கண்டதேவி தேரோட்டத்தில்இந்தப் பகுதியிலுள்ள தேவேந்திர குல வேளாளார் மக்களுக்கும் வடம் பிடிக்க உரிமை கேட்டு 1998-ம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தாக்கல் செய்ய, “கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரையும் பங்கேற்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கவேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மக்களும் பங்குபெறும் வகையில், தேரோட்டத்தை நடத்த முடியவில்லை. தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், தேரோட்ட பிரச்னை தமிழக அரசியல் தளத்தில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் குடமுழுக்கு பணி, அதைத் தொடர்ந்து புதிய தேர் செய்யும் பணியையும் காரணம்காட்டி, 2005-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘தேர் தயாராக இருந்தாலும், அந்தப் பகுதியில் மக்களிடம் ஒற்றுமை இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது’ என்று அரசு தரப்பு தெரிவிக்க, ’சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும், பல பிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் கவலை அளிக்கிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்… அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை அரசு புரிந்துகொண்டு, தேர் வெள்ளோட்டத்தை நடத்த வேண்டும். அரசால் முடியாவிட்டால், துணை ராணுவத்தை வைத்து நடத்த உத்தரவிடலாமா?’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசிடம் கேள்வி எழுப்பியது.
உடனே சிவகங்கை கலெக்டர், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அலுவலர்களையும், தேவகோட்டை தாலுகாவில் உள்ள உஞ்சனை, செம்பொன்மாரி, இரவுசேரி, தென்னாலை நாட்டு அம்பலங்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
நன்றி
Publisher: www.vikatan.com