கோவை, தமிழ்நாட்டின் புதிய ஐ.டி. மையமாக உருவெடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அரசின் திட்டங்கள் என்ன?

கோவை, தமிழ்நாட்டின் புதிய ஐ.டி. மையமாக உருவெடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அரசின் திட்டங்கள் என்ன?

கோவை தான் தமிழகத்தின் அடுத்த பெரிய ‘ஐ.டி ஹப்’ - செயல்படுத்துவதில் சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம், ELCOT

படக்குறிப்பு,

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது கோவை

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் பெரிய ஐ.டி நிறுவனங்களின் மையமாக கோயம்புத்தூரை மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, மாநில பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட்டுளள்து. அதற்கான திட்டங்கள் என்ன? கோவையை ஐ.டி மையமாக மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது கோவை. குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில், சென்னைக்கு அடுத்தபடியாக, ஐ.டி (Information Technology) துறையிலும் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.

ஐ.டி துறையை பொருத்தவரையில் நாட்டின் மிகப்பெரிய ஐ.டி நகரங்களாக கர்நாடகத்தின் பெங்களூரு, தெலங்கானாவின் ஹைதராபாத், மகாராஷ்டிராவின் புனே நகரங்களுடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையும் திகழ்கின்றன.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையை தேர்வு செய்யும் ஐ.டி. நிறுவனங்கள்

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் சென்னையில் அலுவலகங்களை அமைத்துள்ளன. சென்னையில் சிறிய முதல் பெரிய அளவில் 308-க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவன அலுவலகங்களில் பல லட்சக்கணக்கான பணியாளர்கள் உள்ளனர்.

சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் ஐ.டி. நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்க மாநில அரசு ஊக்கம் தந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக ஐ.டி. நிறுவனங்களின் தேர்வாக கோவை அமைந்துள்ளது. கோவையில் அதிகமான ஐ.டி. நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை அமைத்து வருகின்றன.

கோவையில் இதுவரை ஐ.டி துறையின் வளர்ச்சி என்ன?

கோவை தான் தமிழகத்தின் அடுத்த பெரிய ‘ஐ.டி ஹப்’ - செயல்படுத்துவதில் சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம், ELCOT

படக்குறிப்பு,

கோவை மாவட்டத்தில் இதுவரை அரசின் எல்காட் அமைப்பில் பதிவு செய்த, 78 ஐ.டி நிறுவனங்கள் உள்ளன.

கோவையை பொருத்தவரையில் ஏற்கனவே, 2010-ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் கோவை விலாங்குறிச்சி அருகே, 20 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், உலகின் பல பெரிய முன்னணி ஐ.டி நிறுவனங்கள் இயங்குகின்றன. இதன் அருகே, 2.60 லட்சம் சதுர அடியில் ஐ.டி டவர் பணியும் நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை அரசின் எல்காட் அமைப்பில் பதிவு செய்த, 78 ஐ.டி நிறுவனங்களில் மட்டுமே மொத்தமாக 24 ஆயிரம் பேர் ஐ.டி துறை சார்ந்த பணிகளில் உள்ளனர். தவிர, தனியார் டெக் பார்க்குகளும், ஆங்காங்கே தனியார் இடங்களில் ஐ.டி நிறுவனங்கள் உள்ளன.

இப்படியான நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் டைடல் பார்க் அருகே, எல்காட் அமைப்பின் மூலம் 114 கோடி ரூபாயில் ஒரே நேரத்தில், 14 ஆயிரம் பேர் அமர்ந்து பணியாற்றும் வகையில் ஐ.டி பார்க் திட்டம் தொடங்கப்பட்டது. 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

கோவையை ஐ.டி. மையமாக மாற்ற பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை தான் தமிழகத்தின் அடுத்த பெரிய ‘ஐ.டி ஹப்’ - செயல்படுத்துவதில் சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு,

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இப்படியான நிலையில், திமுக ஆட்சி அமைந்த பின், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தமிழகத்தின் மிகப்பெரிய ஐ.டி. மையமாக மாற்றப்படுமென அறிவித்தது.

2024-2025 தமிழக பட்ஜெட்டில், ‘‘கோயம்புத்தூரில் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பம், வாழ்வியல் அறிவியல், விண்வெளி, பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்,’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘‘கோவையில் எல்காட் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அதுமட்டுமின்றி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையை ஐ.டி மையமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் உலக நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களுடன் பேசி முதலீடுகள் ஈர்க்கப்படும். கோவையில் ஐ.டி நிறுவனங்கள் தொடங்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனவும் பேசியிருந்தார்.

இந்த அறிவிப்புகள் ஐ.டி துறை சார்ந்த வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் ஐ.டி துறை சார்ந்த ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இருந்தாலும், ஐ.டி மையமாக மாற்றும் போது அதனுடன் கோவையின் உள் கட்டமைப்புகளையும் கட்டாயம் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

“கோவையில் வளங்கள் உள்ளன”

கோவை தான் தமிழகத்தின் அடுத்த பெரிய ‘ஐ.டி ஹப்’ - செயல்படுத்துவதில் சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம், ELCOT

RAAC – (Residents Awareness Association of Coimbatore) அமைப்பின் இணைச் செயலாளர் சதீஸ், ‘‘பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னையைக் காட்டிலும் பெரிய ஐ.டி மையமாக கோவையை மாற்றும் அளவுக்கு இங்கு இடமும் வளமும் உள்ளன.

