சோலங்கி , குல்பர்க் சொசைட்டியில் சில நாட்கள் தங்கினார்.
பிபிசியிடம் பேசிய அவர், “மிஸ்பா எனது மருமகனின் மகள். 2002-க்கு முன்பு, இந்த சுற்றுப்புறம் பறவைக் கூடு போல் பசுமையாக இருந்தது. இங்கு வந்தவுடன் வெளியேற மனமில்லை. இந்த நிகழ்வில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் கைகளில் மருதாணி வைத்து, இந்த சுற்றுப்புறத்தில் மண்டபம் கட்டினோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அஸ்லம்பாய், “குல்பர்க் சொசைட்டியை விட்டு வெளியேறி ஆமதாபாத்தில் உள்ள ஜுஹாபுரா, பாபுநகர், சர்கேஜ், வட்வா, ஷா ஆலம், நரோடா பாட்டியா போன்ற பகுதிகளில் வசிக்கச் சென்றவர்களை நாங்கள் அழைத்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சமூகத்தில் ஒரு நல்ல நிகழ்வைக் கண்டு அவர்கள் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்,” என்றார்.
மணப்பெண் தந்தை என்ன சொன்னார்?
குல்பர்க் சொசைட்டியில் மன்சூரி குடும்பத்திற்கு இரண்டு வீடுகள் உள்ளன. இவரது குடும்பம் 2 மற்றும் 13 ஆம் எண் வீட்டில் வசிக்கிறது.
“எனது மனைவி யாஸ்மின்பா, எனது ஐந்து மாத குழந்தை, தம்பி, தாய், மற்றும் மூத்த சகோதரரின் குடும்பத்தினர் உயிருடன் எரிக்கப்பட்டனர். எங்கள் இருவர் வீடுகளும் தகர்க்கப்பட்டன,” என்கிறார் ரஃபிக்பாய்.
அதன் பிறகு, ரஃபிக்பாய் தஸ்னிமை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டாவது திருமணத்தில் மிஸ்பா என்ற மகள் உட்பட மூன்று குழந்தைகள் இருந்தனர்.
யாஸ்மினின் சகோதரர் முகமது இர்பான் பிபிசியிடம் கூறுகையில், “ரபீக்பாயின் இரண்டாவது மனைவியான எனது சகோதரியின் மரணத்திற்குப் பிறகு தஸ்னீமும் எனது சகோதரிதான்,” என்றார்.
முகமது இர்பானின் மனைவி ஃபிரோசாபா பிபிசியிடம் கூறுகையில், மன்சூரி குடும்பத்துடனான தங்களின் உறவு மிகவும் அன்பானது என்றார்.
“நாங்களும் ரஃபிக்பாயின் இரண்டாவது திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்பாடு செய்தோம். மிஸ்பாவை எங்கள் மகளாக ஏற்றுக்கொண்டோம். மாமேராவில், மணமக்களுக்கு ஆடைகள், நகைகள், சூட்கேஸ்கள், பூட்ஸ் போன்றவற்றைக் கொடுத்து எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்,” என்றார்.
‘இந்துக்களுக்கும் எங்கள் துயரத்தில் பங்கு உள்ளது’
பிப்ரவரி 28, 2002 அன்று குல்பர்க் சொசைட்டி மீதான கும்பல் தாக்குதலில் மன்சூரி குடும்பத்தின் வீடும் கொழுத்தப்பட்டது. அவர்களும் வீட்டை விட்டு வெளியேறினர்.
சம்பவம் நடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் அங்கு வாழ வந்தார். அவருக்கு அரசு உதவி கிடைத்தது. அதன் மூலம் கட்டிடத்தை சரி செய்தார்.
மன்சூரி குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. வாரத்திற்கு இரண்டு முறை சிஐஎஸ்எப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்திரவாதமாக கையொப்பம் பெற அவரிடம் வருவார்கள். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
“இப்போது எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. 2002-இல் ஒருசில மதவெறியர்களால் எங்கள் சமுதாய மக்கள் எரிக்கப்பட்டனர். இந்து-முஸ்லிம் கலவரத்தில் பெரும்பாலானோர் எரிக்கப்பட்டனர். அவர்களுக்கும் எங்கள் துயரத்தில் பங்கு உள்ளது,” என்கிறார் ரஃபிக்பாய்.
“சமூகத்தை விட்டு வெளியேறும்போது அவள் மிகவும் அழுதாள், நாங்களும் அப்படித்தான்,” என்கிறார் மிஸ்பாவின் மாமா அஸ்லம்பாய்.
22 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது?
27 பிப்ரவரி 2002 அன்று, கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸின் பெட்டியில் தீப்பிடித்து 59 பயணிகள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு குஜராத்தின் பல பகுதிகளில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.
அகமதாபாத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள குல்பர்க் சொசைட்டி பிப்ரவரி 28, 2002 அன்று ஒரு கும்பலால் தாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்சன் ஜாஃப்ரி உட்பட 69 பேர் உயிரிழந்தனர்.
கும்பல் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏராளமான முஸ்லிம்கள் அஹ்சன் ஜாஃப்ரியின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அந்தக் கும்பல் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்து மக்களை உயிருடன் எரித்தது.
அஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, தனது கணவர் காவல்துறை மற்றும் அப்போதைய முதல்வர் நரேந்திர மோதி உட்பட அனைவரையும் தொடர்பு கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டினார். ஆனால் அவர்களுக்கு யாரும் உதவவில்லை. இந்த விவகாரத்தில், கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோர் விடுதலையாகினர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்