கடந்த 2006 – 11ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க., ஆட்சி வந்த தும், பொன்முடிக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடி மனைவி விசாலாட்சியும், வழக்கில் சேர்க்கப்பட்டார்.
தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, 2016 ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி., — எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
‘அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து பதில் அளிக்க, இருவரும் 21ம் தேதி காலை 10:30க்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று காலை, உயர் நீதிமன்றத்தில் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் ஆஜராகின்றனர். நீதிபதி உத்தரவுக்கு பின் தண்டனை விபரங்கள் தெரியவரும்.
நன்றி
Publisher: m.dinamalar.com