IND vs AUS: ஆமதாபாத் ரசிகர்களை மௌனமாக்க கம்மின்ஸ் தீட்டிய துல்லியத் திட்டம் என்ன?

IND vs AUS: ஆமதாபாத் ரசிகர்களை மௌனமாக்க கம்மின்ஸ் தீட்டிய துல்லியத் திட்டம் என்ன?

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

2023-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் கணிக்கவில்லை. மாறாக இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்குப்பின் முன்னாள் சாம்பியன் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியாவை கணக்கில் சேர்த்தனர்.

ஏனென்றால், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாகத் தென் ஆப்பிரிக்கா பயணம் சென்று அந்நாட்டு அணியிடம் ஆஸ்திரேலியா மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்தியாவுக்குப் பயணம் செய்து இந்திய அணியிடம் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் தோற்றது.

உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதும் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியிடமும், தென் ஆப்பிரிக்காவிடமும் தோற்றதால், ஆஸ்திரேலிய அணியின் மீதான நம்பகத்தன்மையும், முன்னாள் சாம்பியன் என்ற பெருமிதப் பார்வையும் ரசிகர்கள் மத்தியில் குறைந்தது.

அது மட்டுமல்லாமல் மேக்ஸ்வெல், மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது, பல வீரர்கள் ஃபார்மின்றி இருந்தது ஆகியவை அவ்வளவுதான் ஆஸ்திரேலியா என்று ரசிகர்களைப் பேசவைத்தது.

அப்படிப்பட்ட அணி, இப்போது எப்படி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

மறுபிரவேசம் செய்த ஆஸ்திரேலியா

நடந்து முடிந்திருக்கும் உலகக் கோப்பைத் தொடரின் 3-வது போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி பெறத் துவங்கிய வெற்றிகள், தவறுகளைத் திருத்திக் கொண்டு ஆடிய ஆட்டங்கள் ஆகியவை மெல்ல ஆஸ்திரேலியாவின் பக்கம் கவனத்தைத் திருப்பச் செய்தன. அதிலும் டிராவிஸ் ஹெட் அணிக்குள் திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.

லீக் சுற்றுகளில்கூட ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தைப் பிடிக்கப் போகிறதா அல்லது கடைசி இடத்தைத் தக்கவைக்கப் போகிறதா என்றெல்லாம் கிண்டலாகப் பேசப்பட்டு, 3-வது இடத்தைத்தான் பிடித்தது.

ஆனால், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சாய்த்து ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியபோதுதான் ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அணி மீதான அச்சம் அதிகரித்தது.

நிழலாடிய 2015-இன் நினைவுகள்

கடந்த 2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் போதும், இதேபோன்ற நிலையைத்தான் ஆஸ்திரேலியா சந்தித்தது. ஆனால், அரையிறுதிக்குப்பின் ஆஸ்திரேலியாவின் முகம் மாறியது, தங்களை சாம்பியனாக உயர்த்திக்கொள்ள ஒவ்வொரு வீரரும் முழுமையாக அர்ப்பணிப்புடன் விளையாடியது, நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது நினைவைவிட்டு அகலவில்லை. ஆதலால், இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக ஆஸ்திரேலியா அணி மாறும் என்பதில் சந்தேமில்லாமல் இருந்தது.

அது மட்டுமல்லாமல் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்பதால், இறுதிப் போட்டியை எவ்வாறு அணுக வேண்டும், எவ்வாறு எதிரணிக்கு வியூகங்களை வகுக்க வேண்டும், ஒவ்வொரு வீரருக்குமான தனிப்பட்ட திட்டங்கள் என்ன என்பதை ஆஸ்திரேலிய அணி நன்றாக அறிந்திருக்கும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இறுதி ஆட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் செயல்பட்டவிதம், அனுபவம் மிக்கவரின் செயல்பாடு போல இருந்தது

கட்டம் கட்டிய கம்மின்ஸ்

அதற்கு ஏற்றார்போல் டாஸ் வென்றவுடன் கேப்டன் கம்மின்ஸ் சற்றும் யோசிக்காமல் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி யுத்திகளைப் பயன்படுத்தி கச்சிதமாக திட்டங்களை செயல்படுத்தி 240 ரன்களுக்குள் சுருட்டினார்.

