அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, காலை 9 மணியளவில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடக்கிவைத்தார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், `ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்’, `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’, `பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும்’ உட்பட 25 தீர்மானங்களை உதயநிதி முன்மொழிந்தார். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மாலையில் உரையாற்றிய மூத்த அமைச்சர் துரைமுருகன், “தாய் கழகத்தையே மிஞ்சக்கூடிய அளவுக்கு இளைஞரணி முன்னேறியிருப்பதைப் பார்த்து பொதுச்செயலாளராகப் பெருமை கொள்கிறேன். நூற்றாண்டு வயது கொண்ட திராவிட இயக்கத்துக்கு, 50 ஆண்டுக்காலம் கலைஞர் தலைவராக இருந்தார். 50 ஆண்டுக்காலம் இந்த இயக்கத்தை நடத்தினார்.

அதற்குப் பிறகு முதல்வர் இப்போது இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது சொல்கிறேன், இந்த இயக்கத்தை அடுத்த நூற்றாண்டுக்கு நடத்திச் செல்கின்ற ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அப்படிச் சொல்கின்ற உரிமையும் தகுதியும் எனக்கு இருக்கின்றது” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com