4 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பிபிசியின் நேரலைப் பக்கங்களின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
தெலங்கானா வாக்கு எண்ணிக்கை
மொத்தம் 119 இடங்கள் இருக்கும் தெலங்கானாவில் 60 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை. தேர்தலில் சுமார் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தெலங்கானாவில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது பி.ஆர்.எஸ். (முன்பு டி.ஆர்.எஸ்.). தான் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகக் களமிறங்கியது அந்தக் கட்சி.
ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த முறை, பி.ஆர்.எஸ்-க்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.
பா.ஜ.க. 111 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. இது தவிர ஏ.ஐ.எம்.ஐ.எம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்தில் இருந்தன.
பாரத் ராஷ்ட்ர சமிதி – காங்கிரஸ் கூட்டணி – பா.ஜ.க. கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுவதைப் போலத் தோற்றம் இருந்தாலும், களத்தில் பாரத் ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
ராஜஸ்தான் வாக்கு எண்ணிக்கை
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று (டிச. 03) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் மொத்தம் 199 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 100 இடங்கள் பெறவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகிறது. தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 199 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த தேர்தலிலும் காங்கிரஸ் – பாஜக இரு கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீதான அதிருப்தி நிலவுவதாக தேர்தல் பிரசாரங்களில் பாஜக பிரதானமாக முன்வைத்தது.
மத்தியப் பிரதேசம் வாக்கு எண்ணிக்கை
மத்திய பிரதேச சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (டிச. 03) 8 மணிக்குத் தொடங்குகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் பெறவேண்டும்.
இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.கவும் தனித்துப் போட்டியிட்டன. இரு கட்சிகளுமே 230 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (பி.எஸ்.பி) துலேஷ்வர் சிங் மார்க்கம் தலைமையிலான கோண்ட்வானா கணதந்திரக் கட்சியும் (ஜி.ஜி.பி) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஜிஜிபி கட்சியானது, கோண்ட் இன மக்களுக்கென தனியாக கோண்ட்வானா என்ற மாநிலத்தை அமைக்க வேண்டுமெனப் போராடிவரும் கட்சி. இந்தக் கூட்டணியில் ஜிஜிபி 52 இடங்களிலும் பிஎஸ்பி 178 இடங்களிலும் போட்டியிட்டது.
சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் இணைந்து போட்டியிடவே விரும்பியது. ஆனால், அது நடக்காத நிலையில் 80 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. சந்திரசேகர ஆஸாத் தலைமையிலான ஆஸாத் சமாஜ் கட்சி 80 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 69 இடங்களிலும் போட்டியிட்டன. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் சில இடங்களில் போட்டியிட்டன.
இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கே இருக்கிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்