இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் காந்திக்கு இருந்த மக்கள் மீதான பார்வையை மாற்றியதில் மதுரைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.
இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டியது 1921 ஆம் ஆண்டு மேல மாசி வீதியில் மேலாடையை துறந்தது, மேலாடை திறந்த பின்பு காந்தி ஆற்றிய முதல் உரை, 1946ல் மீனாட்சி அம்மன் கோவிலில் கோவில் பிரவேசம் என சில நிகழ்வுகள் மட்டுமே வரலாற்றில் இன்றளவும் பொக்கிஷமாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இல்லற வாழ்வில் ஈடுபட மறுத்த ஆதரவாளருக்கு அறிவுரை வழங்கியது, குழந்தைக்குத் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைக்கு இந்தப் பெயரை சூட்டுங்கள் என்று உரிமையுடன் தனது கைப்பட கடிதம் எழுதி அனுப்பியது என காந்திக்கு மதுரைக்குமான உறவு ஆழமானது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1919ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 5 முறை காந்தி மதுரைக்கு வந்துள்ளார். மதுரையுடன் காந்தி நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தார்.
மதுரை மேல மாசி வீதியில் மேலாடையை துறந்த வரலாறு
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் 1920களில் தீவிரமடைந்திருந்தது. இந்திய மக்களின் வறுமை, ஆங்கிலேய ஆடைகளை புறக்கணிக்கும் பொருட்டு கதர் ஆடையை அணிய வேண்டும் என்பதை நாடு முழுவதும் காந்தி பரப்புரை செய்து வந்த நேரம் அது.
1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி மதுரைக்கு வருகை தருகிறார். ரயில் பயணத்தின் போது திண்டுக்கல் காந்தி கிராமம் பகுதியில் விவசாயிகள் காந்தியை வரவேற்றனர். அப்போது, பலர் மேலாடை உடுத்தாமல் இருந்த நிலையில் அது குறித்து அவர்களிடம் காந்தி கேட்டுள்ளார். தாங்கள் சாதாரண விவசாய மக்கள் என்றும் கதர் ஆடையை வாங்கி உடுத்தும் அளவிற்கு தங்களிடம் பொருளாதார வசதி இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பதில் காந்தியின் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு தீர்க்கமான முடிவை அவர் எடுக்கவும் வழிவகுத்தது. இந்த நிகழ்வு எதிரொலியாக மேலாடையை துறந்து அரை ஆடைக்கு மாற காந்தி உறுதியெடுத்தார்.
விவசாயிகளுடனான சந்திப்புக்கு பின் மதுரை வந்த காந்தி மதுரை மேலமாசி வீதியில் இருக்கும் ராம் ஜி, கல்யாண் ஜி என்பவரது பங்களாவில் அன்று இரவு தங்குகிறார். அதற்கு அடுத்த நாள் அதாவது, 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அன்று தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பழனிக்குமாரசாமி பிள்ளை என்ற தொண்டரை அழைத்து, முழு ஆடையை பிடித்துக் கொள்ளச் சொல்லி நான்கு முழமாகக் கிழித்து அதனையே தனது ஆடையாக அணிந்து கொண்டார். அதற்கு முன்பு வரை தலைப்பாகையுடன் முழு கதர் ஆடையை உடுத்தி வந்தவர் அரை ஆடைக்கு மாறினார்.
இதுகுறித்து பின்னர் எழுதிய காந்தி, ‘நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் தங்களது உடலை மறைக்க நான்கு முழ ஆடை கூட இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு நான் அளித்த பதில் தான் என்னுடைய உடைக்குறைப்பு. அதுதான் இந்த அரைகுறை ஆடையணிந்த மக்களுடன் என்னை சமன்படுத்திட உதவும். இதனை நான் மதுரையில் செய்து முடித்தேன்’ என்கிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அனைவரும் அறியும் வகையில் “வறுமையால் வாடித் தவிக்கும் பாமரமக்களில் தானும் ஒருவன் என்பதை உணர்த்தும் விதமாக மேலாடை உடுத்தப் போவதில்லை”, என உறுதி ஏற்றார், என்ற வாசகங்களுடன் கல்வெட்டு ஒன்று இன்றளவும் மேலமாசி வீதியில் உள்ள அந்த இல்லத்தின் முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்தக் கட்டிடம் 1954ஆம் ஆண்டே தமிழ்நாடு காதி மற்றும் கிராம கைதொழில் துறையால் விலைக் கொடுத்து வாங்கப்பட்டு கீழ் தளத்தில் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமாகவும் மேல் தளத்தில் காந்தியின் நினைவகமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மதுரை அத்தியாயம் காந்தி வாழ்க்கையையே மாற்றியது. இன்று காந்தி என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது அவர் அரையாடை உடுத்தியபடி கையில் தடி வைத்திருக்கும் உருவம்தான். அந்த அளவுக்கு இந்த ஆடைப் புரட்சி காந்தியின் அடையாளமாக மாறிப்போனது.
அதனைத் தொடர்ந்து கதர் பரப்புரைக்காக காரைக்குடி புறப்பட்ட காந்தியடிகள் நெசவாளர்கள் அதிகம் வாசிக்கும் ராமநாதபுரம் சாலையில் மேலாடை இல்லாமல் நெசவாளர் மக்களிடம் உரையாற்றினார். முந்தைய நாள் முழு ஆடையுடன் வந்து இறங்கிய காந்தி ஏன் அரை ஆடைக்கு மாறினார் என புரியாமல் குழப்பத்துடன் காந்தியின் பேச்சைக் கேட்டனர். அந்த இடம் தற்போது காந்தி பொட்டல் என்று அழைக்கப்படுகிறது.
இதுதவிர, காந்தி மதுரையில் தற்போதைய மீனாட்சி பெண்கள் கல்லூரியாக இருக்கக் கூடிய சேதுபதி பங்களா, ஜார் ஜோசப் பங்களா, தினமணி தியேட்டர் பகுதியில் இருக்கும் என்.எம்.ஆர் சுப்புராமன் இல்லத்தில் 3 நாட்கள் தங்கி இருந்தார்.
தனது அக்காவிற்கு கடிதம் வழியாக பெயர் வைத்தது மகாத்மா காந்திதான் என பிபிசி தமிழிடம் கூறுகிறார் மதுரை காந்தி என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர் சுப்புராமனின் தம்பி மகன் எம்.கே. ஜவகர் பாபு.
“1934 ஆம் ஆண்டு மதுரைக்கு மகாத்மா காந்தி வருகை தந்தபோது எங்களது வீட்டில் 1934 ஜனவரி 25 முதல் 27 வரை 3 நாட்கள் தங்கி இருந்தார். அதற்கான கல்வெட்டு இன்றும் எங்களது வீட்டில் இருக்கிறது.
காந்தியை எனது பெரியம்மா பர்வதவர்தனி ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே வரவேற்றார். அப்போது, அவர் கழுத்தில் அதிக அளவிலான நகை அணிந்து இருந்தார். இதனைக் கொடுத்தால்தான் நான் உள்ளே வருவேன் என காந்தி விளையாட்டாகக் கேட்க எனது பெரியம்மாவும் உடனடியாக நகைகளைக் கழற்றி காந்தியிடம் கொடுத்ததாக எனது பெரியப்பா என்னிடம் கூறியிருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனது பெரியப்பா என்.எம்.ஆர் சுப்புராமன் இளம் வயதிலேயேத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், தாம்பத்ய வாழ்வில் ஈடுபடாமல் இருந்திருக்கிறார். இதனால் வருத்தமுற்ற அவரது மனைவி, காந்தி மதுரைக்கு வந்தபோது இந்த விவரங்களை அவரிடம் எடுத்துக் கூறினார். இதை தொடர்ந்து காந்தி எனது பெரியப்பாவை அழைத்துப் பேசி அவருக்கு அறிவுரைகளை வழங்கினார். இருவரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வோம் என காந்தியடிகள் முன்னிலையில் உறுதிமொழிக் கடிதம் எழுதி வழங்கி உள்ளனர். அந்த கடிதம் இன்றும் எங்களின் வீட்டில் பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வருகிறோம்” என நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
கடிதம் வாயிலாக பெயர் சூட்டிய காந்தி
தனது அக்காவுக்கு காந்தி கடிதம் வாயிலாக பெயர் சூட்டிய நிகழ்வை விவரித்த ஜவகர் பாபு, “எனது பெரியப்பாவுக்கு பெரியம்மாவிற்கும் 1936 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் காந்தியடிகள் தனது கைப்பட டைப் செய்து குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில் “குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், இந்த சமயத்தில் உதவிக்கு ஆள் தேவைப்பட்டால் வைத்துக் கொண்டு குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். பிரசவித்த மனைவிக்குச் சத்தான உணவுகள் சாப்பிட வழங்க வேண்டும்” என கூறியிருந்தார்.
மேலும் அந்த பெண் குழந்தைக்கு “சீதா” என பெயர் சூட்டும் படி குறிப்பிட்டு இருந்தார். அதன்படி எனது பெரியப்பா என் அக்காவிற்கு சீதா பாய் என பெயர் சூட்டினார்” என குறிப்பிட்டார்.
காந்திக்கு தனது தந்தை என்.எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கார் ஓட்டிச் சென்ற புகைப்படத்தையும் பாபு நம்மிடம் காட்டினார். காந்தி தனது கடிதங்கள் அனைத்திலும் பாபு என்று பெயரைக் குறிப்பிட்டு இருந்ததால் தனக்கு ஜவகர் பாபு என்ற பெயரை தன் தந்தை வைத்ததாகவும் அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்