நகங்களில் ஏற்படும் நிறமாறுபாடுகளை வைத்தே எந்தெந்த நோய்த்தொற்றின் அறிகுறி என்று கண்டுபிடிக்கலாம்.
உடலின் வெளிப்புறத்தில் உள்ள நகங்களின் ஆரோக்கியத்தை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை கணித்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள கைவிரல் நகங்களில் நிலவு போன்று சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே நகங்கள் நீல நிறமாக மாறியிருந்தால், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதும் இதற்கு காரணமாகும்.
கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக நோய், வைட்டமின் பி12 பற்றாக்குறை, போன்றவற்றால் நகம் கருப்பு நிறமாக மாறக்கூடும். நகங்கள் வெளிறிய நிறத்தில் காணப்பட்டால் ரத்த சோகையாக இருக்கலாம். உடம்பில் துத்தநாக சத்து குறைபாடு இருத்தால் நகத்தில் வெள்ளை நிறப்புள்ளிகள் தோன்றும். பூஞ்சை தொற்று, நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ரத்த ஓட்டத்தில் சிக்கல் இருந்தால், நகங்கள் ஊதா நிறத்தில் மாறும்.
இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று இருக்கும். நகங்களில் கோடுகள் அதிகம் தென்பட்டால் நிமோனியா போன்ற தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.இதை தவிர தரமற்ற மற்றும் அதிகம் ரசாயன கலவை கொண்ட நகப்பூச்சுகளை பூசினாலும் நகங்கள் நிறம் மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com