அரசு 20 லட்சம் சதுர அடியில் ஐ.டி பார்க் அறிவித்துள்ளது. மறுபுறம் தனியார் பலரும் ஆங்காங்கே 10 லட்சம் சதுர அடி அளவிற்கு தனியார் ஐ.டி பார்க் அமைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

இங்குள்ள பருவநிலை, ஏகப்பட்ட சுற்றுலாப் பகுதிகள், உணவு மற்றும் குறைந்த மாசுபாடு காரணமாக ஐ.டி துறையை சேர்ந்தவர்கள் நிச்சயம் கோவையை தேர்வு செய்வார்கள்,’’ என்று கூறுகிறார்.

கோவை ஐ.டி. மையமாக மாற்றுவதில் உள்ள சவால்கள் என்ன?

மேலும் தொடர்ந்த சதீஸ், ‘‘ஐ.டி பார்க் அமைப்பது முன்னேற்றத்திற்கான முடிவு தான். ஆனால், லட்சக்கணக்கான பணியாளர்கள் கோவையில் தங்கி வேலை செய்யும் சூழலை உருவாக்கும் போது, கோவையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம்.

குறுகிய ரோடுகள், சரியான திடக்கழிவு மற்றும் நீர் மேலாண்மை இல்லாதது, குடியிருப்புகள் பற்றாக்குறை என பல பிரச்னைகளால் தற்போதைய வளர்ச்சிக்கே கோவை தள்ளாடுகிறது. ஐ.டி நகராக உருவெடுத்தால் தினமும் டன் கணக்கில் திடக்கழிவும் பல லட்சம் லிட்டர் கழிவுநீரும் வெளியாகும். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி இந்த பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும்,’’ என்றார்.

போக்குவரத்திற்கு வழிவகை செய்யாமல் கோவை ஐ.டி மையமாவது சாத்தியமில்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார் சதீஸ்.

‘‘இன்னமும் கோவை ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் உள்ளது, சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படவில்லை. மெட்ரோ வசதியும் கோவையில் இல்லை. இவற்றை சரி செய்தால் போக்குவரத்திற்கு பிரச்னை இருக்காது. இந்த அடிப்படை கட்டமைப்புகளை எல்லாம் மேம்படுத்தாமல் தமிழகத்தின் பெரும் ஐ.டி மையம் கோவை என்பது சாத்தியமாகாது,’’ என்கிறார் சதீஸ்.

என்ன செய்யப் போகிறது அரசு?

கோவை தான் தமிழகத்தின் அடுத்த பெரிய ‘ஐ.டி ஹப்’ - செயல்படுத்துவதில் சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம், ELCOT

படக்குறிப்பு,

”3 – 8 ஆண்டுகளில் கோவை தமிழகத்தின் டெக் சிட்டியாக மாறும்” என்கிறார் தீரஜ் குமார்.

‘கோவை ஐ.டி ஹப் உருவாக்க அரசின் திட்டங்கள் என்ன? என்னென்ன வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன?’ என்ற கேள்வியை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் தீரஜ் குமாரிடம் முன்வைத்தது பிபிசி தமிழ்.

பிபிசி தமிழுக்கு விளக்கமளித்த தீரஜ் குமார், ‘‘கோவையை பொருத்தவரையில் ஏற்கனவே டைடல் பார்க் உள்ளது.எல்காட் ஐ.டி பார்க் விரைவில் திறக்கப்பட உள்ளது. கூடுதலாக, இரண்டு கட்டங்களாக 20 லட்சம் சதுர அடியில் ஐ.டி பார்க் அமைக்கப்படுமென பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி நாங்கள், பெங்களூரு (Electronic City), புனே போன்ற டெக் நகரங்களைப் போல், கோவையை டெக் சிட்டியாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

இந்த டெக் சிட்டியில் ஐ.டி நிறுவனங்களின் மிகப்பெரிய ஐ.டி பார்க், அதற்கு அருகிலேயே அதிநவீன வசதிகள் கொண்ட குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் என அனைத்தையும் உருவாக்கும் திட்டத்தையும் தயார் செய்து வருகிறோம்.

இது மிகப்பெரிய பணி. நிதி ஒதுக்கி பணியை தொடங்கினால், 3 – 8 ஆண்டுகளில் கோவை தமிழகத்தின் டெக் சிட்டியாக மாறும், கோவை மிகப்பெரிய ஐ.டி. மையமாக மாற்றப்படும். அந்த அளவுக்கு அங்கு வளம் உள்ளது,’’ என்கிறார் அவர்.

‘உள் கட்டமைப்பு நிச்சயம் மேம்படுத்தப்படும்’

‘கோவைக்கான இத்தனை திட்டங்கள் போதிய உள் கட்டமைப்புகள் மேம்படுத்தாமல் சாத்தியமாகுமா?’ என்ற கேள்வியை தீரஜ் குமாரிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.

அதற்கு பதிலளித்த அவர், ‘‘சாத்தியமில்லை தான். நாங்கள் ஐ.டி. மையம், டெக் சிட்டி என்ற திட்டத்தை எங்கள் துறையை மட்டும் வைத்து செய்யப் போவதில்லை. அனைத்து துறைகளையும் இணைத்து தான் இந்த மிகப்பெரிய பணியை செய்து முடிக்க முடியும்.

இந்த திட்டங்கள் வகுக்கும் போதே, என்னென்ன உள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென அரசுக்கு அறிவுரைகளை முன்வைப்போம். நிச்சயம் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படும்,’’ என்று விளக்கமாக கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *