திமுக இளைஞரணி மாநாடு: சேலத்தில் குவிந்த நிர்வாகிகள், தொண்டர்கள்! | Live Updates
தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது.
காலை 9 மணிக்கு, தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, மாநாட்டில் தி.மு.க கொடியை ஏற்றி வைக்கிறார். காலை 9:30 மணிக்கு வரவேற்புக்குழு தலைவர், இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்புரை ஆற்றுகிறார்.
9:45 மணிக்கு மாநாட்டு தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்யப்படுகிறார். அதையடுத்து, 10 மணிக்கு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் முதன்மை செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றுகிறார்.
பின்னர் 10:15 மணியளவில் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, மாநாட்டு திறப்பாளரான எழிலரசன் எம்.எல்.ஏ உரையாற்றுகிறார். பின்னர், மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்” உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெறும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மாலை 6:30 மணிக்கு இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாநாட்டு தலைவருக்கான உரையாற்றுகிறார். 6:45 மணிக்கு பொருளாளர் டி.ஆர்.பாலு, இரவு 7 மணிக்கு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். 7:30 மணிக்கு விழா நிறைவு பேரூரையாக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
மாநாட்டு செட்டின் முகப்பு மலை முகடு போலவும், அரண்மனையின் கோட்டை சுவர், மண்டபம், பல்வேறு வகையான அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலிமாறன் புகைப்பட கண்காட்சி என ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநாடு பாதுகாப்புப் பணியில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில் 10,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டு திடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்றே வந்து விட்டனர். மாநாட்டுக்கு வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 96 டன் ஆட்டுக்கறி பிரியாணிக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல கோழி கறி 60 டன் பிரியாணிக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. சமையல் வேலைக்காக 7,000 சமையல் ஆட்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு தயார் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com