அதிலும் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடர், ஆமதாபாத்தில் 1.25 லட்சம் இந்தியர்களுக்கு மத்தியில் அந்நாட்டு அணியை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆமதாபாத் ஆடுகளத்தைப்பற்றி ஆஸ்திரேலியா பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டி ஆடுகளம் மெதுவான ஆடுகளம், பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதா என்பதுகூடத் தெரியாது. ஆனால் இவை அனைத்தையும் தங்களின் வலிமையாக மாற்றிக்கொண்டு செயல்பட்டதுதான் ஆஸ்திரேலியா சாம்பியனாக உருவெடுக்கவும், 6-வது முறையாக பட்டம் வெல்லவும் காரணமாக அமைந்தது.

விராட்

பட மூலாதாரம், Getty Images

பந்துவீச்சில் ‘மும்மூர்த்திகளின்’ சக்தி

வேகப்பந்துவீச்சிலும் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகிய 3 பேரைத் தவிர யாருமில்லை. சுழற்பந்துவீச்சில் ஆடம் ஸம்பா மட்டுமே முழுநேரச் சுழற்பந்துவீச்சாளர், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆகியோர் பகுதிநேரப் பந்துவீச்சாளர்கள். இவர்களை வைத்துக்கொண்டு ஆடுகளத்தை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு இந்திய அணியை 240 ரன்களில் சுருட்டியதில்தான் ஆஸ்திரேலியா ஒரு சாம்பியனாக மிளிர்கிறது.

அதிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மூவரும் அனைத்து வகையான ஆட்டங்களிலும் தவிர்க்காமல் இடம் பெறக்கூடியவர்கள், எந்த ஆட்டத்துக்கும் தங்களின் பந்துவீச்சை உடனடியாக தகவமைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.

டி-20 உலகக் கோப்பையில் சாம்பியனாகியபோதும், ஒருநாள் உலகக் கோப்பையில் பட்டம் வென்றபோதும், ஆஷஸ் தொடர் வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி என அனைத்திலும் இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள்தான் ஆஸ்திரேலிய பந்துவீச்சின் பலம்.

அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்த 3 பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்த அனுபவம்தான் பைனலில் சிறப்பாகப் பந்துவீச முடிந்தது. பெரிதாக ஸ்விங் பந்துவீச்சு இல்லை, கட்டர்கள்கூட பெரிதாக இல்லை ஆனாலும், லைன் – லெங்த் துல்லியமாக இருந்தது, 90% பந்துகளை தவறான லெங்த்தில் வீசவில்லை, தொடர்ந்து நெருக்கடி தரும் லெங்த்தில் வீசி இந்திய பேட்டர்களை கிறங்கடித்ததுதான் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களின் பலம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோகித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான்

ஆட்டத்தை மாற்றிய கேட்ச்

இந்த உலகக் கோப்பைத் தொடருக்குக் கேப்டன் பொறுப்பேற்கும் முன் கம்மின்ஸுக்கு ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்த அனுபம் மிகக்குறைவு. 4 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்திருந்தார். ஆனால், இறுதி ஆட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் செயல்பட்டவிதம், அனுபவம் மிக்கவரின் செயல்பாடு போல இருந்தது.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதர்ச நாயகன், தொடரின் அதிக ரன்களை எடுத்த பேட்டர் விராட் கோலி விக்கெட்டை கட்டம் கட்டி வீழ்த்தி லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனத்தில் ஆழ்த்தினார் கம்மின்ஸ். ஒரு கேப்டனாகவும், ஒரு பந்துவீச்சாளராகவும் கம்மின்ஸ் அந்த இடத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி சாம்பியனாகப் போகிறோம் என்பதை சொல்லாமல் உணர்த்தினார்.

