இந்தியாவின் தலைநகரான டெல்லி, அடுத்த இரண்டு நாட்களுக்கு இதுவரை பார்த்திடாத ஒன்றை பார்க்க இருக்கிறது. நாளை(புதன்கிழமை) முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் இந்தியாவில் உள்ள கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தின் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர்.
அதேவேளையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கேரளாவின் அனைத்து அமைச்சர்கள், இடது ஜனநாயக முன்னணியின் எம்.பி.க்கள் இணைந்து அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க கோரி போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. ஆளும் திமுக,வினர் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில், மூன்று மாநிலங்களின் கோரிக்கைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.
சமூக ஊடகங்களில், ‘என் வரி என் உரிமை’ என்ற ஹேஷ்டேக்கில் பிரச்சாரம் நடக்கிறது. அதனை, கர்நாடக அரசு எடுத்துக் கொண்டு, செய்தித்தாள்களில் ‘என் வரி என் உரிமை’ என முழுப் பக்க விளம்பரம் செய்து பிரசாரம் செய்துள்ளது.
நாட்டில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும் மாநிலங்களிடம் இருந்து எடுத்து, நிதி ரீதியாகப் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது என இந்த மாநிலங்கள் கூறவில்லை. மாறாக, மத்திய அரசின் நிதி ஆதாரங்களை மாநிலங்களுக்கு மாற்றும்போது, சிறந்த மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்ற வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார்கள்.
“மத்திய அரசின் பட்ஜெட் அளவு அதிகரிக்கும் போது, அதிகாரப் பகிர்வு மற்றும் மாநிலங்களுக்கான மானியங்களும் அதிகரிக்க வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை. வட இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
மத்திய அரசுக்கு வழங்கிய 100 ரூபாயில் கர்நாடகாவுக்கு ரூ.12 அல்லது ரூ.13 மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. தங்க முட்டையைப் பெற, கோழியைக் கொல்கிறது மத்திய அரசு. ஆனால், அப்படி செய்யக் கூடாது,” என, சித்தராமையா சுருக்கமாக கூறினார்.
வட மாநிலங்களை விட தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் நிதி ரீதியாகவும் மனித வள குறியீடுகளிலும் சிறப்பாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
“இந்தப் போராட்டம் அரசியல் அல்ல. இது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான போட்டி அல்ல. இது மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பது.” என்றார் சித்தராமையா.
நிதிப் பங்கீட்டில் என்ன பிரச்னை?
நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான விதிமுறைகள் தங்களுக்கு போதுமான நிதி கிடைக்காத வகையில் 14 மற்றும் 15 வது நிதிக் கமிஷன்களில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்கள் கருதுகின்றன.
வருமான வரி, கார்பரேட் வரி, ஜிஎஸ்டி, டீசல், பெட்ரோல், செஸ் மற்றும் கூடுதல் கட்டணம்(surcharge) போன்ற வரிகளை மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக வசூலிக்கும் தொகை அதிகமாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் தொகை மிகவும் குறைவு.
இரண்டு நிதிக் கமிஷன்களுக்கு இடையில், மத்திய அரசிடம் இருந்து கர்நாடகா பெறும் நிதியின் பங்கு 4.71 சதவீதத்திலிருந்து 3.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலத்தில், கர்நாடக மாநிலம் முறையே 42 சதவீத வரி மற்றும் 41 சதவீத வரிகளை வழங்கியுள்ளது.
மத்திய அரசுக்கு அதிக வரி (4,34,000 ரூபாய்) செலுத்துவதில் நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. நஷ்டத்தைப் பொறுத்தவரை, இந்த நிதியாண்டில் 62,098 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக கர்நாடகா மேற்கோள் காட்டியுள்ளது. 2017-18ல் கர்நாடகாவுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1,87,000 கோடி.
கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் திங்கள்கிழமை சட்டப் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அப்போது அவர்,“மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரியில், 10 வது நிதிக்குழு காலத்தில் கேரளாவின் பங்கு 3.87 சதவீதமாக இருந்தது. இது 14வது நிதிக்குழுவில் 2.5 சதவீதமாகவும், 15வது நிதிக்குழுவில் 1.925 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதிக தனிநபர் வருமானம் மற்றும் மக்களின் தொகை வளர்ச்சியை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக கேரள மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள்,” என அவர் சட்டமன்றத்தில் பேசினார்.
அந்தந்த மாநிலங்கள் வசூலிக்கும் ஒவ்வொரு ரூ.65க்கும் மத்திய அரசு ரூ.35 வழங்குவதாக பாலகோபால் கூறினார். ஆனால் கேரளாவின் சொந்த வரி வசூலான ரூ.79க்கு எதிராக மத்திய அரசு ரூ.21 மட்டுமே வழங்குகிறது.
“அது ரூ.100ல் ரூ.21 மட்டுமே மத்திய அரசின் பங்களிப்பு. உ.பி (உத்தரப்பிரதேசம்) மத்திய அரசிடமிருந்து ரூ.100க்கு ரூ.46 பெறுகிறது. பீகாரில் ரூ.100க்கு ரூ.70 கிடைக்கிறது. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களை விட சிறந்த ஆதாரம் தேவையா?’’ என அவர் சட்டமன்றத்தில் கேட்டார்.
நிதிப் பங்கீடு மட்டும்தான் பிரச்னையா?
கர்நாடகாவில் உள்ள 234 தாலுகாக்களில் 130 தாலுகாக்களில் கடந்த ஆண்டு வறட்சி நிலவுவதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக் குழு ஒன்று ஆய்வு செய்து அறிக்கை சர்ப்பித்தது. அந்த அறிக்கையின் மீது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார். ஆனால், அந்தக் குழு எந்தக் கூட்டத்தையும் நடத்தவே இல்லை.
“நாங்கள் ரூ 35,000 கோடி நஷ்டமடைந்திருந்ததால், 2023 செப்டம்பரில் ரூ 17, 901 கோடி கேட்டிருந்தோம்.ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை,” என்றார் சித்தராமையா.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது, தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசும் இழப்பீட்டுக் காலத்தை நீட்டிக்க மறுத்து வருகிறது.
சுருக்கமாக, மாநில அரசின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களை திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சி முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கும் மாநிலங்களின் திறனை முடக்க வேண்டும் என அவர்கள் நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதை ஒத்த கருத்துள்ள முற்போக்கு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்,”என்றார்.
15 வது நிதிக்குழு சில மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, ரூ 5,495 கோடி ரூபாயை மானியாக வழங்க பரிந்துரைத்ததாக சித்தராமையா சுட்டிக்காட்டினார். “இது மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை நிராகரித்துவிட்டார்,” என்றார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், “யார் விருப்பத்திற்கு ஏற்றதுபோல வரிப் பகிர்வு முறையை மாற்ற முடியாது,” என்று கூறினார். கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு, அந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிதி ஆயோக் சிஇஓ வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய சித்தராமையா, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மட்டுப்படுத்த நினைத்த பிரதமர் மோதியின் முயற்சிகள் குறித்தும் பேசினார். “சிறப்பு மானியமாக ரூ 5,495 கோடி வழங்க வேண்டும் என நிதிக்குழு பரிந்துரைத்தும், அதனை நிராகரித்துள்ளனர்.
குறைந்து வரும் நிதி உதவி, மேல் பத்ரா பாசனத்திட்டத்திற்கான ரூ 5,300 கோடி நிதி உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இவை அனைத்தும், நிதி அயோக்கின் சுயாட்சி குறித்த கேள்விகளை எழுப்புகிறது,” என சித்தராமையா சுட்டிக்காட்டினார்.
பிரச்னை எங்கு இருக்கிறது?
நிதி ஆயோக் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்கும் இரண்டு கொள்கைகளில் பிரச்னை உள்ளது. மத்தியில் இருந்து மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒரு கூறு. கிடைமட்ட அதிகாரப் பகிர்வும் உள்ளது. பணக்கார மாநிலங்கள் ஏழை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சூத்திரம் தொலைவு சூத்திரம்(Distance Formula) என்று அழைக்கப்படுகிறது.
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடீஸ்(NIAS) கல்லூரியின் சமூக அறிவியல் துறை பேராசிியர் நரேந்தர் பானி இப்பிரச்னை குறித்து பிபிசியிடம் பேசினார்.
அப்போது அவர்,“இந்த முறை தொடர வேண்டுமா இல்லையா என்பதுதான் கேள்வி. அதற்கு சித்தராமையா சவால் விடுகிறார். அவர் அனைத்து தென் மாநிலங்கள் என்று சொல்கிறார். இதில், குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கான வேலையும் மற்றொரு அம்சம்.
