ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகலாய மன்னரான ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் குறித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிவருகின்றன. தாஜ்மஹாலுக்கு அடியில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் சிலர் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். தாஜ்மஹால் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார், ஜெய்பூர் அரச குடும்பத்தின் வாரிசான தியா குமாரி.
இந்த நிலையில், தாஜ்மஹாலில் 22 அறைகள் பூட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றை ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்த ரஜ்னீஷ் சிங் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பது போல, தாஜ்மஹாலில் அறைகள் இல்லை என்று தொல்லியலாளர்கள் தெரிவித்தனர். பா.ஜ.க-காரரின் அந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தாஜ்மஹாலை கட்டியது யார் என்றும், அதன் உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் என்றும் இந்து சேனா அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘முகலாய பேரரசர் ஷாஜஹானால் தாஜ்மஹால் கட்டப்படவில்லை. ராஜா மான்சிங் என்பவர்தான் தாஜ்மஹாலைக் கட்டினார். அது, ராஜா மான்சிங்கின் அரண்மனையாக இருந்து, ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது.
பின்னர், அவருடைய மனைவியின் கல்லறையாக அது மாற்றப்பட்டது. எனவே, தாஜ்மஹால் தொடர்பான தவறான தகவல்களை வரலாற்றைப் புத்தகங்களில் இருந்து அகற்றுவதற்கு தொல்லியல் துறைக்கும் மத்திய அரசுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தாஜ்மஹாலின் வயது, ராஜா மான்சிங் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு ஆகியவை குறித்து ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, துசார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஜ்மஹாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான பரிசீலனையில் இருப்பதாக நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்தது. ‘தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு’ குறித்து ஆய்வு நடத்துமாறு மத்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ராஜா மான்சிங்கின் அரண்மனையைச் சீரமைத்து ஷாஜஹான் பயன்படுத்தினாரா என்பது பற்றியும் ஆய்வு நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச முதல்வராக 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு, உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலா தலப் பட்டியலிலிருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது. இந்திய கட்டடக் கலை வகையில் தாஜ்மஹால் இல்லை என்று உத்தரப்பிரதேசம் விளக்கம் அளித்தது. மேலும், அந்த நேரத்தில், தாஜ்மஹால் வளாகத்தில் சிவன் சிலை இருப்பதாகக் கூறி, சாமியார்கள் சிலர் அங்கு செல்ல முயன்றனர். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, இந்தியாவில் பாரம்பர்யமிக்க நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய பா.ஜ.க அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவுசெய்தது. அதன்படி, 95 நினைவுச் சின்னங்களையும் சுற்றுலாத் தலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பட்டியலில் தாஜ்மஹாலும் இடம்பெற்றது. அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ‘தாஜ்மஹாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு இருக்கிறது’ என்று மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறினார். அவரது கருத்துக்கு கண்டனம் எழுந்தது.
அந்த நேரத்தில், தாஜ்மஹாலை உ.பி மாநில அரசு முறையாகப் பராமரிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. தாஜ்மஹாலுக்கு எதிராக நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் வெற்றிபெறாத நிலையில், தற்போது தாஜ்மஹாலை கட்டியது யார் என்று ஆராயுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com