டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் முருகன் தலைமையில், 14 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். ஆனால், இவர்கள் பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் ‘ஆப்சென்ட்’ ஆனவர்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவினர் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வாக்கு வங்கியை வலுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதிலும் யாத்திரை நடத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி, திமுக, அதிமுக எனப் பல அரசியல் கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையையும் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில், கோவை, கரூர், தேனி, காங்கேயம் உள்படப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் பாஜகவில் இணைந்தனர்.
இவர்களுடன் தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் மற்றும் திமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. ஒருவரும் இணைந்துள்ளனர். இவர்கள் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
பாஜகவில் இணையாதவர் பெயர் வெளியீட்டால் சர்ச்சை
இதுதொடர்பாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள், ‘‘தலைவர் அண்ணாமலை தட்டித் தூக்கிய முன்னாள் எம்எல்ஏக்கள் விவரம்’ என, பாஜகவில் இணைந்தோரின் பட்டியலை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆனால், அந்தப் பட்டியலில் பாஜகவில் இணையாத அவிநாசி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கருப்புசாமி பெயரும் இடம் பெற்றிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தான் பாஜகவில் இணையாமலே தனது பெயரை தவறாகச் சேர்த்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் கருப்புசாமி.
பிபிசி தமிழிடம் பேசிய கருப்புசாமி, ‘‘காரைக்குடியைச் சேர்ந்த எனது நண்பரான எம்எல்ஏ ஒருவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மூலமாக என்னை பாஜகவில் சேருமாறு அக்கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர். மாவட்ட அல்லது மாநில பொறுப்பு கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், நான் என்றுமே அதிமுக தொண்டன் தான், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆதரவால் எம்எல்ஏ-வாக தேர்வான எனக்கு பாஜகவுக்கு செல்ல விருப்பம் இல்லை.
நான் பாஜகவில் சேராமலேயே நான் இணைந்ததாக போஸ்டர்களை பரப்பியுள்ளனர். நான் பாஜகவுக்கு செல்லவில்லை என அதிமுக தலைமைக்கும் தகவல் தெரிவித்துவிட்டேன். அவர்கள் தவறாக என் பெயரைச் சேர்த்துள்ளனர்,’’ என்றார்.
இந்த சர்ச்சை ஒருபக்கமிருக்க, பாஜகவில் இணைந்துள்ள அதிமுக எம்எல்ஏக்களால் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை, இவர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் ‘ஃபீல்ட் அவுட்’ ஆனவர்கள் எனக் கூறி, பாஜகவை அதிமுக மற்றும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
‘அதிமுகவுக்கு பாதிப்பில்லை’
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும் பொள்ளாச்சி எம்எல்ஏவுமான ஜெயராமன், ‘‘பாஜகவில் தற்போது இணைந்துள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் எம்ஜிஆர் காலத்திலேயே அரசியலை விட்டு ‘ஃபீல்ட் அவுட்’ ஆனவர்கள்.
அவர்கள் யாரென்று மக்களுக்கே தெரியாது. இப்படியானவர்கள் பாஜகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த வகையிலும் பின்னடைவு இல்லை, பாதிப்பும் இல்லை,’’ என்றார் அவர்.
‘இது ஒரு நாள் ஷோ – பாஜகவுக்கு பலனளிக்காது!’
அதிருப்தியாளர்களை ஈர்க்கும் பணியில் பாஜக களமிறங்கியுள்ளதா என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் முன்வைத்தோம்.
பிபிசி தமிழிடம் பேசிய ப்ரியன், ‘‘பாஜகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்ட சக்திகள். இவர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் ‘ஆப்சென்ட்’ ஆனவர்கள் என்பதால் இவர்களிடம் வாக்கு வங்கி இல்லை.
அதுமட்டுமின்றி சொந்த கட்சிக்கு உள்ளேயும் மக்களிடமும் இவர்கள் யார் என்றே தெரியாதவர்கள். இவர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று ஜே.பி.நட்டாவை சந்தித்தது எல்லாம் ஒரு நாள் ஷோ, ஒரு `போட்டோ ஷுட்’ அவ்வளவுதான்,’’ என்கிறார் ப்ரியன்.
மேலும், ‘‘இவர்கள் பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு எந்த வகையிலும் பலனளிக்காது. அரசியலில் ஆளுமையுடன், மக்களுக்கு அறிந்த முகமாக உள்ளவர்களைச் சேர்த்தால் ஏதாவது பலனளிக்கும். இவர்களை கட்சியில் இணைத்து, ஏதோ பலரும் பாஜகவை நோக்கி வருகிறார்கள் என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைப்பது எல்லாம் பாஜகவின் வீண் முயற்சிதான்,’’ என்கிறார், மூத்த பத்தரிகையாளர் ப்ரியன்.
‘அவர்களின் அனுபவங்கள் எங்களுக்கு உதவும்’
அதிமுக, திமுக விமர்சனம் குறித்து தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, பாஜகவில் இணைந்தவர்கள் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், களத்தில் நின்று வென்றவகள், அரசியல் அனுபவம் உள்ளவர்கள் என்று கூறினார்.
மேலும், “அவர்களது அனுபவம் பாஜகவுக்கு உதவும். அவர்களுக்கு வயது ஆகியிருக்கலாம், ஆனாலும் அரசியல் அனுபவம் உள்ளவர்கள்.
பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களைத் தொண்டர்களாக மட்டுமே பார்க்கிறது. ஆனால், மற்ற கட்சியினர் தொண்டர்களைத் தாங்கள் பயன்படுத்தும் இயந்திரமாகப் பார்ப்பதால்தான், இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர்,’’ என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்