ஏக்நாத் ஷிண்டே குழுவை உண்மையான சிவசேனாவாக மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர் அங்கீகரித்துள்ளார். சபாநாயகரின் இந்த முடிவு தற்போதைய ஏக்நாத் ஷிண்டே அரசு மற்றும் தாக்கரே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜூன் 21, 2022 அன்று சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்த தேதிக்குப் பிறகு சுனில் பிரபு கொறடாவாக இருப்பது செல்லாது எனவும் அதனால்தான் ப்ரத் கோகவாலேவை புதிய கொறடாவாக நியமித்தது சரிதான் என்றும் சபாநாயகர் நர்வேகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிவசேனாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிளர்ச்சிக்குப் பிறகு, அக்கட்சியின் இரு பிரிவினரும், அதாவது ஷிண்டே, தாக்கரே ஆகிய இரு தரப்புமே எதிர் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தனர்.
கடந்த செப்டம்பர் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான சிவசேனா எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க மனு தொடர்பான விசாரணை சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர் முன்னிலையில் நிறைவடைந்தது. இன்று அதன் முடிவை அவர் அறிவித்தார்.
கொறடாவாக சுனில் பிரபு நீடிப்பது பொருந்தாது என்பதால், ஏக்நாத் ஷிண்டே குழுவின் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது என்று நர்வேகர் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வராதது கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்க முடியாது என்றும் நர்வேகர் விளக்கினார்.
இந்த முடிவு ஏக்நாத் ஷிண்டே குழுவின் 16 எம்.எல்.ஏக்களுக்கு நிம்மதியளித்துள்ளது.
அதேநேரத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஷிண்டே தரப்பு முறையீட்டையும் சபாநாயகர் ஏற்கவில்லை.
சிவசேனாவின் தலைமை கட்டமைப்பு எப்படிப்பட்டது?
“கடந்த ஜூன் 21, 2022 முதல் சிவசேனா கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. இந்த விஷயம் ஜூன் 22 அன்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது. இப்போது “என் முன் உள்ள கேள்வி உண்மையான சிவசேனா எந்தப் பிரிவு என்பதுதான். அதைப் புரிந்துகொள்ள கட்சியின் தலைமைக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு கட்சியின் அமைப்பு விதிகள் பயன்படுத்தப்படும்” என்று ராகுல் நர்வேகர் கூறினார்.
“கடந்த 2018ஆம் ஆண்டில் கட்சி விதிகளில் சிவசேனா கட்சித் தலைவர் என்றும் கட்சித் தலைவர் குறிப்பிடப்பட்டார். கடந்த 1999இல் கட்சித் தலைவர் ‘சிவசேனா பிரமுக்’ என அழைக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டுக்கான தலைமைத்துவ அமைப்பு சிவசேனா கட்சி விதிகளுடன் ஒத்துப்போகவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டின் தலைமைக் கட்டமைப்பு மூன்று வகை தலைவர்களுக்கு அதிகாரங்களை வழங்குகிறது. ஆனால், இந்தப் பிரிவுகள் வேறுபட்டவை. சிவசேனாவின் மிக உயர்ந்த பதவி சிவசேனா தலைவர். கட்சியின் தேசிய செயற்குழுவில் 19 உறுப்பினர்கள் உள்ளனர். 2018 மாற்றங்களின்படி, சிவசேனா கட்சி அதில் 13 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கட்சித் தலைவர் என்பது மிக உயர்ந்த பதவி. ஆனால், சிவசேனாவின் கட்சி விதிகளில் அது இல்லாததால் அதை ஏற்க முடியாது. உத்தவ் தாக்கரேவின் குழுவுடைய கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
கடந்த 2018ஆம் ஆண்டின் புதிய கட்சி விதிகளில் உள்ள கட்சித் தலைவர் பதவி என்பது 1999ம் ஆண்டு விதிகளில் சிவசேனா தலைவர் இருக்கும் பதவியைப் போலவே உள்ளது. மேலும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே குழுவால் கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவதற்கான இறுதி அதிகாரம் கட்சியின் தலைவருக்கு உள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், சிவசேனா கட்சித் தலைவருக்கு எந்தவோர் உறுப்பினரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான கட்டுபாடற்ற உரிமை கிடையாது. ஏனெனில், கட்சித் தலைவர்களுக்கு அந்த உரிமை இருந்தால், பத்தாவது அட்டவணையின் அடிப்படையில் எந்த நபரையும் கட்சியிலிருந்து நீக்கலாம். எனவே ஏக்நாத் ஷிண்டேவை கட்சியிலிருந்து நீக்க உத்தவ் தாக்கரே உரிமை கோருவதை ஏற்க முடியாது” என்று ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.
