உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய திருவள்ளுவருக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளம் பூசப்படுவதாக சர்ச்சை தொடர்ந்து வருகிறது. வெண்ணிற ஆடையில், தலையில் கொண்டை, தாடியுடன் ஒரு கையில் எழுத்தாணி மற்றொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கும் படமே தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் படம். ஓவியர் வேணுகோபால் சர்மாவால் இந்த ஓவியம் வரையப்பட்டது.
ஆனால், 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படம் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதும், அந்தப் படத்தை நீக்கிவிட்டு, மீண்டும் வெள்ளை நிற உடையில் இருந்த படத்தைப் பதிவேற்றியிருந்தார். இப்படி திருவள்ளுவரின் உடை குறித்த சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அதேநேரம், எட்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, தலையில் முடியில்லாமல் ஒரு சிறிய குடுமியுடன், நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. `தமிழ்நாட்டின் அடையாளத்தை பா.ஜ.க மாற்ற முயல்கிறது’ எனப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்தன. இப்படி காவி உடையில் திருவள்ளுவர் உருவத்தை பா.ஜ.க தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருவது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு,“திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பர்யத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,“ `வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்” எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” என தமிழ்நாடு அரசு அங்கீகரித்த வெள்ளை நிற உடையில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com