இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவுகள், கணக்குகளை நீக்கினோம் – ஒப்புக்கொண்ட எலோன் மஸ்கின் எக்ஸ் தளம்

இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவுகள், கணக்குகளை நீக்கினோம் - ஒப்புக்கொண்ட எலோன் மஸ்கின் எக்ஸ் தளம்

இந்திய விவசாயிகளின் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யக் கோரி பிப்ரவரி 13 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்

சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்கியதை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்திய அரசாங்கம் அவர்களுக்கு சில ‘நிர்வாக உத்தரவுகளை’ அனுப்பிய பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எக்ஸ் தளம் கூறியுள்ளது.

அரசின் இந்த உத்தரவுகளில் சிறை தண்டனை உட்பட சில சாத்தியமான தண்டனைகளும் குறிப்பிடப்பட்டிருந்தது என எக்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது. மேலும், “இந்த நடவடிக்கைகளுடன் நாங்கள் உடன்படவில்லை,” என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

எக்ஸ் நிறுவனத்தின் இந்த விளக்கம் அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கான @GlobalAffairsஇல் பகிரப்பட்டது. பல சமூக ஆர்வலர்கள் எக்ஸ் தளத்திலிருந்து தங்களது பதிவுகள் அகற்றப்பட்டதாக முன்னர் புகார் அளித்திருந்தனர்.

‘பல கணக்குகள் முடக்கப்பட்டன’

இந்திய விவசாயிகளின் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

“இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்த செய்திகளை அளிக்கும் நிருபர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் முக்கிய விவசாய சங்கங்களின் ‘பல செல்வாக்குமிக்க எக்ஸ் கணக்குகள்’ முடக்கப்பட்டன,” என எக்ஸ் பயனரும் இந்தியப் பத்திரிக்கையாளருமான முகமது ஜுபைர் திங்களன்று கூறினார்.

செய்தி நிறுவனமான பி.டி.ஐ அறிக்கையின்படி, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் குறைந்தது 177 கணக்குகள் மற்றும் இணைய இணைப்புகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு இந்தக் கணக்குகள் மீண்டும் வழக்கம் போல இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஆர்வலர் ஹன்ஸ்ராஜ் மீனாவின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ஹன்ஸ்ராஜ் மீனா பிபிசியிடம் பேசுகையில், இது கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும்.

ஹன்ஸ்ராஜ் மீனாவின் கூறியதாவது, “எனது ட்ரைபல் ஆர்மி (Tribal Army) அமைப்பின் சமூக ஊடக கணக்கு இந்தியாவில் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.”

இது இந்திய அரசின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடக தளமான எக்ஸ், ஹன்ஸ்ராஜ் மீனாவிடம் தெரிவித்துள்ளது.

மீனா மேலும் கூறும்போது, ​​“எனது பதிவுகள் எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை. நான் இப்போது தான் எனது கருத்துக்களை தெரிவித்துள்ளேன். அரசாங்கமும் புதிய யோசனைகளுக்கு அஞ்சுகிறது. எங்களின் குரல் மக்களைச் சென்றடைவதை அரசாங்கம் விரும்பவில்லை, எனவே எந்த உறுதியான காரணமும் இல்லாமல் எங்கள் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன,” என்றார்.

ஹன்ஸ்ராஜ் மீனாவின் அமைப்பான ட்ரைபல் ஆர்மி அமைப்பு இந்தியாவில் உள்ள பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பிரச்னைகளுக்கு குரல் எழுப்புகிறது.

“எங்கள் குரல் ஏற்கனவே பலவீனமாக உள்ளது, எங்கள் பிரச்னைகள் முக்கிய ஊடகங்களில் விவாதிக்கப்படவில்லை. நாங்கள் சமூக ஊடகங்கள் மூலம் தான் குரல் எழுப்பி வந்தோம், இப்போது நாங்கள் அங்கிருந்தும் விரட்டப்பட்டுள்ளோம்,” என்றார் மீனா.

இந்திய விவசாயிகளின் போராட்டம்
படக்குறிப்பு,

சமூக ஆர்வலர் ஹன்ஸ்ராஜ் மீனா, பத்திரிகையாளர் மந்தீப் புனியா, பத்திரிகையாளர் சந்தீப் சிங்

விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து எழுதி வரும் பத்திரிகையாளர் மந்தீப் புனியாவின் தனிப்பட்ட கணக்குகள் மற்றும் அவரது செய்தி இணையதளமான காவ்ன் சவேராவின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

“கணக்கை முடக்குவதற்கு முன், எனக்கு எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை அல்லது எங்கள் கணக்கு ஏன் முடக்கப்படுகிறது என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் விவசாயிகளின் போராட்டக் களத்தில் இருந்து செய்திகளை அளித்தோம், எங்கள் குரலை ஒடுக்க எங்கள் கணக்குகள் முடக்கப்பட்டன.

ஷம்பு எல்லையில் இருக்கும் மந்தீப் புனியா, “நான் ஒரு பத்திரிகையாளர், விவசாயிகள் இயக்கத்தை குறித்த செய்திகளை அளித்துக் கொண்டிருந்தேன், ஆனால் அரசாங்கம் எங்கள் தளங்களை மூடிவிட்டது. இப்போது நாங்கள் உருவாக்கும் செய்திக் காணொளிகளை எங்கும் வெளியிட முடியவில்லை. இங்கு நடக்கும் சம்பவங்களை எங்களால் நேரலையில் தெரிவிக்க முடியவில்லை. எங்களின் வேலையை அரசாங்கம் பறித்து விட்டது,” என்றார்.

