நீங்கள் ஒரு பாலிவுட் பிரபலமாக இருந்தால், செல்லுமிடமெல்லாம் கவனத்தை ஈர்த்து விடுவீர்கள்.
சில நேரங்களில், இந்த கவன ஈர்ர்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் தியா மிர்சா.
உதாரணமாக, அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கும் காலநிலை மாற்றம் குறித்த பிரச்சாரம் போன்ற சமயங்களில் அவ்வாறு செய்கிறார்.
ஆனால், சில நேரங்களில் இது சிக்கலாகி விடலாம்.
பிபிசி 100 பெண்களுக்கான நேர்காணலுக்கு மத்தியில், காலநிலை மாற்றம் குறித்து அவர் உரையாடிக்கொண்டிருந்து பொது, ஹோட்டல் அறையின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
நேர்காணலுக்கு யார் அறை எடுத்துள்ளது என்று தெரிந்து கொண்ட பணியாளர்கள், மிர்சாவின் படங்களை கொலேஜ் செய்து அவருக்கு பரிசளிப்பதற்காக வந்திருந்தனர்.
அதைப் பணிவுடன் ஏற்றுக்கொண்ட மிர்சா, அவர்கள் சென்ற உடனே காலநிலை மாற்றம் குறித்த தனது உரையை மீண்டும் தொடர்ந்தார்.
அப்போது சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தும் மிகப்பெரிய விஷயம் என்று அவர் நம்புவதைப் பற்றிப் பேசினார்.
“காலநிலை சார்ந்த மிகப்பெரும் பிரச்னை, மாற்றத்தை மறுக்கும், அகங்காரம் பிடித்த ஆண்களின் கூட்டம்தான்,” என்று கூறுகிறார். “இத்தகைய ஆண்கள்தான் பெரும் நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகின்றனர்.”
“அவர்களின் செயல்கள் நமது பூமியையும் மக்களையும் அழித்து வருவது அவர்களுக்கே தெரியும். அதனால் அவர்கள் மாறாமல் இருப்பதற்கு எந்த காரணமும் சொல்ல முடியாது,” என்கிறார்.
பிபிசி 100 பெண்கள்
ஒவ்வொரு ஆண்டும் உலகின் நம்பிக்கையூட்டும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிடுகிறது. இந்தாண்டின் பட்டியலில் தியா மிர்சா இடம்பிடித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு இந்தப் பட்டியல் காலநிலை மாற்றம் குறித்து இயங்கி வரும் பெண்கள் மீது கவனம் செலுத்தியுள்ளது.
எங்களது பெரும்பகுதியான உரையாடல் காலநிலை மாற்றத்தோடு தொடர்புடைய பாலின சமத்துவம் மற்றும் ஒரு திரைப்பட நடிகையாக அவரது அனுபவம் குறித்து அமைந்திருந்தது.
2000-ஆம் ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் அழகி போட்டியின் டைட்டிலை வென்ற போது மிர்சாவுக்கு 19 வயது தான்.
மிகவிரவாக அவர் மாடலிங் துறையில் பணிசெய்யத் துவங்கி விட்டார். ஆனால் அவர் மிக அழகாக இருப்பதாகவும், மிகவும் சிவப்பாக இருப்பதாகவும், மாடலிங் செய்யத் தேவையான உயரம் இல்லை என்றும் சொல்லப்பட்டது.
“என்னைப் பற்றி எதுவுமே தெரியாத நபர்களின் இது போன்ற பேச்சுக்களாலோ, என்னை ஒரு வட்டத்திற்குள் அடைப்பதாலோ, நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று யாரும் சொல்வதாலோ நான் பாதிக்கப்படுவதாக எனக்கு தோன்றவில்லை,” என்கிறார் மிர்சா.
தன்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் பாலின பாகுபாடுகளை எதிர்கொண்டதாகக் கூறுகிறார்.
