திருப்பத்தூரில் பணி செய்ய முடியாமல் தவிக்கும் பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர்; ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்களா ?

திருப்பத்தூரில் பணி செய்ய முடியாமல் தவிக்கும் பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர்; ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்களா ?

பட்டியலின ஊராட்சி தலைவர்
படக்குறிப்பு,

பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத்தலைவர் இரண்டு ஆண்டுகளாக பணிகளை செய்ய முடியாத நிலை இருப்பதாகக் கூறுகிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண், சாதிய பாகுபாட்டின் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும், இரண்டு ஆண்டுகளாக பணிகளை செய்ய முடியாத நிலை நிலவுகிறது.

ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாடுகள் காரணமாக இந்த நிலை நீடிப்பதாக அந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் நீடிப்பதால் அரசு சார்பாகவும் இறுதி முடிவை எடுக்கமுடியாத நிலை காணப்படுகிறது.

ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்துமதி

பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் வெற்றி பெற்ற சான்றிதழ்
படக்குறிப்பு,

நாக்கனேரி ஊராட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30% பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 10% பேர் மற்றும் இதர பிரிவினர் என மொத்தம் 3,700 வாக்காளர்கள் உள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட நாக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிதான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 40% பேர்.

இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30% பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 10% பேர் மற்றும் இதர பிரிவினர் என மொத்தம் 3,700 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் பெரும்பான்மையானோர் மலைவாழ் மக்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சியில் பட்டியல் இன பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வகையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் 10% மட்டுமே இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிடுவதற்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஊரில் வசிக்கும் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும், மீறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் எனவும் மிரட்டியதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், எதிர்ப்பையும் மீறி வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று, அந்த ஊரைச் சேர்ந்த இந்துமதி பாண்டியன் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

“மனுத்தாக்கல் செய்ய போகும் வழிகளில் எல்லாம் ஆட்களை நிறுத்தி வைத்து எங்களுக்கு சிவக்குமார் தரப்பு இடையூறு ஏற்படுத்தினர். மேலும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்தனர்,” என்று இந்துமதியின் கணவர் பாண்டியன் பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் தேர்தலில் போட்டியிட்டதை ஊர் மக்கள் யாரும் தடுக்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மட்டுமே அடியாட்களை வைத்து மிரட்டினார்,”என இந்திமதி தெரிவித்தார்.

எதிர்ப்பை மீறி இந்துமதி மனுத்தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து, இந்துமதியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கியிருக்கிறார்.

முன்னாள் தலைவரின் தொடர் மிரட்டல்

பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்
படக்குறிப்பு,

இந்துமதி ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதற்கு முன்பாக, அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் நீதிமன்றத்தை நாடியுள்ளார்

இந்துமதி வெற்றி பெற்ற பிறகும், அவருக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மிரட்டல் விடுத்ததாக இந்துமதியின் கணவர் பாண்டியன் கூறுகிறார்.

“முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்ததையடுத்து, காவல்துறை சார்பாக எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நாங்கள் ஐந்து மாத காலமும் காவல்துறை பாதுகாப்புடன் தான் இருந்தோம்” என்றார்.

இந்நிலையில், இந்துமதி ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதற்கு முன்பாக, அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் நீதிமன்றத்தை நாடினார்.

தற்பொழுது அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரால் எந்த ஒரு பணியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டியலின பெண் என்பதற்காகவே ஆதிக்க ஜாதியினரால் ஒதுக்கப்பட்ட பெண்?

பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்
படக்குறிப்பு,

தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்ததை தொடர்ந்து, ஒரு சில மாதங்களில் வார்டு உறுப்பினர்களுக்கான மறுதேர்தல் நடைபெற்று.

இந்துமதி தற்போது ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு ஆம்பூரில் உள்ள சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வருவதாக தெரிவித்தார்.

தான் பணி செய்ய இயலாதது குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை சென்று நேரில் கேட்டதற்கு, “தற்போதைக்கு உங்களால் எந்த ஒரு பணியையும் செய்ய முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பிறகு தான் உங்களால் பணி செய்ய இயலும்,” என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

என்ன சொல்கிறது மாவட்ட நிர்வாகம் ?

பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்

இந்துமதியால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது.

அப்போது அவர், “எங்கள் கிராமத்தில் பட்டியலின பெண் இந்துமதி என்று யாரும் வசிக்கவில்லை. நாங்கள் யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கவில்லை. நான் ஏன் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப் போகிறேன்,” என்றார்

இதுகுறித்து ஊரக உள்ளாட்சித்துறை உதவி இயக்குனர் விஜயகுமாரியிடம் பேசியது பிபிசி. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி பேசிய அவர், இந்துமதி செய்ய வேண்டிய பணிகளை எந்த தடையும் இன்றி மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாகக் கூறினார்.

“இந்துமதி தலைவருக்கான பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் கோர்ட்டில் எந்த பணியும் செய்யக்கூடாது என தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவர் செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் அந்த பகுதியில் வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கின்றது. அப்பகுதிக்கு என்று பணிகளை தொடர்ந்து செய்ய சிறப்பு வட்டார வளர்ச்சி அலுவலரை நியமித்து, வழக்கம்போல் பணிகள் நடக்கிறது” எனக் கூறினார் விஜயகுமாரி.

மேலும், ஊராட்சி தலைவர் பதவி மட்டுமின்றி, வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதிலும் சிரமம் உள்ளதாக விஜயகுமாரி கூறினார். “ஒன்பது வார்டுகளில் இரண்டு வார்டுகளில் மட்டுமே மக்கள் போட்டியிட்டனர். மற்ற ஏழு வார்டுகளில் இதுவரை போட்டியிடாமல் தேர்தலும் நடக்கவில்லை,” என்றார் விஜயகுமாரி.

பிபிசி சார்பில் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேசினோம். காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பேசுகையில், பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது, அப்பகுதியில் இருந்து புகார் மனுக்கள் எதுவும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *