“நம் நாட்டிற்கு தற்போது உள்ள இந்தியா என்ற பெயரே போதும். பாரத் என்ற பெயர் தேவையில்லை என நான் கருதுகிறேன். தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண் போடவில்லை” என கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 85 -வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு 85 சீர்வரிசை பொருள்கள் கொடுத்து தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசிய அவர், “கடந்த காலங்களில் பெண்கள் வேலை செய்யும் இயந்திரமாக பார்க்கப்பட்டனர். பெண் குழந்தைகள் சாபம் என்ற நிலைமாறி தற்போது அது வரமாக மாறிவிட்டது.
அதனால் தான் பெண் தேவதைகளுக்கு நான் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். கணவன் துணைவியார்க்கு இறுதி மூச்சு வரை உறுதுனையாக இருக்க வேண்டும். ஒன்றை மட்டும் நிறுத்தி விடுங்கள், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்… குடிப்பழக்கம் குடும்பத்தை கெடுத்து விடும் அதை நிறுத்தி விடுங்கள்” என்றார்.
பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், “குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கர்நாடகா அரசு தற்போது தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம். சமூக நீதிதான் எல்லாவற்றிற்கும் சரியான பரிகாரம்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நம் நாட்டிற்கு தற்போது உள்ள இந்தியா என்ற பெயரே போதும். பாரத் என்ற பெயர் தேவையில்லை என நான் கருதுகிறேன். தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண் போடவில்லை” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com