
பட மூலாதாரம், Narendra Modi/X
கத்தார் சிறையில் இருந்து எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை விடுவிக்க சமீபத்தில் முடிவெடுக்கப்பட்ட பிறகு, புதன்கிழமை இரவு தோஹா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோதி.
இது கத்தார் நாட்டிற்கு பிரதமரின் இரண்டாவது பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் ஜூன் 2016இல் கத்தார் சென்றிருந்தார். மோதிக்கு முன், 2008 நவம்பரில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கத்தார் சென்றிருந்தார்.
விமான நிலையத்தில் அவர் கத்தார் பிரதமரும் நிதியமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை சந்தித்தார், இதை அவர் ‘ஒரு நேர்மறையான சந்திப்பு’ என்றும் விவரித்தார்.
வியாழக்கிழமை அவர் கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்திக்க உள்ளார். இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் மட்டுமல்லாது, சர்வதேச விவகாரங்களும் இருவருக்கும் இடையே விவாதிக்கப்படும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கத்தாருக்கு புறப்பட்ட மோதி, கத்தார் அமீரை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறியிருந்தார், “கத்தாரில், அவருடைய தலைமையில் அபாரமான வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படுவதைக் காண முடிகிறது,” என்று மோதி கூறியிருந்தார்.
பிரதமரின் திடீர் கத்தார் பயணம்

பட மூலாதாரம், Getty Images
பிரதமரின் கத்தார் பயணம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. கத்தாரின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களில் ஏழு பேர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த பிறகே மோதியின் பயணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஏழு பேருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர், இவர்களுக்கான மரண தண்டனை நிறுத்தப்பட்டு வெவ்வேறு அளவிலான சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது.
பிடிஐ செய்தி முகமையின் அறிக்கைப்படி, “ஒரு முன்னாள் கடற்படை வீரர் இன்னும் இந்தியா திரும்பவில்லை, ஆனால் அவரும் விரைவில் திரும்புவார்.”

பட மூலாதாரம், ANI
விடுவிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள்
ஏறக்குறைய மூன்று மாதங்களாக இருநாடுகள் இடையே நடத்தப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்தியாவுக்கு கிடைத்த முக்கியமான ராஜதந்திர வெற்றியாக விவரிக்கப்பட்டது.
பிப்ரவரி 12 அன்று, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், “13ஆம் தேதி, பிரதமர் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார்” என்று தெரிவித்தார்.
அதே நாளில், வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, பிரதமரின் கத்தார் பயணத்தைக் குறித்து அறிவித்தார். “பிரதமர் நரேந்திர மோதி வரும் இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பிப்ரவரி 13-14) மற்றும் கத்தார் (பிப்ரவரி 14-15) ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.”
கத்தாரில் சுமார் 8.35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது கத்தாரின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம்.
கத்தார்- இந்தியா இடையிலான உறவுகள்

