அ.தி.மு.க பொதுச் செயலாளரான பின்னர் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நான்கு மண்டலங்களாக இருந்த ஐடி விங்க் கலைக்கப்பட்டு, வி.வி.ராஜ் சத்யனை செயலாளராக கொண்ட புதிய ‘தகவல் தொழில்நுட்ப பிரிவு’ சமீபத்தில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட வாரியாக ஐ.டி விங் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி ஒரு குடையின் கீழ் அ.தி.மு.க ஐ.டி விங் செயல்படுவதால் சமூக வலைத்தளங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமுக தற்போது செயல்படுவதாக தெரிவிக்கிறார்கள் அக்கட்சியினர்.
அப்படி சமூக வலைத்தளங்களில் சிறப்பாக செயல்படும் கட்சிக்காரர்களை மேலும் ஊக்கப்படுத்த அ.தி.மு.க தலைமை முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுவோர் என்று லிஸ்ட்டை எடுத்து, அவர்களை எடப்பாடி தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர்.
அதாவது, “கட்சியின் கொள்கை, சமூக அக்கறையோடு சமூக வலைத்தளங்களில் நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள். உங்களை பாராட்ட தலைமை முடிவு செய்திருக்கிறது. வெள்ளிக்கிழமை 10 மணிக்குள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தலைவர் வீட்டுக்கு வந்துவிடுங்கள். உங்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது” என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 100 பேரில் நிர்வாகிகளும், கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத தொண்டர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் தென்மாவட்டத்தை விட வடமாவட்டத்தில் இருந்துதான் அதிகப்படியான நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ‘விங் 2.0’ என்ற பெயரில் சென்னையில் பிரம்மாண்டமாக சமீபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால், சிம்பிள் சந்திப்பாக அ.தி.மு.க இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. அ.தி.மு.க ஐ.டி விங் நிகழ்ச்சிக்கு பிறகு, இதுபோன்ற சந்திப்பு அடிக்கடி நடைபெறும் என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com