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் ஆட்டம் கையில் இல்லை. ஆனால், ரோஹித் சர்மா பலமுறை ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரைப் பந்துவீசச் செய்து கட்டம் கட்டினர்.

உலகக் கோப்பைத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது, கிண்டலடிக்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்ல போட்டிக்கே திருப்புமுனையாக அமைந்தது ரோகித் சர்மா அடித்த ஷாட்டை டிராவிஸ் ஹெட் ஓடிச் சென்று பிடித்த கேட்ச்தான்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சார்ட்ஸுக்கு இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பிடித்த கேட்ச்தான் திருப்புமுனையாக அமைந்து மேற்கிந்தியத்தீவுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதுபோல், இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோகித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான். இந்த இரு கேட்சுகளும்தான், போட்டியின் முடிவுகளை எதிரணியின் கைகளில் இருந்து பறித்த தருணங்களாகும்.

இறுதிப் போட்டியில் இதுபோன்று ஒவ்வொரு தருணத்தையும் ஆஸ்திரேலிய அணி தங்களை சாம்பியன்களாக உயர்த்துவதற்கு பயன்படுத்திக்கொண்டு முன்னெடுத்துச் சென்றது என்பதில் மிகையில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியா தன்னுடைய இயல்பான கிரிக்கெட் முறையில் இருந்து மாறவே இல்லை

பாரம்பரிய கிரிக்கெட்டை விளையாடிய ஆஸ்திரேலியா

சேஸிங்கிலும் ஆஸ்திரேலிய அணியின் நுணுக்கங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஷமி, பும்ரா இருவரும் பவர்ப்ளேயில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், ஓவருக்கு 4.5 ரன்கள் என்று எகனாமி வைத்திருக்கிறார்கள். ஆமதாபாத் மைதானம், லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுக் குரல், பும்ரா, ஷமியின் ஸ்விங் பந்துவீச்சு, மின்னொளி வெப்பம் என கடும் அழுத்தத்துக்கு மத்தியில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் விளையாடினர்.

அதனால்தான் வெளிப்புற அழுத்தத்தில் என்னசெய்வெதென்று தெரியாமல்கூட, ஸ்மித் தனக்குரிய டி.ஆர்.எஸ் வாய்ப்பை பயன்படுத்தாமல் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியும் ஒரு கட்டத்தில் அழுத்தத்தில் இருந்தாலும், அதிலிருந்து லாபுஷேன், ஹெட் இருவரும் தங்களையும் மீட்டு, அணியையும் மீட்டுக் கரை சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடியும்போது, ஆஸ்திரேலியா தங்கள் வெற்றி இலக்கில் கால்பகுதியைக் கூட எட்டவில்லை.

உலகிற்கு கிரிக்கெட்டை போதித்த இங்கிலாந்து பாரம்பரிய கிரிக்கெட் முறையில் இருந்து விலகி ‘பேஸ்பால் கிரிக்கெட்டுக்கு’ மாறிவிட்டது. இனிமேல் இந்த பேஸ்பால் கிரிக்கெட் (அதிரடிஆட்டம்) முறைதான் டிரண்ட் என்று உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் அறிவுறுத்தி வருகிறது.

இந்திய அணி கூட தங்களின் பேட்டிங் முறையை ‘பேஸ்பால்’ உத்திக்கு மாற்றிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் பல போட்டிகளில் அந்த உத்தியை இந்திய அணி பின்பற்றியது.

ஆனால், ஆஸ்திரேலியா தன்னுடைய இயல்பான கிரிக்கெட் முறையில் இருந்து மாறவே இல்லை என்பதற்கு இறுதிப்போட்டி ஆட்டமே சிறந்த உதாரணம். ஏனென்றால், இவர்கள் இப்படித்தான் விளையாடப் பிறந்தவர்கள், பாரம்பரிய கிரிக்கெட் ரத்தத்தில் ஊறிவிட்டது என்பதை உணர்த்தினர். டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் முறை நிச்சயமாக பேஸ்பால் ஆட்டமாக இருக்க முடியாது. பழைமையான, பாரம்பரிய கிரிக்கெட் மாதிரியான பொறுமையான, நிதானமான, மோசான பந்துகளை மட்டும் ஷாட்கள் அடிப்பது போன்றுதான் ஹெட்டின் பேட்டிங் இருந்தது. உலக ரசிகர்கள் பாரம்பரிய கிரிக்கெட் பேட்டிங் முறையை மறந்துவரும்போது ஹெட், லாபுஷேன் ஆட்டம் அதை அற்புதமாக நினைவூட்டியது.

