மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம், பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை, மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு, பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது, பெருந்தலைவர் காமராசருக்கு மணிமண்டபம், மூதறிஞர் ராஜாஜிக்கு நினைவாலயம், தில்லையாடி வள்ளியம்மாளுக்கு மணிமண்டபம், வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி, வ.உ.சி இழுத்த செக்கு, நினைவுச்சின்னம் ஆனது, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்து பயணம், தியாகிகளுக்கு மணிமண்டபம், விடுதலைப் பொன்விழா நினைவுச்சின்னம், தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்குச் சிலை, தியாகி கக்கனுக்குச் சிலை, சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திமுக.
மொழிப்பற்று – இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம். இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடினோம். இப்படி பட்டியல்கள் திராவிட மாடல் அரசில் ஏராளமாக இருக்கின்றன என்பதை ஆளுநர் ரவி புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழகத்தின் வரலாறு.
அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’க் கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று கூவுவது ஆளுநர் மாளிகையில் தயாரிக்கப்படும் உரைகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் யார், குடிஅரசு ஏட்டில் ‘இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ எனத் தலையங்கம் எழுதிச் சிறை சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் புரியும். அதுவரை ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை!” என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com