தீபாவளி சமயத்தில் உயர்ந்துள்ள வெங்காயத்தின் விலை, அடுத்த வாரத்தின் பிற்பகுதியில்தான் குறையும் என கோயம்பேடு மொத்த வெங்காய வணிகர்கள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதால் சில்லறை கடைகளுக்கு சென்று சேரும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70வரை விற்கப்படுவதை தவிர்க்கமுடியாது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய வெங்காயத்தின் விலை ரூ.90-ஐத் தொட்டுவிடும் நேரத்தில், சின்ன வெங்காயத்தின் விலை தற்போது ரூ.120-ஐ எட்டிவிட்டது. சென்னையில் பல சில்லறை கடைகளில், முதல் ரக சின்ன வெங்காயம் ரூ.150 வரை கூட விற்கப்படுகிறது.
அதனால், பண்டிகை காலத்தில் எல்லா வித சமையலுக்கும் அதிகம் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை உயர்வு, சாமானிய குடும்பங்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
வெங்காயம் எங்கிருந்து வருகிறது? விலை ஏறியது எப்படி?
தமிழ்நாட்டில், பெல்லாரி என்று சொல்லப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. பெரிய வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வருகிறது.
குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து சேர்கிறது.
சின்ன வெங்காயம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், நாமக்கல், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம், சுமார் நான்கு லட்சம் டன் அளவில் மொத்த சந்தைக்கு வருவதாக மொத்த வெங்காய வணிகர் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் கூறினார்.
பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதற்கான காரணங்களை கேட்டபோது, வெங்காய வரத்து கடந்த இரண்டு வாரங்களாக குறைவாக உள்ளது என்றும் அடுத்த வாரத்தின் பிற்பகுதியில் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் விவரித்தார்.
”தற்போது வட மாநிலங்களில் அறுவடை முடிந்துள்ளது. புதிய வெங்காயம் சந்தைக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும்.” என்றார்.
சாதாரண நாட்களில் கோயம்பேடு சந்தைக்கு 1,200 டன் அளவுக்கு பெரிய வெங்காயம் வந்துசேரும் என்றும் அது தற்போது 900 டன்னாக குறைந்துள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
சின்ன வெங்காயத்தில் விலை குறித்தும் விசாரித்தோம். தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தை மாதத்தில்தான் புதிய வெங்காயத்தின் அறுவடை தொடங்கும் என்பதால், சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளதுதான் காரணம் என மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதோடு, மழை காரணமாகவும், மொத்த விற்பனை சந்தைக்கு வெங்காயம் அனுப்பிவைப்பதை ஏஜென்டுகள் குறைத்துள்ளனர் என்பதையும் தெரிந்துகொண்டோம்.
கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனையாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.முத்துக்குமார் பேசுகையில், சராசரியாக தினமும் 200 டன் அளவுக்கு சின்ன வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வந்துசேரும் என்றும் தற்போது கடந்த இரண்டு வாரங்களில், தினமும் வெறும் 60 டன் அளவுதான் ஏஜெண்டுகள் அனுப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
”சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளதால், விலை அதிககரித்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் விலை மிகவும் குறைந்துவிடும்,”என்றார் அவர்.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை
கடந்த புதன்கிழமையன்று (நவம்பர் 8ஆம் தேதி) மொத்த வணிகர்களுடன் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்பின்னர், அரசு நடத்தும் கடைகளில் சலுகை விலையில் வெங்காயம் விற்பனைக்கு வந்தது.
வெங்காய விலை அதிகரிப்பு குறித்து ஊடகங்களிடம் பேசிய, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளிச் சந்தையில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடத்தும், பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
சென்னையில் நான்கு நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் அதே விலையில் கூட்டுறவுத் துறை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சென்னையில் உள்ள பண்ணை பசுமைக் கடைகளில் 700 கிலோ வரை வெங்காயம் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் எடுத்துவருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், இதுபோன்ற விலையேற்றத்தை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை என நுகர்வோர்கள் விமர்சிக்கின்றனர். தேனாம்பேட்டை பண்ணை பசுமை கடையில் மூன்று கிலோ வெங்காயம் வாங்கிய சுரேஷ்(32) என்ற நுகர்வோர், தீபாவளி நேரத்தில் வெங்காயத்தின் விலை உயர்வதும், பின்னர் பண்டிகை காலம் முடிந்ததும் விலை குறைவதும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதை அரசாங்கம் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என கேள்வி எழுப்புகிறார்.
”பண்டிகை நேரத்தில், மக்கள் கட்டாயம் வாங்குவார்கள் என்பதால்தான் விலையை அதிகரிக்கிறார்கள். வியாபாரிகள் பல காரணங்கள் சொன்னாலும், இந்த விலை ஏற்றம் செயற்கையானதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்கிறது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மையாக இருக்கிறது. இதுபோன்ற விலையேற்றத்தை கட்டுப்படுத்தவேண்டும்,”என்கிறார் சுரேஷ்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்