`எந்த மாநிலமும் தமிழகத்துக்கு ஈடாக சுற்றுச்சூழலில் கவனம்

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

“முதல்வர் உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதேபோல எண்ணூர் பகுதியில் எண்ணெய் கொட்டியது. அதை பக்கெட்டில் அள்ளியதைக் கண்டு நாடே சிரித்தது. சமீபத்திலும் பேரிடர் சமயத்தில் ஒன்றிய அரசு நிறுவனத்தின் அலட்சியத்தால் அப்படி ஒரு நிலை உண்டானது. ஆனால், பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எண்ணெயைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறோம். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியது தி.மு.க அரசு. பாதிக்கப்பட்ட பறவைகளுக்குக்கூடச் சிகிச்சை வழங்கியது எங்களுடைய அரசு. ஒன்றிய பா.ஜ.க அரசு, சுற்றுச்சூழலுக்கு எதிராகத் தமிழகத்தில் எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும், எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் முதல் ஆளாக எதிர்த்திருக்கிறது தி.மு.க. ஆனால், அனைத்துக்கும் அடிமை அ.தி.மு.க ஒப்புதல் கொடுத்தது. இதுவரை வேறெந்த மாநிலமும் செய்திராத வகையில், எதிர்காலச் சிந்தனையோடு, பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது இந்த அரசு. உதாரணமாக, அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் காடுகள் அளவை 21 சதவிகிதத்திலிருந்து, 33 சதவிகிதமாக உயர்த்தத் திட்டம், நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம். விழிப்புணர்வை ஏற்படுத்த, காலநிலை அறிவு இயக்கம். சுற்றுச்சூழல், காலநிலை குறித்து அனைத்துப் பணிகளையும், திட்டங்களையும் ஒருங்கிணைக்க முதல்வர் தலைமையில் ‘காலநிலை மாற்ற நிர்வாகக்குழு’ என்று இந்த அரசு முன்னெடுத்த திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சுற்றுச்சூழல் பாதிப்புக்காக ஸ்டெர்லைட்டில் போராட்டம் நடத்திய மக்களைச் சுட்டுக் கொன்றுகுவித்த அ.தி.மு.க-வுக்கு இது குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை.”ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து ஒட்டு மொத்தத் தமிழகச் சுற்றுச்சூழலும் நாசமாகிக்கொண்டிருக்கிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க மணல் குவாரிகளை மூடியது அ.தி.மு.க அரசு. ஆனால், இவர்கள் வந்ததும் குவாரிகளைத் திறந்தார்கள். திறந்தது மட்டுமல்லாமல், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி லாரி லாரியாக மணலைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மதுரையிலுள்ள கிரானைட் குவாரிகளை மூடியது அ.தி.மு.க ஆட்சி. அதையும் மீண்டும் திறக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் குறித்து இந்தத் திறனற்ற தி.மு.க அரசுக்கு எள்ளளவும் அக்கறை இல்லை என்பதை ஆட்சிப் பொறுப்பேற்ற தினம் முதல் இன்றுவரை நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார்கள். அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக்கழிவுகளைத் தமிழகத்தில் வந்து கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். அதைக் கண்காணிக்க, தடுக்க இந்த அரசுக்குத் துப்பிருக்கிறதா… அதேபோல, வெளிமாநிலங்களுக்கு அரசு அனுமதியோடு லாரி, லாரியாகக் கனிம வளங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. இவை அனைத்திலுமே இந்த விடியா தி.மு.க அரசுக்கும்… தி.மு.க அமைச்சர்களுக்கும் பங்கு இருப்பதால் யாரும் எதையும் தடுப்பதுமில்லை… கண்டுகொள்வதுமில்லை. சென்னை புயல் வெள்ளத்தில் எண்ணெய் கலந்தது… அமோனியா வாயு வெளியேறியது… இவை அனைத்துமே மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தோல்விகள்தான். டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததுபோல அ.தி.மு.க., எவ்வளவோ சூழலியலுக்குச் செய்திருக்கிறது. ஆனால், எதையுமே செய்யாமல் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!”

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *