சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், அ.தி.மு.க
“ `தி.மு.க மது விற்பனையை நிறுத்தும்’ என்பது பச்சைப் பொய். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. `500 டாஸ்மாக் கடைகளை முடியிருக்கிறோம்’ என்றனர். ஆனால், விற்பனை குறைவான கடைகளை மட்டும் மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிதாகக் கடைகளைத் திறந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ‘டாஸ்மாக்கை மூடிவிடுவோம். மது உற்பத்தி ஆலைகளை நிறுத்திவிடுவோம். டாஸ்மாக் வருமானத்துக்குப் பதிலாக மாற்றுப் பொருளாதார வழிகளைக் கண்டுபிடிப்போம்’ என்றெல்லாம் இவர்கள் பேசிய வீர வசனங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே அரசே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனையைச் செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு சட்டவிரோத மது பார்கள் அரசுக்குத் தெரிந்தே செயல்படுகின்றன. பாட்டிலுக்கு பத்து ரூபாய், பார் வருமானம் என்று தினசரி கோடிக்கணக்கில் பணம் ஆளுங்கட்சியின் மேலிடத்துக்குச் செல்கிறது. தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு, தமிழகத்தில் புதிதாக மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்கள் பணம் சம்பாதிக்க ஒரு சமூகத்தையே மதுவுக்கு அடிமையாக்கிவருகிறார்கள்.’’
நன்றி
Publisher: www.vikatan.com