பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய தேர்தலில் புதிய அரசைத் தேர்ந்தெடுக்க கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர். செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது.
பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை “கோழைத்தனமான செயல்” என்று விமர்சித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் எவ்வளவு விரைவில் அறிவிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவை தேர்தல் நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.
முன்னதாக வாக்குப்பதிவு வல்லுநர்கள் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இது பிடிஐ கட்சியின் வாய்ப்புகளைக் குறைக்கும் எனக் கருதப்படுகிறது. மொபைல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
பிபிசியிடம் பேசிய ஒரு வாக்காளர், இந்த முடிவால் தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். “வாக்காளர்களுக்கு இதுபோன்ற இடையூறுகளுக்குப் பதிலாக வாக்களிக்கத் தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
லாகூர் நகரிலுள்ள பல வாக்காளர்கள் பிபிசியிடம், இணைய முடக்கம் காரணமாக டாக்சிகளை முன்பதிவு செய்து வாக்களிக்கச் செல்ல முடியவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது அவர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் கூறினார்கள்.
இந்த நடவடிக்கையை நியாயப்படுத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “நாட்டில் சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களின் விளைவாக, விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன. சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பராமரிக்கவும், அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்,” என்று கூறினார். இந்த அளவுக்கான செல்போன், இணைய சேவை முடக்கம், குறிப்பாக தேர்தல் நேரத்தில் என்பது பாகிஸ்தானில் இதுவரை நடக்காத ஒன்று.
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததுள்ளன என்றாலும் வாக்குப்பதிவு நாளில் தனிமைப்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. வடக்கில் உள்ள இஸ்மாயில் கானில், நான்கு போலீஸ் அதிகாரிகள் அவர்களது வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பல காயங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
பலுசிஸ்தானில் உள்ள வேட்பாளர்களின் அலுவலகங்கள் மீது புதனன்று நடத்தப்பட்ட இருவேறு வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த செல்போன், இணைய முடக்கத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி விமர்சித்துள்ளார். கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான அவர், “உடனடியாக” அந்தச் சேவைகளை மீட்டெடுக்க அழைப்பு விடுத்தார்.
நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் பிபிசி பார்வையிட்ட ஒரு வாக்குச்சாவடி நிலையத்தின் நுழைவாயிலில் ஆயுதமேந்திய காவல்ர்கள் இருந்தனர். மேலும் ராணுவ அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர்.
முற்றிலும் நியாயமான தேர்தல்: நவாஸ் ஷெரிஃப்
நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவரது மகள் மர்யம் லாகூரில் உள்ள இக்ராவில் இன்று மதியம் வாக்களித்தனர். கடும் பாதுகாப்பு இருந்தது. அதிகாரிகள் அவர்களைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கியிருந்தனர்.
தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா எனக் கேட்டதற்கு, நவாஸ் ஷெரிஃப் “முற்றிலும் நியாயமாக நடந்துள்ளது” என்று பதிலளித்தார்.
வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிக்கு வெளியே பிபிசியிடம் பேசிய அவர், “ராணுவத்துடன் தனக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை” என்று கூறினார். ஒருவேளை அவர் ஜெனரல்களுடன் பகைமையில் தனது நீண்டகால வாழ்க்கையைக் கழித்ததை மறந்திருக்கலாம்.
“நாகரீகம் இல்லாமை, ஆணவ, நாட்டைச் சீர்குலைக்கும், அழிக்கும் கலாசாரம்” என்று இம்ரான் கானின் தலைமையிலான பாகிஸ்தான் பற்றிக் குறிப்பிட்டார். மேலும், அவரது கட்சி வெற்றி பெற்றால், “மக்களின் வாழ்க்கை எளிதாகும், பணவீக்கம் குறையும். மக்கள் விரும்புவது இதுதான். அவர்களின் விருப்பம் நிறைவேற வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
லாகூரில் டஜன்கணக்கான வாக்காளர்கள் நசீராபாத்தில் உள்ள ஒரு பள்ளியின் சிறிய தாழ்வாரத்தில் திரண்டிருந்தனர். அவர்களில் சிலர் வாக்களிக்க இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாகக் கூறினார்கள்.
அதிகரித்து வரும் வன்முறை மற்றும் பொருளாதார போராட்டங்கள்
பாகிஸ்தானின் இந்தத் தேர்தலில் 12.8 கோடி மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பாதிப் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 5,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 313 பேர் மட்டுமே பெண்கள். அவர்கள் 336 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 266 இடங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரிஃப்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் இதில் பங்கெடுத்துள்ளன.
இருப்பினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடும் கிரிக்கெட் பேட் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.
இந்த நடவடிக்கையால், சுயேட்சைகளாகப் போட்டியிடும் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள், கால்குலேட்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர், பகடை உள்ளிட்ட பிற சின்னங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் படிப்பறிவில்லாத நாட்டில் தேர்தல் சின்னங்களே வாக்கெடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பிடிஐ உறுப்பினர்கள், ஆதரவாளர்களை அடைத்து வைத்து, பேரணிகள் நடத்துவதைத் தடை செய்வது ஆகியவற்றின் மூலம் அவர்களைத் திறம்பட முடக்கியது உள்ளிட்ட பிற தந்திரங்களும் பிடிஐ வேட்பாளர்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த வாரம் ஐந்து நாட்களில் மூன்று தனித்தனி வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான் குறைந்தது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
கடந்த தேர்தலின்போது ஊழலுக்கான தண்டனையைப் பெற்றிருந்த நவாஸ் ஷெரிஃப் கட்சிக்கு இம்முறை மக்கள் வாக்களிக்க முடிந்தது. அவர் 1999 ராணுவ சதித்திட்டத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் 2017இல் அவரது மூன்றாவது பதவிக்காலம் குறைக்கப்பட்டது. ஆனால், அவர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் பதவியில் இருப்பதற்கான வாழ்நாள் தடை ரத்து செய்யப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் அவர் மீதான வழக்குகள் நீக்கப்பட்டு, நான்காவது முறையாகத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் 169 இடங்கள் தேவைப்படும். எந்தக் கட்சியேனும் பெரும்பான்மையை வெல்ல முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த 2022இல் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத் துயரங்களால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது, வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.
இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின்படி, 2023ஆம் ஆண்டு பாகிதானில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2017 முதல் பாதுகாப்புப் படைகள், போராளிக் குழுக்கள், பொதுமக்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் 90,675 வாக்குச் சாவடிகளில் பாதியை “உணர்திறன்” மிக்கப் பகுதி என வகைப்படுத்தியுள்ளது. அதாவது வன்முறை அபாயம் உள்ள பகுதி என எச்சரித்துள்ளது. இந்த வகைப்பாடுகள் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் தேர்தல் வன்முறை வரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வாக்குப்பதிவு முடிவடைந்தாலும், வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி 23:59 (19:00 GMT) வரை வேட்பாளர்கள், பிரசாரம் மற்றும் கருத்துக் கணிப்புகள் பற்றி என்ன கூறலாம் என்பது உட்பட, தேர்தல் கவரேஜ் தொடர்பான கடுமையான விதிகள் நடைமுறையில் இருக்கும்.
கூடுதல் செய்தி: பிபிசி உருது மற்றும் ஃப்ளோரா ட்ரூரி
நன்றி
Publisher: பிபிசிதமிழ்