மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது ஒருபக்கமிருக்க, புயல் மற்றும் பெருமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளையும் மீட்பு பணிகளையும் மேற்கொள்வதில் தி.மு.க அரசு கோட்டைவிட்டதாக விமர்சிக்கப்படுகின்றன். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “புயல் தொடர்பான அறிவிப்புகளை தி.மு.க அரசு வெளியிட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் மழை பெய்து 4 நாட்கள் ஆகியும் மடிப்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை, சோழிங்கநல்லூர் பகுதிகள் என பல இடங்களில் நீர் தேக்கம் இருப்பதால், நீரை வெளியேற்றும் ராட்சத பம்புகள் பெரிதளவில் தயாராகயில்லை என்பது தெரியவருகிறது.
மேலும் மழைக்கு பிறகு பால் தட்டுபாடு வரும் என எல்லா மழையில் கற்ற பாடம், ஆனால் இம்முறையும் பால் இல்லை என்றால் அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதை பார்க்கலாம். இதுவரை வெள்ளத்தில் சிக்கிதவிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை அரசு அணுகவே இல்லை என்றால் பணியாளர் நியமனம், திட்டமிடல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இவற்றுக்கு மேலாக மழை வடிகால் திட்டத்தில் அரசு முற்றாக கோட்டைவிட்டதாக பார்க்கப்படுகிறது” என்றனர்
நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் சி.டி,ஆர் நிர்மல் குமார், “புயல் அறிவிப்புகள் முன்னரே வந்தபோதும், அரசின் எந்த துறையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. பெரு மழைக்கு பிறகு பால் கிடைக்கவில்லை, மின்சார விநியோகம் சீராகவில்லை, பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வழியில்லை, 16,000 மீட்பு பணியாளர்கள் இருப்பதாக முதலில் சொன்னார்கள், பிறகு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்கள். வார்டுக்கு இத்தனை பேர் என நியமித்திருந்தால் அனைத்து மக்களையும் ஒரேநாளில் சென்றடைந்திருக்கலாம். ஆனால் 50% மக்களுக்கு எந்த உதவியுமில்லை..
98% வடிகால் பணிகள் முடிந்ததாக குத்துமதிப்பாக சொன்னார்கள். எங்கே முடிந்தது.. எங்கே தொடங்கவில்லை என்ற விபரம் முதலமைச்சர் உள்பட யாருக்குமே தெரியவில்லை. 4000 கோடி செலவிட்டோம் என இவர்கள் சொல்லும் வடிகால் திட்டம் டோட்டல் பெயிலியர். அதன் ப்ளூ ப்ரிட் கூட யாரிடமும் இல்லை. வடிகால் பணிகளை குளறுபடிகளுடன் மேற்கொண்டதால் நீர் தேங்காத இடங்களில் நீர்தேங்கி நிற்கிறது” என்றார் கொதிப்புடன்
நம்மிடம் பேசிய நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக், “ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாக மாறுவதுதான் திராவிட மாடல் அரசின் லட்சணம். தமிழகத்தின் தலைநகரமாகவும், தொழில் நகரமாகவும் விளங்கும் சென்னையில் அடிப்படை நீர்வழிப்பாதைகளைகூட கட்டமைக்காமல் மக்களை திண்டாட வைத்திருக்கிறது தி.மு.க அரசு. தண்ணீரை தேங்கவிடாமல் வடிகால் அமைப்பிலும் வாய்கால் அமைப்பிலும் கவனம் செலுத்தாமல் உணவு பொருட்கள் தருவதும், தண்ணீரை இறைத்து வெளியேற்றுவதும் என தன்னார்வலர்கள் செய்யும் வேலைகளைத்தான் அரசும் செய்துகொண்டிருப்பது வேடிக்கை.
பல்லாயிரக்கணக்கில் வடிகால் திட்டங்களுக்கு செலவிட்டதாக சொல்கிறார்கள். அதனால் என்ன பயன், பல்லாயிரம் கோடியை வைத்து என்ன செய்தனர்? இதைவிட பெரும் கொடுமை, மழையில் சிக்கிய மக்களை மீட்க பெருங்கூட்டம் முயற்சிக்கும் நிலையில், மழைநீரெல்லாம் வடிந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல தி.மு.கவினர் பரப்புவது கொடுமையிலும் கொடுமை” என்றார்
நம்மிடம் பேசிய சி.பி.ஐ முத்தரசன், “மழைநீர் வடிகால் பணிகளில் அரசு தொடர்ச்சியாக கவனம் செலுத்தினார்கள். அரசு எதுவுமே செய்யவில்லை என்றால் பாதிப்புகள் இன்னும் கடுமையாக இருந்திருக்கும். கடல் சீற்றம் இருப்பதால் தண்ணீரை உள்வாங்கப்படவில்லை என்பதே பிரச்னை. இருந்தாலும் மழைநீர் வடிகால் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி எழுவதால் வடிகால் கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைத்திட வேண்டும்.” என்றார்.
நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் “மின்சாரமில்லை, நீர்தேக்கம்கூட புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும், குடிநீரையும் பாலையும்கூட கொண்டு சேர்க்க முடியாத கையறுநிலையில் அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் கிளம்புகின்றன. சொல்லப்போனால் புயலை கையாள்வதில் தி.மு.க ஃபெயில் என்றே கூறவேண்டும்” என்றனர் கோபத்துடன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com