பஞ்சாபின் சுதந்திர பத்திரிகையாளர் சந்தீப் சிங்கும் இதையே கூறுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், “ட்விட்டரில் (இப்போது எக்ஸ்) எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று, பிரதமர் மோடி எனது கணக்கை தடை செய்து எனக்கு பரிசு வழங்கினார். கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் என்னால் காலத்தில் இருந்து செய்தியளிக்க முடியவில்லை,” என்றார்.

சந்தீப் சிங்கின் கணக்கை எக்ஸ் முடக்குவது இது முதல் முறையல்ல. முன்னதாக, பஞ்சாபில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டபோதும் அவரது கணக்கு முடக்கப்பட்டது.

அவர் கூறுகிறார், “2021-ஆம் ஆண்டில், எனது ட்விட்டர் (இப்போது எக்ஸ்) கணக்கில் மாதாந்திர பார்வைகள் 4 கோடிக்கும் அதிகமாக இருந்தன, அவை இப்போது சில ஆயிரங்களாகக் குறைந்துள்ளன. கணக்கை முடக்குவதற்கு முன், என் பதிவுகள் மக்களுக்கு சென்றடைவது குறைக்கப்பட்டது. தேடினாலும் எனது கணக்கை மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே இதன் பொருள்.”

சந்தீப் மேலும் கூறும்போது, ​​“சமூக ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்தின் சைரனாக மாறிவிட்டன. இந்த நிறுவனங்கள் முன்னர் பேச்சுரிமைக்கு குரல் எழுப்பின, ஆனால் இப்போது அனைத்தும் சரிந்துவிட்டது. ட்விட்டரில் (இப்போது எக்ஸ்) விவசாயிகளைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்புபவர்கள், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்வைப்பதால் அவர்களின் கணக்குகள் நன்றாக இயங்குகின்றன,” என்றார்.

எக்ஸ் நிறுவனம் கூறியது என்ன?

இந்திய விவசாயிகளின் போராட்டம்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

எலோன் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸின் உரிமையாளர் (முன்னர் ட்விட்டர்)

எக்ஸ் நிறுவனம் அதன் விளக்கத்தில், குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகள் இந்தியாவில் மட்டும் ‘உத்தரவுகளுக்கு இணங்க’ நிறுத்தி வைக்கப்படுவதாகக் கூறியது.

எவ்வாறாயினும், தாங்கள் தளம் அரசாங்க நடவடிக்கையுடன் உடன்படவில்லை என்றும், “கருத்துச் சுதந்திரம் இந்த பதிவுகளுக்கும் பொருந்த வேண்டும்,” என்றும் எக்ஸ் நிறுவனம் கூறியது.

எந்த நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடாமல், அரசாங்கத்தின் ‘தடுப்பு உத்தரவுகளை’ சட்டப்பூர்வமாக எதிர்த்ததாக அந்நிறுவனம் கூறியது.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, ஜனநாயக நாட்டில் எதிர்ப்புக் குரல்களை அடக்க அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி, சமூக ஊடக பக்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதற்காக அரசாங்கத்தை விமர்சித்துள்ளது. முக்கியமான சமூக ஊடக பதிவுகளையும் கணக்குகளையும் முடக்கியதற்காக பல எக்ஸ் பயனர்களும் அரசாங்கத்தை விமர்சித்துள்ளன.

எக்ஸ் அறிக்கைக்கோ அல்லது பிபிசியின் பதில் கோரிக்கைக்கோ அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை.

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள்

இந்திய விவசாயிகளின் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பல விவசாய சங்கங்கள் பிப்ரவரி 13 முதல் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் இதர கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராடும் விவசாயிகள் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு பேரணியாக செல்ல முயன்றனர்.

ஆனால், அவர்களை தடுக்கும் வகையில், நகர எல்லையில் முள்கம்பிகள் மற்றும் சிமெண்ட் கட்டைகள் கொண்டு அதிகாரிகள் பலத்த தடுப்புகளை அமைத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆளும் ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், விவசாயிகள் டெல்லிக்கு வருவதைத் தடுக்க ஏராளமான காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் விவசாயிகளின் வாக்குவங்கி முக்கியமானது என்றும், அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், தில்லி சாலைகளில் டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களில் விவசாயிகள் அரசுக்கு எதிராக ஊர்வலம் போகும் காட்சியை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

2020-ஆம் ஆண்டில், விவசாயிகள் இதேபோன்ற போராட்டத்தைத் தொடங்கி பல மாதங்களாக தில்லியின் எல்லைகளில் தங்கியிருந்தனர். அது போன்று மீண்டும் நடைபெறுவதை அரசாங்கம் விரும்பவில்லை.

போராட்டத்தை ஒடுக்க தொழிற்சங்கங்களுடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. புதன்கிழமை அன்று, ஹரியாணா காவல்துறையுடன் நடந்த மோதலில் போது 22 வயது போராட்டக்காரர் உயிரிழந்தார். பஞ்சாப் மாநில அதிகாரிகள் பிபிசியிடம் பேசுகையில், ‘மரணத்திற்கான காரணம் தலையில் ஏற்பட்ட குண்டுக் காயம்’ என்று கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

இந்திய விவசாயிகளின் போராட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பிபிசியிடம் பேசுகையில், “கடந்த முறை நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார்.

மேலும் பேசிய தலேவால், “அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் வழங்கப்படும் என்று கூறியிருந்தது,” என்றார்.

2021ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் எஸ்.யூ.வி வாகனம் மோதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

“சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை” என்கிறார் தலேவால்.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *