சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியுள்ளார். பெட்ரோல் குண்டு வெடித்ததால், அங்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய நபரை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல் அதிகாரிகள் விரட்டி பிடித்து கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பதும் ஏற்கெனவே பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இதே போன்று பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம் ஓராண்டாக சிறையில் இருந்ததாகவும், தனது விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதித்ததால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது, தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.
கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் உள்ள பாஜக தமிழ்நாடு தலைமை அலுவலகத்தைத் தாக்கிய அதே நபர்தான் இன்று ராஜ்பவன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்கள், திமுக அரசுதான் இந்தத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் அடுத்து திசை திருப்புவதற்கு தயாராகி வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com