மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும் என, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
“வங்கதேசத்துடனான எல்லையில் எப்படி வேலி அமைக்கப்பட்டுள்ளதோ”, அதேபோன்று 1,643 கி.மீ. (1,020 மைல்) நீளமுடைய மியான்மர் எல்லையிலும் வேலி அமைத்துப் பாதுகாப்போம்” என்று அவர் தெரிவித்திருந்தார். வங்கதேச எல்லை மியான்மரை விட இரு மடங்கு நீளமானது.
இந்தியா மற்றும் மியான்மர் எல்லையில் வசிப்பவர்கள் விசா இல்லாமல் 16 கி.மீ. தூரம் பரஸ்பரம் பயணிக்க அனுமதிக்கும் ஆறு வருட சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை (free movement agreement) ரத்து செய்வது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அமித் ஷா கூறினார். எல்லையில் வேலி எப்படி அமைக்கப்படும், எந்த காலக்கெடுவுக்குள் கட்டப்படும் என்பது பற்றிய சில விவரங்களையும் அவர் வழங்கினார்.
ஆனால், இந்த நடவடிக்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறும் வல்லுநர்கள் சிலர், மலைப்பாங்கான நிலப்பரப்பில் வேலி போடுவது சாத்தியமற்றது என்று கூறுகின்றனர். இந்தியாவின் இந்த திட்டம், பல தசாப்தங்களாக எல்லைப் பகுதியில் உள்ள மக்களிடையே நிலவும் சமநிலையை சீர்குலைத்து, அண்டை நாடுகளுடன் பதற்றத்தைத் தூண்டும்.
அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு வடகிழக்கு இந்திய மாநிலங்களை உள்ளடக்கிய மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கை இரண்டு முக்கிய முன்னேற்றங்களின் பின்னணியில் வந்ததாகத் தெரிகிறது.
முதலாவதாக, பிப்ரவரி 2021-ல் ராணுவ சதிக்குப் பின்னர் மியான்மரில் மோதல்கள் அதிகரித்திருப்பது இந்திய நலன்களுக்கு அதிக அபாயத்தை ஏற்படுத்தியது. ஐநாவின் கூற்றுப்படி, இந்த மோதலால் சுமார் 20 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சமீபத்திய வாரங்களில், இனக் கிளர்ச்சியாளர்கள் சின் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான பலேத்வாவைக் கைப்பற்றியதாகக் கூறி, மியான்மரில் இருந்து இந்தியாவுக்கான முக்கிய பாதையை சீர்குலைத்தனர் .
இந்தியா சொல்வது என்ன?
இரண்டாவதாக, மியான்மருடன் 400 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்ளும் மணிப்பூரில் கடந்தாண்டு இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மையான மெய்தேய் மற்றும் சிறுபான்மை பழங்குடியின குகி மக்களுக்கு இடையிலான மோதல்களில் 170-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
“பெரும்பாலான சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்” பற்றிப் பேசியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக தலைமையிலான மணிப்பூர் அரசாங்கம், “மியன்மரைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சட்டவிரோத கசகசா பயிரிடுபவர்கள் மற்றும் மணிப்பூரில் புலம்பெயர்ந்த போதைப்பொருள் வியாபாரிகளால் வன்முறை தூண்டப்பட்டது” என்று கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மியான்மர் ராணுவத் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து, இந்திய எல்லைப் பகுதிகள் ” கடுமையாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளன ” என்று மியான்மர் வெளியுறவு அமைச்சர் தான் ஸ்வேயிடம் தெரிவித்தார். “[எல்லை] நிலைமையை மோசமாக்கும் எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும்” என்று ஜெய்சங்கர் அப்போது கூறினார். மேலும் “மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல்” குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
அமெரிக்க சிந்தனை மையமான வில்சன் சென்டரின் மைக்கேல் குகல்மேன், கூறுகையில், எல்லைக்கு வேலி அமைக்கும் நடவடிக்கை, “இந்தியாவின் கிழக்கு எல்லையில் வளர்ந்து வரும் இருமுனை பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றிய இந்தியாவின் உணர்வால் இயக்கப்படுகிறது” என்று நம்புகிறார்.
“மியான்மரில் ஆழமடைந்து வரும் மோதல் விரிவடையாமல் மட்டுப்படுத்த இந்தியா விரும்புகிறது. மேலும் ஏற்கனவே கொந்தளிப்பில் உள்ள மணிப்பூருக்கு மியான்மரில் இருந்து அதிகமான அகதிகள் நுழையும் அபாயத்தைக் குறைக்க வேண்டும் என இந்திய அரசு நினைக்கிறது” என்று குகல்மேன் பிபிசியிடம் கூறினார்.
குகி அகதிகளின் வருகைதான் மோதலுக்குக் காரணமா?
இந்த காரணத்தின் சரியான தன்மையை சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மியான்மரில் இருந்து குகி அகதிகளின் வருகையே அங்கு மோதலுக்குக் காரணம் என்று மணிப்பூர் அரசாங்கம் கூறுகிறது. ஆனாலும், கடந்தாண்டு ஏப்ரல் இறுதிக்குள் மியான்மரில் இருந்து 2,187 புலம்பெயர்ந்தோரை மட்டுமே அரசுக்குழு அடையாளம் கண்டுள்ளது.
“மியான்மரில் இருந்து பெருமளவிலான சட்டவிரோத புலம்பெயர்வு நிகழ்வதாக கூறுவது தவறானது. `குகி பழங்குடியினர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் ‘வெளிநாட்டினர்’ மற்றும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் என்றும் அவர்களின் எதிர்ப்புக்கு மியான்மரில் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது` எனும் கூற்றை ஆதரிக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது” என, மியான்மருக்கான இந்திய முன்னாள் தூதர் கௌதம் முகோபாதயா கூறினார்.
“இதற்கான தர்க்கமும் ஆதாரமும் மிகவும் குறைவாகவே உள்ளன. குகி பழங்குடியினர் மணிப்பூரில் பல காலமாக வசித்து வருகின்றனர். சுதந்திர நடமாட்ட ஒப்பந்தம், வணிக ரீதியாக பயனடைந்த மெய்தேய் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.
இந்த பிராந்தியத்தில் அனுபவம் கொண்ட, பெயர் குறிப்பிட விரும்பாத, ஓய்வு பெற்ற மூத்த ராணுவ அதிகாரி, மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படுவதற்கான அவசியம், பொதுமக்கள் புலம்பெயர்வு காரணம் அல்ல, மாறாக வடகிழக்கில் இருந்து பல இந்திய கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரின் எல்லை கிராமங்கள் மற்றும் நகரங்களில் தங்கள் முகாம்களை நிறுவியுள்ளதுதான் என்றார்.
எதிர்ப்பை சந்திக்க வாய்ப்பு
பல தசாப்தங்களாக இந்தியாவின் வடகிழக்கு பகுதி பிரிவினைவாத கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கு தேடுதல் மற்றும் கைப்பற்றும் அதிகாரங்களையும் நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளுக்குக் காரணமான வீரர்களைப் பாதுகாக்கவும் உள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) சர்ச்சைக்குரியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் மறைந்திருக்கும் இந்திய கிளர்ச்சியாளர்கள் எளிதில் எல்லையைத் தாண்டி “மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடலாம்” என்று அவர் கூறினார்.
இருப்பினும், எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கை எதிர்ப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவும் மியான்மரும் வரலாற்று ரீதியாகவே மத, மொழி மற்றும் இன உறவுகளைக் கொண்டுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பேர் மியான்மரில் வாழ்கின்றனர். இது இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் மூலம் அதிக பொருளாதார ஒருங்கிணைப்பை நாடுகிறது.
இந்தக் கொள்கையின் கீழ், சாலைகள், உயர் கல்வி, சேதமடைந்த பகோடாக்கள் எனப்படும் பெளத்த சமயக் கோவில்களை மறுசீரமைத்தல் போன்ற பணிகளுக்காக மியான்மருக்கு இந்தியா 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மேம்பாட்டு உதவிகளை வழங்கியுள்ளது. இதனை, பெரும்பாலும் மானிய வடிவில் வழங்கியுள்ளது.
மிக முக்கியமாக, இனம் மற்றும் கலாசாரத்தை பகிர்ந்துள்ள மக்களை எல்லை பிரிக்கிறது. மிசோரமில் உள்ள மிசோ மக்கள் மற்றும் மியான்மரில் உள்ள சின்ஸ் மக்கள் இன ரீதியாக உறவினர்களாவர். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மிசோரத்தின் எல்லையாக உள்ள மிசோரத்தின் சின் மாநிலத்தில் அவர்கள் எல்லை தாண்டிய இணைப்புகளுடன் உள்ளனர். எல்லையின் இருபுறமும் நாகாக்கள் உள்ளனர். மியான்மரில் இருந்து பலர் இந்தியாவில் உயர்கல்வி படிக்கின்றனர். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வாலோங்கிற்கு வேட்டைக்காரர்கள் பல நூற்றாண்டுகளாக எல்லை தாண்டி வந்து சென்றுள்ளனர்.
மத்திய அரசின் உத்தரவுகளை மீறி, மியான்மரில் உள்நாட்டுப் போரில் இருந்து வெளியேறிய 40,000-க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு மிசோரம் அடைக்கலம் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.
பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ சமீபத்தில் கூறுகையில், “நாகாலாந்து மியான்மரின் எல்லையில் இருப்பதால், மக்களுக்கான பிரச்னையைத் தீர்ப்பது மற்றும் ஊடுருவலைத் தடுப்பது எப்படி என்பது குறித்த சூத்திரத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில் இருபுறமும் நாகர்கள் உள்ளனர்” என்கிறார் அவர்.
வேலி அமைப்பதில் உள்ள சவால்கள் என்ன?
மலை மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த எல்லையில் வேலி அமைப்பது குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
“எல்லையில் உள்ள அனைத்து மலைகள் மற்றும் நிலப்பரப்பின் தொலைதூரத்தைக் கருத்தில் கொண்டு முழு எல்லையிலும் வேலி அமைப்பது சாத்தியமற்றது. இது வங்கதேசத்தின் எல்லையில் வேலி அமைப்பது போல் இருக்காது” என்று மியான்மரின் பிரபல நிபுணர் பெர்டில் லின்டர் என்னிடம் தெரிவித்தார்.
“வேலி அமைப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதனை கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். எல்லையின் சில இடங்களில் வேலி அமைத்தாலும், உள்ளூர் மக்கள் அதைச் சுற்றி வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்” என்கிறார் அந்த அதிகாரி.
பின்னர் ஒரு நுட்பமான ராஜ தந்திர கேள்வி உள்ளது. மியான்மருடனான தொடர்புகளில் டெல்லி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரத்தில் எல்லை வேலி அமைப்பது ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று குகல்மேன் கூறுகிறார்.
“எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, மியான்மர் ராணுவ ஆட்சிக்குழுவின் ஆதரவை இந்தியா நாடுகிறது. மியான்மருடன் கலந்தாலோசித்து வேலி அமைப்பது, ஒருதலைபட்சமாக திட்டத்தைத் தொடர்வதால் ஏற்படும் பதட்டங்களின் அபாயத்தைக் குறைக்கும்,” என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியா ஏற்கனவே பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பதட்டங்களைக் கொண்டுள்ளது. அரசியல் பதட்டங்கள், பிராந்திய மோதல்கள், போர், பயங்கரவாதம் ஆகியவற்றால் இந்த பதற்றம் உருவாகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனா, மியான்மருடன் வலுவான பொருளாதார தொடர்புகளைக் கொண்டுள்ளது.
“இந்தியா தனது பிராந்திய அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த உழைத்து வருவதால், சீனாவில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில், எல்லை சவால்கள் விரும்பத்தகாத குறுக்கீடு ஆகும். ஆனால் அவற்றை வெறுமனே விட்டுவிட முடியாது” என்று குகல்மேன் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்