“தி.மு.க-வை விமர்சிக்கும் இடத்திலிருந்து தி.மு.க-வுக்கு வந்த உங்களுக்கு, மாணவரணித் தலைவர் பொறுப்பு கிடைக்குமென எதிர்பார்த்தீர்களா?”
“உறுதியாக எதிர்பார்க்கவில்லை. கருத்தியல்ரீதியாக உரையாட லட்சக்கணக்கான பேர் இருக்கிற இயக்கம் தி.மு.க. ஊடக வெளிச்சமும் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அன்பும்தான் என்னை இந்த இடத்துக்கு உயர்த்தியாகவும், உழைப்பு அடையாளப்படுத்தப்பட்டதாகவும் பார்க்கிறேன். வழங்கப்பட்ட வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, தொடர்ந்து உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்.”
‘‘தேர்தல் அரசியலில் உங்களைப் பார்க்கலாமா… அதனை விரும்புகிறீர்களா?’’
“பிற்காலத்தை என்னால் கணிக்க இயலாது. தி.மு.க-வின் மாணவரணித் தலைவராக நியமிக்கப்பட்டதையே பெரும் வாய்ப்பாகப் பார்க்கிறேன். அதேசமயம் வாய்ப்புகள் வழங்கப்பட்டால், அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் இருக்கிறதே தவிர… அதுதான் இலக்கு என்றில்லை!’’
‘‘ `சீமான் அ.தி.மு.க-விடம் பணம் வாங்குகிறார்’ எனத் தொடர்ச்சியாக பேசுகிறீர்கள்.. சீமான், தி.மு.க, அ.தி.மு.க-வை பாரபட்சமின்றி விமர்சிக்கத்தானே செய்கிறார்!
‘‘விமர்த்திருந்தாலும் அ.தி.மு.க-விடம் மாதம் மாதம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. தி.மு.க-வினரை பார்த்து மாற்று மொழிக்காரர்கள் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள் எனப் பேசுவது எவ்வளவு பெரிய அவதூறு. அதேசமயம் பச்சை தமிழர் எடப்பாடி என்று பேசுகிறாரா இல்லையா… தி.மு.க-வில் யார் முதலமைச்சராக முடியும் எனப் பேசுகிறார்களே… நாம் தமிழர் கட்சியில் சீமான் இடத்துக்குப் போட்டியாக ஒருத்தரை யோசிக்க முடியுமா… யோசித்தால் கட்டம்கட்டி வெளியே அனுப்புவார். அவ்வளவுதான் அவர்கள் யோக்கியதை!’’
“ `பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை’ என எடப்பாடி சொன்னால், நாடகம் எனச் சொல்லிக்கொண்டே பின்னாடி வருகிறதே தி.மு.க… ஏன் இந்த பதற்றம்?”
“முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிற எடப்பாடி பழனிசாமியிடம் ஆரியம் திராவிடம் குறித்து கேட்டபோது ‘நான் என்ன புலவரா… அறிஞரா’ எனக் கேட்பதெல்லாம் தற்குறித்தனமான பதில். சிந்தாந்த தெளிவில்லாத, தற்குறித்தனமாக இருக்கிற எடப்பாடி நாளை சந்தர்ப்பவாதத்துக்காக கூட்டணி வைக்க மாட்டார் என நம்புகிறீர்களா?’’
“கூட்டணி இல்லையென தினசரி சொல்லுகிறாரே எடப்பாடி!”
“தினசரியல்ல, நொடிக்கு நொடிசொன்னால்கூட எடப்பாடியை நம்ப முடியாது. கூட்டணி முறிந்த 33 நாள்களில், பா.ஜ.க-வின் மதம், மொழி, வரி, என எந்த கொள்கை பிடிக்கவில்லை எனச் சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம். ‘இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா?’ என்ற கேள்வி எழுந்த சூழலிலும் அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்தபோதும், மோடியை ஆதரித்தார் எடப்பாடி. அவ்வளவு கொடூரத்திலும் மோடியை ஆதரித்துவிட்டு, இனிமேல் ஆதரிக்க மாட்டார் என ஏதும் உத்தரவாதம் இருக்கிறதா..?”
`ஆளுநர் ஆர்.என் ரவி மீண்டும் சர்ச்சை கிளப்பும் விதமாகப் பேசு ஆரம்பித்துவிட்டாரே!”
‘‘அமைதியான மாநிலம் தமிழ்நாடு. அதில் குழப்பத்தை ஏற்படுத்தவே இந்த ஆளுநர் இங்கே அனுப்பட்டிருக்கிறார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி செயல்படாமல் காந்தியைக் கொன்ற கோட்சேவின் கொள்கை பரப்புச் செயலாளரைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை இயக்குகிற அரசியலையே வீழ்த்தும் வேலைகளை செய்துவருகிறோம்.’’
‘‘ஆனால், ஆளுநரைக் கண்டித்து பெரியளவில் போராட்டமோ, பேரணியோ தி.மு.க நடத்தியதாகத் தெரியவில்லையே?’’
‘‘ஏற்கெனவே நடத்தியிருக்கிறோம். மீண்டும் நடத்துவது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்.’’
நன்றி
Publisher: www.vikatan.com