ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
“ஆளுநர் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது… கருணாநிதி பிறந்த தினத்தன்று 144 தடை உத்தரவைப் பிறப்பிக்குமா இந்த அரசு… மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை ஒரு சாதியத் தலைவர்களாகச் சுருக்கி, அவர்களின் தியாகங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாட இங்கிருக்கும் அரசும், பல அரசியல் கட்சிகளும் முன்வருவதில்லை. இதை வெளிப்படையாக ஆளுநர் பேசியிருக்கிறார். மகாத்மா காந்தி தமிழகத்தில் பிறந்திருந்தால் இங்கு ஆளும் திராவிடக் கட்சிகள் அவருக்கும் சாதி, மதச் சாயம் பூசியிருக்குமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தொடர்ந்து மக்களை சாதி, மதரீதியாகப் பிளவுபடுத்தி, அதனால் ஆதாயம் தேடத் துடித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. மக்கள் நலன் குறித்து ஆளும் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. சட்டம்-ஒழுங்கு நாசமாகிக் கிடப்பதற்கு ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வெடித்த சம்பவமே ஆகச்சிறந்த சான்று.’’
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க
“வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுகிறார் ஆர்.என்.ரவி. இன்றுவரை தமிழகத்திலுள்ள எந்த அரசியல் கட்சித் தலைவராவது தாங்கள் சார்ந்த சாதிப் பெயர்களை அடைமொழியாக வைத்துக்கொண்டதுண்டா… அப்படி ஒரு புரட்சியை இங்கு ஏற்படுத்தியது தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரலாற்றை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மோடி, ஷா எல்லாம் சாதிய அடைமொழிகள்தானே… தமிழ்நாட்டில் சாதிய அடையாளங் களைவைத்து நிலவிய கொடுமைகளை அகற்றி, சாதிய விஷத்தைத் துடைத்தெறிந்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதை தடுப்பதாகச் சொல்கிறார்கள். சுதந்திர அணிவகுப்பில் மருது சகோதரர்களின் சிலைகளுடன் தயாரிக்கப்பட்ட அணிவகுப்பு வாகனத்துக்கு அனுமதி மறுத்தது இவர்களின் அரசுதானே… சாதியத் தளைகளிலிருந்து விடுபட்டு தனித்துவத்துடன் நிற்கிறது தமிழ்நாடு. இங்கு வந்து சாதி, மதச் சண்டையை மூட்டிவிட நினைக்கும் மூடர்கள் தோற்றுப்போவார்கள்.’’
நன்றி
Publisher: www.vikatan.com