பட மூலாதாரம், AJAY AGGARWAL/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES
கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகள் 70களில் தொடங்கியது. ஜனவரி 1973இல், இந்தியாவில் உள்ள தனது தூதரகத்திற்கான முதல் பொறுப்பாளர்களை நியமித்தது கத்தார். பின்னர் மே 1974இல், இந்தியாவுக்கான தனது முதல் தூதரை அறிவித்தது.
கடந்த 1940இல், கத்தார் துகான் நகரின் எண்ணெய் இருப்பைக் கண்டுபிடித்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கத்தார் மற்றொரு எண்ணெய் இருப்பைக் கண்டுபிடித்தது. அதன் பொருளாதாரம் வேகமாக வளரத் தொடங்கியது, இதில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1990 வாக்கில் 50 லட்சத்தை எட்டியது. இது அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது.
மேலும் இங்கு கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகமும் அதிகரித்து வந்தது. கத்தார் இந்தியாவிலிருந்து தானியங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்சாரப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. கத்தாரிடம் இருந்து இந்தியா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) வாங்குகிறது.
மோதி ஆட்சிக்கு வந்த பிறகு, 2015 மற்றும் 2016இல் கத்தார் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். இது தவிர, இரு தலைவர்களும் செப்டம்பர் 2019இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும், 2023 டிசம்பரில் துபாயில் நடைபெற்ற காலநிலை மாநாட்டிலும் சந்தித்தனர்.
இந்த சந்திப்புகளின் முடிவாக 2016இல், கத்தார் இந்தியாவிற்கு விற்கப்படும் எல்என்ஜி எரிவாயுவின் யூனிட் விலையைப் பாதியாகக் குறைத்தது.
இதற்குப் பிறகு, ஒரு எம்எம்பிடியூ (மெட்ரிக் மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்- MMBTU) ஒன்றுக்கு 12.60 டாலர்கள் செலவாகும் எல்என்ஜி, இந்தியாவிற்கு எம்எம்பிடியூ ஒன்றுக்கு 6.5 முதல் 6.6 டாலர் வரை என்ற விலையில் கிடைக்கத் தொடங்கியது.
இருப்பினும், நாட்டின் நலன்களைப் பாதுகாக்க, கத்தாரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு எரிவாயுவை இந்தியா வாங்க வேண்டும் என்பதை அது கட்டாயமாக்கியது. 2017இல் அரபு நாடுகளுடனான கத்தாரின் உறவு மோசமடைந்தது. கத்தார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடனான ஒப்பந்தத்தை மீறியதாகவும் சௌதி அரேபியா தெரிவித்தது.
சௌதி அரேபியா தலைமையின் கீழ், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகியவை கத்தாருடன் தங்கள் உறவை முறித்துக் கொண்டு அதைத் தனிமைப்படுத்த முயன்றன. இந்தியாவிற்கு சிரமங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன, அது கத்தாருக்கு ஏற்றுமதி செய்வதைச் சிறிது காலம் நிறுத்தியது. ஆனால், விரைவில் இருவருக்கும் இடையே வர்த்தகம் முன்பு போல் நடக்கத் தொடங்கியது.
கத்தாருடன் இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம்

பட மூலாதாரம், @HARDEEPSPURI
கடந்த 2022-23இல், இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான வர்த்தகம் 18.77 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில், இந்தியா கத்தாருக்கு 1.96 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதேநேரம் இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 16.8 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இருவருக்கும் இடையிலான வர்த்தகம் 2018-19இல் 12.33 பில்லியன் டாலர்களாக இருந்தது, அதுவே 2019-20இல் 10.96 பில்லியன் டாலர்களாகவும், 2020-21இல் 9.21 பில்லியன் டாலர்களாகவும், 2021-22இல் 15.20 பில்லியன் டாலர்களாகவும், 2022-23இல் 18.78 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது.
கத்தார் இந்தியாவிற்கு எல்என்ஜி, எல்பிஜி, ரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களை விற்பனை செய்கிறது. அதே நேரத்தில், தானியங்கள், தாமிரம், இரும்பு, எஃகு, பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மின்சார இயந்திரங்கள், உடைகள், விலைமதிப்பற்ற உலோகங்கள், ரப்பர் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து வாங்குகிறது.
இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உள்ளன, அதன் கீழ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் கத்தாருக்கு தொடர்ந்து விஜயம் செய்கின்றன.
கத்தார், இந்தியாவின் மிகப்பெரிய எல்என்ஜி மற்றும் எல்பிஜி சப்ளையர். இந்தியா தனது மொத்த எல்என்ஜி தேவையில் 48 சதவீதத்தை கத்தாரிடம் இருந்து வாங்குகிறது. இந்த விஷயத்தில் சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக கத்தாரின் மூன்றாவது பெரிய வாடிக்கையாளர் இந்தியாவே. இறக்குமதியைப் பொறுத்தவரை, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இருநாட்டு உறவுகளில் உள்ள சவால்கள்

பட மூலாதாரம், X @NARENDRAMODI
தோஹாவில் வசிக்கும் இந்தியர்களுடன் மோதி
ஜூன் 2022இல், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தபோது, இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கியமான சவாலாக அது பார்க்கப்பட்டது.
அந்த நேரத்தில், இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்திய முதல் நாடு கத்தார். மேலும் இந்திய தூதரை அழைத்துத் தனது கடும் எதிர்ப்பையும் கத்தார் தெரிவித்தது.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்குக் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நூபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக நீக்கியது. பாஜகவின் இந்த அறிவிப்பை கத்தார் வரவேற்றது. நூபுர் ஷர்மாவின் அந்த சர்ச்சைக்குரிய கருத்தால் உலக முஸ்லிம்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்படும் சூழல் உருவானதாக அப்போது கத்தார் தெரிவித்திருந்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்