‘‘நம் நாட்டை வளர்ந்த நாடாக உயர்த்துவதில் பெண்களுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு’’ என்று பேசியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
சமீபத்தில் கேரளாவின் பாலக்காட்டில் நடந்த தனது கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் இப்படிப் பேசிய பிரதமர் மோடி, ‘உஜ்வாலா’ திட்டம் மூலம் 10 லட்சம் எரிவாயு இணைப்பு தந்தது, கர்ப்பிணிகளுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு என மத்திய அரசு செயல்படுத்திய பல விஷயங்களை எடுத்துச் சொன்னார்.
ஓர் அரசாங்கம் என்கிற முறையில் இந்த விஷயங்களை எல்லாம் செய்வது அதன் கடமை ஆகும். பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் பங்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கம் இன்னும் கவனமாகத் திட்டமிட்டு, அவற்றை அதிவேகமாக நடைமுறைப்படுத்துவதுதான், பெண்களைத் தற்சார்புடன் இயங்க வைக்கும். நாட்டின் வளர்ச்சியிலும் பங்கெடுக்க வைக்கும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தரப்பிலிருந்து சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். முதலில், 40 வயதுக்குக்கீழ் உள்ள அனைத்துப் பெண்கள் பற்றிய டேட்டாக்கள் தேடி எடுக்கப்பட வேண்டும்.
இதில் எத்தனை பேர் படித்தவர்கள், இவர்கள் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள், பொருளாதார வளர்ச்சியில் இவர்கள் பங்களிப்பதற்கு சாதகமான அல்லது பாதகமான விஷயங்கள் என்னென்ன, பொருளாதார வளர்ச்சியில் இவர்கள் பங்களிக்கும் வகையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்து முழுமையான ஒரு ‘ஆக்ஷன் பிளான்’ உருவாக்கப்பட்டு, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது, பகுதிநேர வேலைவாய்ப்புகளைத் தருவது, இந்தியா முழுக்க பெண்கள் எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் 3% முதல் 5% வரை அதிகமான சம்பளத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தருவது, சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவது எனப் பல நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் இன்னும் அதிகமான பெண்களைப் பங்கேற்கச் செய்ய முடியும்.
அதே நேரம், இன்றைக்கு 40 வயதுக்குக்கீழ் இருக்கும் அனைத்துப் பெண்களும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கும் வகையில் தங்களால் என்ன செய்ய முடியும் என்றும் யோசிக்க வேண்டும். இது குறித்து பெண்கள் மனம் திறந்து விசாலமான பார்வையுடன் யோசிக்கும்போது ஆயிரமாயிரம் வழிகள் தெரிவதை நிச்சயம் கவனிக்க முடியும்!
அரசாங்கங்கள் நினைத்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்துவிட முடியாது; மக்களும் கைப்பிடித்து இழுத்தால் மட்டுமே பொருளாதாரம் என்கிற தேர் முன்நோக்கிச் செல்லும்!
– ஆசிரியர்
நன்றி
Publisher: www.vikatan.com