“தாமதமாக வருவது, தொழில்ரீதியான ஒழுக்கத்தைக் கடைபிடிக்காமல் இருப்பது போன்றவற்றில் சக ஆண் நடிகர்களுக்குச் சலுகைகள் கிடைத்தன. அந்த சமயங்களில் சினிமா செட்களில் காணப்பட்ட படிநிலைகள் அனைத்துமே முழுமையாக ஆணாதிக்கத்தனமானவை. நான் இந்தத் துறையில் பணியாற்றத் துவங்கிய போது வெகு சில பெண்களே இங்கு இருந்தனர். பெண்களுக்கான வேன் சிறியதாக இருக்கும். அதே போல் வெளியூருக்கு ஷூட்டிங் செல்லும்போது பெண்களுக்குக் கழிவறை கூட இருக்காது. தனியுரிமையே இருக்கவில்லை,” என்கிறார் அவர்.
ஏன் இந்திய திரைத்துறையில் கடந்த 100 வருட வரலாற்றில் வஹீதா ரஹ்மான் போன்ற சில பெண்களுக்கு மட்டுமே தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது என்று அவரிடம் நான் கேட்டபோது, வஹீதா ஒரு சகாப்தம், அவருக்கே மிக தாமதமாகத்தான் அங்கீகாரம் கிடைத்தது, என்கிறார். மேலும், இன்றுகூட திரைப்படங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவுதான் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் எண்ணிக்கை உயராத வரை, இங்கு எதுவும் முன்னேறாது, என்று பதிலளித்தார் தியா மிர்சா.
‘இதுபோன்ற படம் எடுக்க 110 வருட்ங்கள் ஆனது!’
இத்தகைய அனுபவங்கள் இருந்தபோதும், தனது எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையாக இருப்பதாகவும், பழைய நிலை மாறுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கூறுகிறார் மிர்சா.
“ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பெண்களுக்கு, ஆண்களுக்கு வழங்கப்படும் முக்கிய பாத்திரங்கள் வழங்கப்படாத ஒரு காலகட்டம் இந்திய சினிமாவில் இருந்தது,” என்கிறார் அவர்.
“சமீபத்தில் தான் நாங்கள் நான்கு வெவ்வேறு வயதினைச் சேர்ந்த மோட்டார் பைக் பயணம் செய்யும் பெண்கள் குறித்த அழகான கதை ஒன்றை ‘தக் தக்’ என்ற பெயரில் படமாக வெளியிட்டோம். இது போன்ற கதைகளைச் சொல்வதற்குக் கூட இந்திய சினிமா துறைக்கு 110 வருடங்கள் ஆகியுள்ளது. இது போன்ற பாத்திரத்தில் நடிக்க நான் 23 வருடங்கள் காத்திருந்திருக்கிறேன்,” என்கிறார்.
முன்னாள் அழகிப் போட்டி வெற்றியாளராக இருக்கும் மிர்சா, இளம்பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்?
“ யாரும் உங்களை உடல் ரீதியாக உருவகப்படுத்த அனுமதிக்காதீர்கள். நான் சௌகரியமாக உணராத காரணத்தால் மிஸ் ஆசியா பசுபிக் போட்டியின் போதே நீச்சல் உடை அணிய மறுத்தேன்.”
திரைத்துறைக்கு வெளியிலும், மற்ற இடங்களில் பாலின சமத்துவத்தை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளார் தியா.
வழக்கங்களை உடைத்த திருமணம்
2021-ஆம் ஆண்டு பாரம்பரிய இந்திய முறைப்படி அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிறு மாற்றத்தோடு. மற்ற திருமணங்களை போல இல்லாமல், இவரது திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் ஒரு பெண்.
“என்னுடைய நண்பர் திருமணத்தில் இந்தப் பெண் புரோகிதர் செய்த சடங்குகளைப் பார்த்து நான் மிகவும் வியந்தேன். எனக்கும் அது தான் வேண்டும் என்று நினைத்தேன். இந்த முடிவு, இந்தியாவில் ஏன் இன்னும் பெண்கள் புரோகிதர் உள்ளிட்ட சில பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்ற பெரிய விவாதத்தையே கிளப்பி விட்டது,” என்று கூறுகிறார் மிர்சா.
வழக்கத்தை மட்டும் அவர் உடைக்கவில்லை. திருமணத்தின் போது மணமகளை அவரது தந்தை கையளிக்கும் ‘கன்னியாதானம்’ என்ற சடங்கையும் இவர் தனது திருமணத்தில் செய்ய மறுத்துவிட்டார்.
“தூக்கிக் கொடுப்பதற்கு என் மகள் ஒன்றும் பொருள் கிடையாது, என என்னுடைய அம்மா வழி தாத்த அடிக்கடி கூறுவார். இது மிகவும் துணிச்சலான சிந்தனை. அதை பின்பற்றி என்னுடைய திருமணத்தின் போதும் என் அம்மா கன்னியாதானம் சடங்கை நடத்தவில்லை,” என்கிறார் தியா.
ஒரு பாலிவுட் செய்தியாளராக, நான் தியா மிர்சாவின் வாழ்க்கையை பின் தொடர்ந்து வந்திருக்கிறேன். நடிகர், நடிகைகளின் கவர்ச்சி மற்றும் மினுமினுப்பில் கவனம் செலுத்த முனைப்பு காட்டும் மக்கள், அவர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்வதில்லை.
‘விரக்தியிலும் நம்பிக்கை இருக்கிறது’
இயற்கைச் சூழல் நிறைந்த தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான தியா மிர்சா, 20 ஆண்டுகளாக முழு நேரம் ஈடுப்பட்டிருந்த மாடலிங், சினிமாவைவிட காலநிலை மாற்றம் குறித்து அதிக கவனம் செலுத்துவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
2017-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் நல்லெண்ணத் தூதரானார் தியா மிர்சா. இதன்மூலமாக சுற்றுச்சூழல் திட்டங்கள் குறித்து பரப்புரைகளை மேற்கொண்டார்.
பிபிசியுடனான நேர்காணலின் போது தனது குழந்தைப்பருவ நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்ந்த தியா, நமது உறவினர்கள், சகோதரர்கள் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி நாம் மீண்டும் பயன்படுத்துவதில் எந்த அவமானமும் அப்போது இருந்ததில்லை, என்றார்.
தியா, அண்மையில் தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை பிளாஸ்டிக் பொருட்கள் ஏதுமின்றி சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடியிருந்தார். பிறந்தநாள் பார்ட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அலங்கார பொருட்கள் அனைத்தும் மறுபயன்பாட்டுக்காக சேமிக்கப்பட்டன.
“பேசுவது மட்டுமல்லாமல், அனைவருக்குமான முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும்,” என்கிறார் தியா.
ஹோட்டல்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டைத் தவிர்க்கும் தியா, மறுமுறை உபயோகம் செய்யக்கூடிய உலோக தண்ணீர் பாட்டிலை பயன்படுத்துகிறார்.
“வளங்குன்றா வாழ்க்கை முறை பற்றிப் பேசும் நான், அதை எப்படி பின்பற்றாமல் இருக்க முடியும். அப்படிச் செய்யாமல் இருந்தால் இளைஞர்களிடம் சூழல் பாதுகாப்பு குறித்து பேச எனக்கு உரிமை ஏதுமில்லாமல் போய்விடும்,” என்கிறார் அவர்.
மேலும், “சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றிப் பேசும் போது விரக்தி ஏற்படுகிறது. இப்போது உலகம் முழுவதும் நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது மனம் சோர்வடைகிறது,” என்கிறார் தியா.
“ஆனால் இதைச் சரிசெய்ய இளைஞர்கள் காட்டும் தீவிரம், அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், அவர்களின் பணி, அவர்களின் பாசம், பரிவு ஆகியவற்றால் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது,” என்கிறார்.
நேர்காணலை முடிந்ததும் தனது மகனைக் காணக் கத்திருந்த தியாவிடம் என்னுடைய கடைசி கேள்வியை முன்வைத்தேன்.
நடிகை, காலநிலை பாதிப்புகள் குறித்த பரப்புரையாளர், ஐ.நா. நல்லெண்ணத் தூதர் என பல முகங்கள் உங்களுக்கு உள்ளன. இதில் உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது எது?
“அம்மாவாக இருப்பது”, என்று உடனே பதிலளித்தார்.
“இதன்மூலம் வருங்கால உலகை கட்டமைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது”.
கூடுதல் தகவல் உதவி – அமிலியா பட்டர்ஃபிளை]
நன்றி
Publisher: பிபிசிதமிழ்