எங்கிருந்து கசிந்தது?
கோவிட் பரிசோதனையின்போது இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட டேட்டாக்கள்தான் இவை என்றும், `இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக’த்திடமிருந்து (ICMR) இந்தத் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தேசிய தகவல் மையத்திடமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் கோவிட் பரிசோதனையின்போது பெறப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. அதனால், எங்கிருந்து கசிந்தது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தும், இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை சுமார் 6,000 முறை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சர்வரிலிருந்து டேட்டாக்களைத் திருட முயற்சிகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்புதான், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் தரவுகள் `கோவின்’ இணையதளத்திலிருந்து கசிந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. `அந்தத் தரவுகள் போலியாக இருக்கலாம். அதுமட்டுமல்லாமல், இது கோவின் தளத்திலிருந்து திருடப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் சர்வரிலிருந்து நோயாளிகளின் டேட்டாக்கள் திருடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. அப்போதெல்லாம், ஏதோவொரு வகையில் நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இந்த விவகாரத்தில் ஏன் மெளனம் காக்கிறது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் சிலர், “ஒருவரின் தொலைபேசி எண் கசிந்திருந்தாலே, அதை வைத்து இங்கு ஏராளமான சட்டவிரோத நடவடிக்கைகள், பணத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதில், பாஸ்போர்ட், ஆதார் எண்களும் கசிந்திருப்பது மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். 81 கோடி பேரின் டேட்டாக்கள் கசிந்திருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் டேட்டாக்கள் கசிந்திருப்பது உறுதியாகியிருக்கிறது. எனவே, இந்தத் தகவல் கசிவை முக்கியமான பிரச்னையாகக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்கப் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.
டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய க்ரைமாகப் பார்க்கப்படும் டேட்டா திருட்டுக்கு மத்திய அரசிடமிருக்கும் தீர்வு என்னவோ?!
நன்றி
Publisher: www.vikatan.com