“உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிகிறார்கள், நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுக்கிறது. எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?”
“அரசியல் இத்தகைய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவற்றை வரவேற்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றபோது, காவிகளிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டுமென்று சொன்னார். அதனால்தான் தி.மு.க மீது எப்போதும் பா.ஜ.க-வுக்கு ஒரு வன்மம் இருக்கிறது. அமைச்சர் உதயநிதியின் கருத்தை இமயம் வரை கொண்டு சேர்த்த பா.ஜ.க-வுக்கும், அயோத்தி சாமியார் உட்பட அனைவருக்கும் நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.”
“India is also called as a Bharath என்றுதானே அரசியலமைப்புச் சட்ட முகப்புரையில் இருக்கிறது. பாரத் என்று பெயரை மாற்றினால் தி.மு.க-வுக்கு என்ன பிரச்னை?”
“இப்போது I.N.D.I.A என எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பெயர் வைத்ததால் தூக்கத்தை தொலைத்த பா.ஜ.க, நாட்டின் பெயரை மாற்றப் பார்க்கிறது. ஒருவேளை நாங்கள் பாரத் என்று பொருள்படும் வகையில் கூட்டணிக்கு பெயரை மாற்றினால் என்ன செய்வார்கள்? மீண்டும் வேறு பெயரை மாற்றுவார்களா? மக்கள் மனதில் புரையோடிப்போன இந்தியா என்ற பெயரை அவர்கள் மாற்றத் துணிந்திருப்பது அரசியல் சித்து விளையாட்டு. அவர்கள் நாட்டின் பெயரை மாற்றினாலும், ஊரின் பெயரை மாற்றினாலும் மக்கள் அவர்களையே மாற்ற தயாராகிவிட்டார்கள் என்பது மட்டும் உறுதி.”
“நாட்டின் பெயரை மாற்றிவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், அதனால் என்ன ஆகிவிடப்போகிறது?”
“பணமதிப்பழிப்பு செய்து எல்லோரையும் வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் நிற்க வைத்ததைப் போல, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு, கடவுச்சீட்டு, பான் அட்டை என ஒவ்வொரு அடையாள அட்டையிலும் பாரத் என்று மாற்ற வரிசையில் நிற்க வேண்டுமா? முட்டாள்தனமாக இல்லையா?”
“எல்லா ஆவணங்களையும் டிஜிட்டலில் மாற்றிக்கொள்ள வசதி, வாய்ப்புகள் வந்துவிட்டனவே?”
“டிஜிட்டல் இந்தியாவில் கிழித்து தைப்பதைத்தான் பார்க்கிறோமே! ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் என்ன நடந்தது? இறந்தவர்கள் 7.5 லட்சம் பேரின் பெயரில் காப்பீடு கொடுத்ததாக கொள்ளை அடித்தது டிஜிட்டல் இந்தியா திட்டத்தில்தானே? என் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எனக்கேத் தெரியாமல் உருவிவிடுகிறார்கள். அதுதான் டிஜிட்டல் இந்தியா.”
“தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது, அதைவிட சனாதனம் என்ன முக்கியமா என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்களே?”
“தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்று நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பேசும் பேச்சுக்கள் அவை!”
“கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 21 கொலைகள் நடந்திருக்கிறது என பட்டியல் போடுகிறாரே அண்ணாமலை! அது சட்டம், ஒழுங்கு சீர்கேடு இல்லையா?”
“எந்த மாநிலத்தில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் குற்றங்கள் நடைபெறும். இதை சட்டம், ஒழுங்கு பாதிப்பு என்று ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர் சொல்கிறார். உத்தரப் பிரதேசத்தில் என்ன பாலாறும், தேனாறும் ஓடுகிறதா? மணிப்பூரில் நடந்தது சட்டம், ஒழுங்கு சீர்கேடு. அங்கு ஆள்வது டபுள் என்ஜின் பா.ஜ.க சர்க்கார். அவர்கள் ஆளும் மாநிலத்தில் என்ன நிலை என்று அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்.”
நன்றி
Publisher: www.vikatan.com