தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், அமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் இன்று தொடங்கியது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, காலை 9 மணியளவில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடக்கிவைத்தார். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெறும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், `ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்’, `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’, `பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும்’ உட்பட 25 தீர்மானங்களை உதயநிதி முன்மொழிந்தார்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாலையில் உரையாற்றிய கனிமொழி, “நாம் பெரியாரின் பிள்ளைகள். இங்கே கொள்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வட இந்தியாவில் நாளை கோயிலைத் திறக்கிறார்கள். அந்தக் கோயிலைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை, ஏன் குடியரசுத் தலைவர் அழைக்கவில்லை என்றுகூடக் கேட்கப் போவதில்லை.
ஒன்றை மட்டும் நான் கேட்கிறேன் ஒரு கோயிலை முழுதாக முடிக்காமல் திறக்கலாமா… இன்றைக்கு இருக்கின்ற பா.ஜ.க, நாங்கள்தான் இந்து மதத்தைக் காப்பாற்றுகிறோம், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம், கோயில்களைக் காப்பாற்றுகிறோம், அனைத்து கோயில்களையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள் என்கிறார்கள். கட்டி முடிக்காத கோயிலைத் திறக்கக் கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், அதை அரசியலாக்கி உங்களின் அரசியல் லாபத்துக்காக இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல், உங்களுடைய ஆள்களே கோயிலுக்கு வர மாட்டோம் என்று சொல்கின்ற அளவுக்கு, அரசியல் விளையாட்டில் கோயிலை நாளை திறக்கப் போகிறீர்கள்.
அதற்கு அரை நாள் விடுமுறை வேறு… தனியார் ட்ரஸ்ட் திறக்கக்கூடிய கோயிலுக்கு அரசு ரயில்களை எல்லாம் இலவசமாக விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ஐஸ் (ICE) வைப்பார்கள் ஐஸ் என்றால், Income Tax (வருமான வரித்துறை), CBI (சிபிஐ), ED (அமலாக்கத்துறை). இது மூன்றும் வரும்.
ஆனால், நீங்கள் என்ன செய்தாலும் உங்களை எதிர்ப்போம். உங்களின் கருத்துகளை எதிர்ப்போம். மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய ஆட்சியை மாற்றிக் காட்டுவோம். தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய நிலுவைத் தொகையை முறையாகத் தருவதில்லை. அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் வந்தார்கள். ஆனால், இதுவரை ஐந்து பைசாகூட வரவில்லை. இதுவே குஜராத்தில் வெள்ளம் வந்தபோது ஆயிரக்கணக்கான கோடிகயைக் கொண்டு கொட்டினீர்கள்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா… தமிழ்நாட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், எங்களுக்கு நியாயமாக வர வேண்டிய நிதியை தர மறுக்கிறீர்கள். வெள்ள ஆய்வுக்கு வந்த நிதியமைச்சர், கோயிலுக்குச் சென்று பூசாரிக்கு சம்பளம் கம்மியாக கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்… எதை ஆய்வு செய்யச் சொன்னால், எதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இதுதான் அவர்களின் எண்ணம். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விரைவில் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் தமிழ்நாட்டில் மட்டும் மாற்றம் வந்தால் போதாது… நாடு முழுவதும் வர வேண்டும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com