எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது பலரின் வாழ்நாள் கனவு என்றே சொல்லலாம். ஆனால், அப்படி எளிதாகவெல்லாம் அதில் ஏறிவிட முடியாது. அதில் ஏறுவதற்கென்று பல வழிமுறைகளும் விதிமுறைகளும் உள்ளன.
அப்படி சமீபத்தில் புதிய விதிமுறை ஒன்றும் போடப்பட்டுள்ளது. அதன்படி, இனி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் தங்களது மலத்தை அகற்றுவதற்கான பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்தப் பைகளில் மலம் கழித்து பின்னர் அடித்தளத்தில் உள்ள முகாமில் (Base Camp) கொண்டு வந்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பசாங் லாமு கிராமப்புற நகராட்சியின் தலைவர் மிங்மா ஷெர்பா, “எங்களது மலைகளில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
எவரெஸ்ட்டின் பெரும்பகுதியை நிர்வகித்து வரும் இந்த நகராட்சி, சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வெப்பநிலையின் தீவிரம் காரணமாக, எவரெஸ்டில் எஞ்சியிருக்கும் கழிவுகள் முழுமையாகச் சிதைவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனித மலங்கள் பாறைகள் மீது சிதறிக் கிடப்பதாகவும், அது மலையேறுபவர்களுக்கு உடல்நலக் கோளாறை உண்டு செய்வதாகவும் புகார்கள் வருவதாகக் கூறுகிறார் மிக்மா.
எனவே எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதற்கு அருகில் உள்ள லோட்சே சிகரத்தின் மீது ஏறுபவர்கள் அடித்தள முகாம்களில் மலம் சேகரிக்கும் பைகளை வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பைகள் மலையேறி திரும்பியவுடன் முகாமினரால் சோதனை செய்யப்படும்.
மலையில் எங்கு மலம் கழிப்பது?
மலையேறும் பருவத்தில் இங்கு வரும் மலையேறுபவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை இங்குள்ள முகாம்களில் செலவிடுகின்றனர். இங்கு கூடாரங்களில் அமைக்கப்பட்ட கழிவறைகள் உள்ளன. இங்கு கழிவுகள் பேரல்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.
ஆனால், மலையேறுபவர்கள் தங்களது ஆபத்தான பயணத்தைத் தொடங்கியவுடன் நிலைமை கொஞ்சம் சிக்கலாகி விடும். அதற்குக் காரணம், பெரும்பாலான மலையேறிகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் நிலத்தில் குழி தோண்டி மலம் கழிப்பார்கள்.
ஆனால் மலை மீது உயரமாகச் செல்லச் செல்ல சில இடங்களில் பனி குறைவாக இருக்கும். அதனால், அவர்கள் வெட்டவெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
மிகவும் குறைந்த மலையேறிகளே மலத்தைச் சேகரிக்கும் மக்கும் பைகளைக் கொண்டு வருகிறார்கள். இவை மக்க ஒரு சில வாரங்கள் ஆகும்.
இந்தப் பகுதியில் உள்ள எவரெஸ்ட் மற்றும் பிற மலைகளில் குப்பை மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், நேபாள ராணுவத்தின் வருடாந்திர தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு தூய்மைப்படுத்தும் நிகழ்வுகளும் இந்தப் பகுதியில் அதிகரித்து வருகின்றன.
‘திறந்தவெளி கழிவறை’
இந்தக் கழிவுகள் குறித்துப் பேசிய அரசு சாரா அமைப்பான சாகர்மாதா மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் (SPCC) தலைமைச் செயல் அதிகாரி சிரிங் ஷெர்பா, “இங்கு கழிவுகள் ஒரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக எட்ட முடியாத உயர்நிலை முகாம்களில் அது முக்கியப் பிரச்னையாகவே உள்ளது,” என்கிறார்.
இதுகுறித்த துல்லியமான கணக்கீடுகள் இல்லையென்றாலும், இவரது அமைப்பின் மதிப்பீட்டுப்படி, எவரெஸ்ட் அடிவாரத்தில் உள்ள முதல் முகாம் மற்றும் உச்சிக்குச் செல்லும் வழியிலுள்ள நான்காவது முகாமுக்கு இடையில் மூன்று டன் மனித கழிவுகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
“அவற்றில் பாதி, முகாம் நான்கு என அழைக்கப்படும் சவுத் கோல்(South Col) பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது,” என சிரிங் கூறுகிறார்.
எவரெஸ்டிற்கு செல்வதற்கான பயணங்களை ஏற்பாடு செய்பவரும், சர்வதேச மலை வழிகாட்டியுமான ஸ்டீபன் கெக், சவுத் கோல் பகுதி “திறந்தவெளி கழிப்பறை” என்ற பெயரைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
எவரெஸ்ட் மற்றும் லோட்சே சிகரங்களை அடைவதற்கு முன் 7,906 மீட்டர் (25,938 அடி) உயரத்தில் அமைந்துள்ள சவுத் கோல், அடித்தள பகுதியாகச் செயல்படுகிறது. இங்குள்ள நிலப்பரப்பு தீவிரமான காற்று வீசும் இடமாக இருக்கும்.
கெக் கூறுகையில், “அங்கு மிக அரிதாகவே பனி காணப்படுவதால், உங்களால் இந்த இடம் முழுவதும் மனித மலங்களைப் பார்க்க முடியும்” என்றார்.
மார்ச் மாதம் மலையேறும் பருவம் தொடங்கவுள்ளது. எனவே இங்கு 400 மலையேறுபவர்கள் மற்றும் 800 உதவி ஊழியர்கள் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்காக பசாங் லாமு நகராட்சியின் கழிவுகளை நிர்வகிக்கும் எஸ்பிசிசி (SPCC) அமைப்பு அமெரிக்காவில் இருந்து சுமார் 8,000 மலம் சேகரிக்கும் பைகளை வாங்குகிறது.
இந்த மலப் பைகளில் மனித மலத்தைத் திடப்படுத்தி, மணமற்றதாக மாற்றும் ரசாயனங்கள் இருக்கும். ஒரு மலையேறுபவர் ஒரு நாளைக்கு தோராயமாக 250 கிராம் கழிவுகளை வெளியேற்றுவார் எனவும், மலை உச்சியை அடைவதற்காக மேலே உள்ள முகாம்களில் இவர்கள் இரண்டு வாரம் வரை இருப்பார்கள் என்றும் கூறுகிறார் சிரிங்.
“இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் இரண்டு பைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக” தெரிவிக்கிறார் அவர். ஒவ்வொரு பையையும் ஒருவர் ஐந்து முதல் ஆறு முறை வரை பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.
நேபாள எக்ஸ்பெடிஷன் ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் தம்பர் பராஜூலி இதுகுறித்துக் கூறுகையில், “நிச்சயமாக இதுவொரு நேர்மறையான விஷயம், இந்தத் திட்டத்தை வெற்றி பெறச் செய்ய எங்கள் பங்கை நாங்கள் செய்வோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், இந்தத் திட்டத்தை முதலில் எவரெஸ்ட் சிகரத்தில், ஒரு முன்னோடித் திட்டமாகக் கொண்டு வர வேண்டும். பின்னர் மற்ற மலைகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று தனது அமைப்பே பரிந்துரைத்ததாகக் கூறினார்.
இங்கு 8,000 மீட்டருக்கு மேல் உள்ள 14 மலைகளையும் ஏறி சாதனை படைத்த முதல் நேபாளியான மிங்மா ஷெர்பா, மனிதக் கழிவுகளைக் கையாள இதுபோன்ற பைகளைப் பயன்படுத்துவது, மற்ற மலைகளிலும் முயன்று சோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
நேபாள மலையேறும் சங்கத்தின் ஆலோசகராக இருந்து வரும் மிங்மா இதுகுறித்துக் கூறுகையில், “டெனாலி மலையிலும் (வட அமெரிக்காவின் மிக உயரமான சிகரம்) மற்றும் அண்டார்டிக்கிலும் மலையேறுபவர்கள் இதுபோன்ற பைகளைப் பயன்படுத்துகின்றனர்,” என்று குறிப்பிடுகிறார்.
இதே தகவலைக் கூறிய ஸ்டீபன் கெக்கும், இந்தத் திட்டம் மலைகளைச் சுத்தப்படுத்த உதவும் என்று கூறுகிறார்.
நேபாள அரசு கடந்த காலங்களில் மலையேறுதல் தொடர்பாகப் பல விதிகளை அறிவித்தாலும், அவற்றில் பல சரியாக அமல்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அதற்கு ஒரு முக்கியக் காரணமாக களத்தில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இல்லாதது கூறப்படுகிறது. அடித்தள முகாம்களில் பயணக் குழுக்களுடன் அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும் ஆனால் அவர்களில் பலர் வருவதே இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
பசாங் லாமு நகராட்சியின் தலைவர் மிங்மா இதுகுறித்துப் பேசுகையில், “அரசு சார்ந்த யாரையும் அடித்தள முகாம்களில் காண முடிவதே இல்லை. இதுவே அனுமதியின்றி மலைகளில் ஏறுதல் உள்ளிட்ட அனைத்து வகையான முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது,” என்று கூறுகிறார்.
“ஆனால் அந்த நிலை இப்போது மாறும். நாங்கள் ஒரு தொடர்பு அலுவலகத்தை உருவாக்குவோம். அதன் மூலம் விதிமுறைகளைப் பின்பற்றுவது, மலை ஏறுபவர்கள் தங்கள் மலத்தை மீண்டும் கொண்டு வருவதை உறுதிப்படுத்துவது உள்ளிட்டவற்றைக் கண்காணிப்போம்,” என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்