‘கட்சியில் 2018ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படவில்லை’
உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, உண்மையான சிவசேனா எது என்பதே முக்கியமான பிரச்னை என்று ராகுல் நர்வேகர் கூறினார். கட்சியின் அமைப்பு விதிகள், தலைமைத்துவம், சட்டமன்ற பெரும்பான்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கட்சியில் ஏற்பட்ட பிளவு குறித்துப் பேசிய ராகுல் நர்வேகர், “இந்தச் சம்பவங்கள் இரு பிரிவுகளால் ஏற்பட்டன. 2018ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை உத்தவ் தாக்கரே கூறினார். ஆனால், இந்தச் சம்பவம் தேர்தல் ஆணையத்தின் பதிவில் இல்லை,” என்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு கட்சியின் விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், 1999ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்சி விதிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டதாக சுனில் பிரபு கூறியதாகவும் ஆனால், அப்படி தேர்தல் நடத்தப்படவில்லை என்பது ஆதாரத்தின் மூலம் நிரூபணமானது என்றும் ராகுல் நர்வேகர் கூறினார்.
யாருக்கு பாதகம்?
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்த்து சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா அல்லது உத்தவ் தாக்கரே குழுவைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் முடிவை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில், சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மொத்தம் 34 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் மீதான விசாரணை செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது.
ஷிண்டே தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானியும், தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத்தும் வாதிட்டனர். இந்த விசாரணையின் போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும் பல்வேறு முக்கியமான மற்றும் பரபரப்பான வாதங்களை முன்வைத்தனர்.
தொடக்கத்தில் 16 எம்எல்ஏக்களும், பின்னர் 24 சிவசேனா எம்எல்ஏக்களும் ஏக்நாத் ஷிண்டேவுடன் சூரத் மற்றும் கவுகாத்தி சென்றனர். ஆனால், இந்த எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறவில்லை என்று வாதிட்டனர் ஷிண்டே குழுவின் வழக்கறிஞர்கள்.
கட்சியின் கொறடாவை மீறி, அப்போதைய முதல்வராக இருந்த தனது சொந்தக் கட்சித் தலைவரின் அரசையேக் கவிழ்த்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தார் ஷிண்டே. எனவே, அதனடிப்படையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஷிண்டே குழு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாக்கரே ஆதரவு வழக்கறிஞர் தேவ்தத் காம் வாதிட்டார்.
விசாரணையில் முக்கியமாக கருதப்பட்டவை
விசாரணையின் போது, இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும், கட்சியின் கொறடா, அதை கையாள்வதற்கான சட்ட நடைமுறைகள், 2022 ஜூன் 21 மற்றும் 22 தேதிகளில் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டம், சூரத்தில் இருந்து கவுகாத்திக்கு ஷிண்டே குழு எம்எல்ஏக்களின் பயணத்திற்கு பிறகு பாஜகவுடன் ஆட்சி அமைத்தது, அதன்பின் 2022 ஜூலை 3ஆம் தேதி சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பு ஆகியவை முக்கியமானதாக மாறியது.
இரு குழுக்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் தரப்பு வழக்கை வலுப்படுத்தும் வகையில் சாட்சியமளித்தனர். இதற்குப் பிறகு குறுக்கு விசாரணையின் போதும் தங்களது நிலைப்பாடு சட்டத்துக்கு உட்பட்டது என்பதை நிரூபிக்க முயன்றனர்.
சபாநாயகருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்
இந்த பிரச்னையின் மீது சட்டப்பேரவையின் சபாநாயகர் ராகுல் நர்வேகரே ஜனவரி 10ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, எந்த அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர தகுதியுள்ளவர்கள் என அவர் முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டது.
கட்சித்தாவல் தடை சட்டத்தின் 10வது அட்டவணையின்படி, தகுதிநீக்க வழக்கில் இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு பிறகு முடிவெடுக்கப்படும். இந்நிலையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு, ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அதிலிருந்து சபாநாயகர் அறிவித்துள்ள முடிவை எதிர்த்து அதில் உடன்படாத தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்ய முடியும்.
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு
இதே போன்ற வழக்கு ஒன்று தமிழ்நாட்டு அரசியலிலும் நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சிக்காலத்தில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சித்தாவல் நடவடிக்கை விதிகளின் அடிப்படையில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் முடிவு செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தனர். இதற்கு பின்னால் மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட, அதற்குள் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றம் செல்ல அங்கேயும் சபாநாயகர் முடிவே இறுதி செய்யப்பட அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு மக்களவை தேர்தலோடு சேர்த்து இந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் 8 தொகுதிகளில் அதிமுகவும், 13 தொகுதிகளில் திமுகவும் வெற்றிபெற்றன. ஆனாலும், பெரும்பான்மையை தக்க வைக்க தேவையான இடங்கள் கிடைத்துவிட்டதால் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக ஆட்சியில் தொடர்ந்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்