நீங்கள் அவர்களை குறிவைத்தால், அவர்களின் நிலை இன்னும் மோசமடையும். நிதி பகர்விற்கு நிதி ஆயோக் ஒரு சூத்திரத்தை உருவாக்கியுள்ளது. இப்போது, இந்தப் பிரச்னைக்கு பிறகு, நிதி ஆயோக் ஒரு புதிய சூத்திரத்தை உருவாக்குமா இல்லையா என்பது தான் பிரச்னை,” என்றார் நரேந்தர்.
எவ்வாறாகினும், நிதிக்குழு உறுப்பினர்களை மத்திய அரசு தான் தேர்ந்தெடுக்கிறது, என்றார் நரேந்தர் பானி.
திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் டி.நாராயணா பிபிசி ஹிந்தியிடம் பேசினார்.
அப்போது அவர்,“நிதி ஆணையங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்த விஷயங்களில் ஒன்று இடப்பெயர்வு. அதன் சொந்தக் கொள்கையின்படி, புலம்பெயர்ந்தோருக்கு ஒப்பிடத்தக்க சேவைகளை வழங்குவதற்கு மாநிலங்களை தயார்படுத்துகிறார்கள் என்றால், அதற்கான பணத்தை புலம்பெயர்ந்து செல்லும் மாநிலத்திற்கு அவர்கள் கொடுக்க வேண்டாமா?’’ எனக் கேட்டார்.,
கடந்த வாரம் அமைக்கப்பட்ட 16வது நிதிக் கமிஷன் எதிர்கொள்ள இருக்கும் “கடுமையான பிரச்சனையை” அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“கிட்டத்தட்ட 15 முதல் 16 ஆண்டுகளாக எங்களிடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இல்லை. இடப்பெயர்வு மிக அதிகமாக இருந்த காலகட்டமும் இதுவே. தென் மாநிலங்களில், தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, நிதி ஆயோக் இதை ஏற்க மறுத்துவிட்டது, மத்திய அரசும் இதனை ஏற்கவில்லை,” என்றார் நாராயணன்.
தொடர்ந்து பேசிய அவர்,“புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணக்கிடாமல், ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் தனது சொந்த மக்களுக்கு மத்திய அரசு எந்த நல்லதையும் செய்யவில்லை என்பதை தென்மாநிலங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். போராட்டம் நடத்துவதை விட, இப்படி முன்னெடுப்பதே சிறந்ததாக இருக்கும். நிதி ஆயோக்கின் முடிவுகள் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்,”’
“புலம்பெயர்ந்தோர் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்பதை மாநில அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மாநிலங்கள் அவர்களுக்கு வீடுகளை கட்ட வேண்டும், மத்திய அரசை அதற்கான செலவை ஏற்கச் சொல்ல வேண்டும், “ என்றார் முனைவர் நாராயணா.
முனைவர் நாராயணா தற்போது பெங்களூரு எம்.எஸ்.ராமையா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் தலைவராக உள்ளார்.
தென் மாநிலங்களின் கோபம் என்ன?
ஆனால் கேரளா மக்களுக்கு வீடுகள் கட்டத் தொடங்கியபோது, அது ஒரு விசித்திரமான பிரச்னையை எதிர்கொண்டது. வீடற்றவர்களுக்கு கேரள அரசு கட்டிக்கொடுக்கும் வீடுகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (பிஎம்ஏஒய்) `பிராண்டிங் லோகோக்களை’ ஒட்டுமாறு கேரளாவிடம் கேட்டது.
“வீடுகளில் பிஎம்ஏஒய் லோகோ மற்றும் பிரதமரின் புகைப்படம் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த நாங்கள் மறுத்துவிட்டோம், ஏனெனில் இது குடிமக்கள் மனித கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 21 வது பிரிவை மீறுகிறது,” என கேரள உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
“நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கான முழுத் தொகைக்கும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பதுதான் விஷயம். கடந்த ஏழு ஆண்டுகளில், எங்கள் அரசு 17,103 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, மேலும் மத்திய அரசு 2,083 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது. தெளிவாக, மத்திய அரசின் பங்கு மாநிலத்தின் பங்கை விட மிகக் குறைவாக இருப்பதை காணலாம்’’ என்றார் ராஜேஷ்.
லோகோ ஒட்ட வேண்டும் என்று கூறிய உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, ராஜேஷ், நவம்பர் 2023 இல் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
“அந்த வீடுகளில் வேறு ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தை எழுதவில்லை. ஆனால், அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை,” என்றார் ராஜேஷ்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்