இறுதிப் போட்டி என்றவுடன் ரிக்கி பாண்டிங், மாத்யூ ஹேடன், கில்கிறிஸ்ட் ஆகியோர் அதிரடி ஆட்டம் நினைவுக்கு வந்தாலும், டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் பரந்த, பாரம்பரிய கிரிக்கெட் வீரர்களை நினைவூட்டும் வகையில் இருந்தது. தாக்குதல் ஆட்டம், அதிரடியான ஆட்டம் என்பது ஆஸ்திரேலிய பேட்டர்களின் டி.என்.ஏ.வில் இருந்தாலும், பாரம்பரிய பேட்டிங் முறையை மறக்கவில்லை.

நிரூபித்த லாபுஷேன்

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை லாபுஷேன் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் இருந்தது. டெஸ்ட் தொடருக்காக பயிற்றுவிக்கப்பட்ட லாபுஷேன் ஒருநாள் தொடருக்கு ஒத்துவருவாரா என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், டிராவிஸ் ஹெட் காயத்தால் அணியில் இல்லாத நிலையில் லாபுஷேனுக்கு இடம் கிடைத்தது. ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக தனக்கிருக்கும் பொறுப்புடன் லாபுஷேன் விளையாடினார். அதிலும் இறுதி ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட்டுக்கு அளித்த ஒத்துழைப்பு, பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தது ஆகியவை லாபுஷேன் அணியில் அவசியம் இருக்கவேண்டியவர் என்பதை நியாயப்படுத்தியது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

‘உலகக் கோப்பையையும் வென்றது மலையின் உச்சியில் நிற்பதைப் போன்று’ உள்ளதாகக் கம்மின்ஸ் தெரிவித்தார்

‘சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருந்தோம்’

வெற்றிக்குப்பின் ஆஸ்திரேலியக் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த வெற்றிக்காகத்தான் எங்களின் சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருந்தோம் என நினைக்கிறேன். இரு பெரிய பேட்டர்கள் சேர்ந்து எங்களுக்கு வெற்றியை உரித்தாக்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் வயதானவர்களாக இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

குறிப்பாக லாபுஷேன் அணிக்குள் வருவதற்கு பலவிதான எதிர்ப்புகள் இருந்தன, ஆனால், தன்னுடைய இருப்பைக் கடைசி ஆட்டத்தில் லாபுஷேன் நியாயப்படுத்திவிட்டார். டிராவிஸ் ஹெட் காயத்தால் இருந்தபோது எங்களின் மருத்துவக் குழு செயல்பட்டவிதம், தேர்வாளர்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு பக்கபலமாக இருந்தது,” என்றார்.

மேலும், “இதனால்தான் ஹெட் விரைவில் குணமடைந்து அணிக்குள் திரும்பினார். நாங்கள் ஏறக்குறைய ஓர் ஆண்டாக வெளிநாடுகளில்தான் விளையாடி வருகிறோம். பல வெற்றிகளை தொடர்ந்து பெற்றிருக்கிறோம். இப்போது உலகக் கோப்பையையும் வென்றது மலையின் உச்சியில் நிற்பதைப் போன்று உணர்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

ஆமதாபாத் அரங்கில் குழுமும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நிசப்தமாக்கிவிடுவேன் அதைத்தவிர எனக்கு மனநிறைவு தரக்கூடியது வேறு ஒன்றுமில்லை என்று இறுதிப்போட்டிக்கு முன்பாக கம்மின்ஸ் பேசியிருந்தார். தான் சொன்னதை கம்மின்ஸ் நிறைவேற்றிவிட்டார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *