யுக்ரேன் போரில் ரஷ்ய தளபதிகளின் தவறான போர் உத்திகள் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ரஷ்ய படைகளின் குற்றச்சாட்டு பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
போருக்கு சென்ற போது தங்களது மூத்த அதிகாரிகள் தங்களை ‘இறைச்சி’ என்று அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர் ரஷ்ய ராணுவ வீரர்கள்.
‘தகுதியற்ற’ தளபதிகள் மற்றும் அவர்களது ‘மீட்-கிரைண்டர்’ உத்திகள் யுக்ரேன் போரில் ஏற்பட்டுள்ள ரஷ்ய தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளது.
இந்தப் போர் தொடங்கியபோது, ரஷ்யா தனது 155-ஆவது கடற்படை மற்றும் காலாட்படையை ஒரு உயர்தர பிரிவாகக் கருதியது. ஆனால் போர் முன்னேற்றம் அடைந்த சமயத்தில் தான், இந்தப் பிரிவின் பலவீனங்கள் போர்க்களத்திலேயே அம்பலமாக தொடங்கின.
பிபிசி புலனாய்வின் படி, இந்த படைப்பிரிவில் மட்டும் ஒரே தாக்குதலில் குறைந்தபட்சம் 60 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்படி கொல்லப்பட்ட ராணுவவீரர்களில் 25 வயதாகும் ரமாஸ் கோர்காட்ஸேவும் ஒருவர். இவர் ரசியாவின் கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்.
ராப் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட ரமாஸ் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். போருக்கு செல்வதற்கு முன்பு “ ரஷ்யா உங்களுடன் நிற்கிறது. ரஷ்ய ராணுவவீரர்கள் உங்களுக்காக சண்டையிடுகிறார்கள்” என்ற பாடலை கூட ரமாஸ் கோர்காட்ஸே பாடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
ராணுவ சீருடையில் தான் இருப்பது போன்ற போட்டோக்களை கூட அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு படத்தில் யுக்ரேனுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் கடைசியாக உண்ட பீட்சா மற்றும் பீருடன் இருக்கும் படமும் அடங்கும்.
அவர் தனிப்பட்ட முறையில் போர்களை எதிர்த்தாலும், அரசு உத்தரவின்படி அக்டோபர் 2022 இல் தென்கிழக்கு யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் 155 வது கடற்படை காலாட்படை பிரிவில் சேர்ந்தார். அந்த நேரத்தில் தான், இந்த பிரிவு பூச்சா மற்றும் இசியம் பகுதிகளில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதை ரஷ்யா மறுத்தது.
ரமாஸ் கோர்காட்ஸேவின் தாய் ரஷ்ய செய்தி ஊடகமான மகடன் பிராவ்தாவிடம், “யுக்ரேனில் அவனுக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் என்னிடம் சொன்னான், ‘இறப்பது மோசமான விஷயம் அல்ல, ஆனால் என்னைப் போன்றவர்களை சுடுவதே மோசமான விஷயம்’ என்று அவரது மகன் தன்னிடம் கூறியதாக” தெரிவித்துள்ளார்.
புதிய ரத்தமும் சதையும்
கோர்காட்ஸே விரைவிலேயே உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான பாவ்லிவ்கா மற்றும் வுலேடாரைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்த போரின் ரத்தக் களரியான மோதல் ஒருகாலத்தில் 15 ஆயிரம் சுரங்க தொழில் குடும்பங்கள் வாழ்ந்த பகுதியான வுஹ்லேடரில் நடைபெற்றது. இந்த பகுதி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்க உக்ரேனிய ராணுவம் இந்த இடத்தை தான் பயன்படுத்தியது.
அதே நேரத்தில், கோர்காட்ஸே அருகிலுள்ள வோல்னோவாகா பகுதியில் ஏற்பட்ட அழிவு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பின், வுலேடார் பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தனது தாய்க்கு அவர் அனுப்பும் தகவல்கள் நின்று விட்டன.
காட்டிக்கொடுத்த கடிதங்கள்
தங்களது பிரிவுகளில் இருந்து வீரர்கள் காணாமல் போகும் செய்திகள் மிக வழக்கமானதாகி விட்டது என்று 155 ஆவது படைப்பிரிவு வீரர்கள் கடிதம் ஒன்றை எழுதினர்.
நவம்பர் மாத தொடக்கத்தில், 155 ஆவது படைப்பிரிவின் வீரர்கள் ரஷ்ய மாகாணமான பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக் கோஜெமியாகோவுக்கு டெலிகிராம் வழியாக அந்த கடிதத்தை அனுப்பினார்கள். அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
போர்க்களத்தில் நிலவும் குழப்பமான சூழலை விவரித்தும், இராணுவ தளபதிகளை கடுமையாக விமர்சித்தும் அந்த வீரர்களால் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது.
“எதிர்பாராத தாக்குதல்களுக்கு” மத்தியில் நான்கு நாட்களில் மட்டும் “சுமார் 300 பேர் வரை உயிரிழப்புகள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்” என்று அந்த வீரர்கள் தெரிவித்திருந்தனர். மேலதிகாரிகள் தங்களை ‘இறைச்சி’ என்று அழைப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடற்படையினரின் கூற்றுக்களை நிராகரிக்கும் ஒரு அரிதான பொது மறுப்பு வெளியிட நிர்பந்தமாக அமைந்தது.
“ஆம், அங்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன, கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அந்த கடிதத்தில் இருப்பது போல் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என்று தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் ஓலெக் கோஜெமியாகோவ்.
இந்த வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் கொடுப்பதற்கான உறுதியையும் வழங்கினார் கவர்னர்.
போர் பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பிபிசி – ஐ புலனாய்வு பிரிவு ஆய்வு செய்தது. யுக்ரேனின் உளவு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள், அதே தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதைக் காட்டுகிறது.
வெவ்வேறு நாட்களில், யுக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் பல கவச வாகனங்களை பாவ்லிவ்காவுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் வைத்து ஒரே பகுதியில் வெடிக்கச் செய்துள்ளது.
இது ரஷ்யர்கள் ‘தரைவழிப் போரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை’ என்பதை உறுதிப்படுத்துவதாக கூறுகிறார் 2004 இல் ரஷ்ய கடற்படையினருடன் பணிபுரிந்த பாதுகாப்பு ஆய்வாளர் டைஃபன் ஆஸ்பர்க்.
“பயன்படுத்த ஒரே ஒரு திறந்தவெளி சாலை மட்டுமே உள்ள இடத்தில் எங்கு சுடுவது என்று யுக்ரேன் படைகளுக்கு தெரியும்” என்று கூறுகிறார் அவர்.
கண்ணிவெடி அகற்றப்படாமலும், வான்வழி உளவு செயல்பாடுகள் இன்றியும், போதிய உளவுத்துறை இன்றியும் நடைபெறும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தற்கொலைச் செயலாகும்” என்கிறார் அவர்.
“கீவை கைப்பற்றும் முயற்சியில் ஏற்கனவே 155வது படைப்பிரிவு பெரும் இழப்பை சந்தித்து விட்டது” என்கிறார் லண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த போர் நிபுணர் வில்லியம் ஆல்பர்ட்க்.
“அந்த வீரர்களுக்கு போதுமான பயிற்சி அல்லது போதுமான உபகரணங்கள் கூட தரப்படவில்லை என்பது போல் தெரிவதாக” கூறுகிறார் அவர்.
இதர ராணுவ ஆய்வாளர்கள் வுலேடருக்கு முன்தயாரிப்பின்றி படைகளை அனுப்பும் முடிவை, ‘மீட் – கிரைண்டர் உத்தியை’ கொண்டு விவரிக்கின்றனர்.
ஒரு தாயின் பயணம்
தனது மகன் குறித்த எந்த தகவலுமே டிசம்பர் வரை வராததால் கோர்காட்ஸேவின் தாயார் ஸ்வெட்லானா விரக்தியில் இருந்தார். எனவே, அவரே கோர்காட்ஸேவை தேடுவதற்காக போர்ப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்தார்.
யுக்ரேன் செல்ல 7000 கிலோமீட்டர் வரை பயணித்ததாக அவர் கூறுகிறார். அதை தாண்டி அங்கே சென்றடைந்த போது தான் தனது மகன் இறந்துவிட்டார் என்பது அவருக்கு தெரிந்தது.
கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படுவதற்கு முந்தைய நாள், பாவ்லிவ்காவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கோர்காட்ஸே நுழைந்துள்ளார்.
அப்போது ஆளில்லா விமானம் வீசிய கைக்குண்டு வெடித்ததில் அவரது கால்கள் வெடித்து சிதறியுள்ளது. பின் அவர் காயம் காரணமாக இறந்துள்ளார்.
155 படைப்பிரிவில் எத்தனை பேர் இறந்துள்ளனர்?
உயிரிழப்புகள் குறித்து ரஷ்யாவின்அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், பிபிசி ரஷ்ய சேவையின் ஓல்கா இவ்ஷினா, ரஷ்யாவின் சுயாதீன செய்தி இணையதளமான மீடியாஜோனா மற்றும் இறந்தவர்களைக் கணக்கிடும் தன்னார்வலர்களின் வலையமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அதிகாரபூர்வ அறிக்கைகள், சமூக வலைதள பதிவுகள், ஊடக அறிக்கைகள் மற்றும் ரஷ்யாவில் உள்ள கல்லறைகளின் போட்டோக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 155-ஆவது கடற்படை காலாட்படை பிரிவில் மார்ச் 6, 2022 முதல் பிப்ரவரி 22, 2023 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 157 ஆக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பாவ்லிவ்கா மற்றும் வுலேடார் பகுதிகளில் நடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 தாக்குதல்களில் தான் அதிக வீரர்கள் இறந்துள்ளதும் இந்த தரவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
குறைந்தது 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு.
“தற்போது கிடைத்துள்ள எண்ணிக்கையை விட 155-ஆவது படைப்பிரிவில் இறந்துள்ள போர்வீரர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள தரவுகளை விட ரஷ்ய இழப்புகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக” கூறுகிறார் ஓல்கா இவ்ஷினா.
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், இந்த போரில் இழப்புகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டும் என தெரிவித்துள்ளது. இதில் தோராயமாக 70 ஆயிரம் இறப்புகளும் அடக்கம்.
முடிவு என்ன?
ரஷ்யா வுலேடார் மீது அடுத்த தாக்குதலை அறிவித்த அதே சமயத்தில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தனது சொந்த நகரமான யாகோட்னோய் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது கோர்காட்ஸேவின் உடல்.
அதிலிருந்து சில நாட்கள் கழித்து, 155 வது படைப்பிரிவின் வீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மற்றொரு கடிதத்தில் , தரைவழி நிலை குறித்து மேலும் பேரழிவு தரக்கூடிய மதிப்பீடு குறித்து கூறப்பட்டுள்ளது.
ரஷியாவின் கடற்படை வீரர்கள் குறித்து அதிபர் புதினிடம் கேட்டபோது, “கடற்படை வீரர்கள் தற்போது நன்றாகவே பணிபுரிந்து வருவதாகவும், தைரியத்துடன் சண்டையிட்டு வருவதாகவும்” கூறியுள்ளார்.
கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. சமீபத்தில் கூட கவச வாகனங்கள் வெடி வைத்து தகர்க்கப்படக்கூடிய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்