எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தபோது, தீய சக்தி தி.மு.க-வை ஒழிப்பதுதான் முதல் கடமை எனக் கூறினார். அவர் இருந்தவரை தி.மு.க-வால் எழுந்திருக்கமுடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் 15 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியும், எனது தலைமையில் நான்கறை ஆண்டுக்காலம் சிறப்பான ஆட்சியையும் வழங்கினோம். இந்தக் கட்சிமீது எத்தனை வழக்குகள் போடப்பட்டன. அத்தனையையும் மீறி நீதி, நேர்மை மூலம் வெற்றிக் கண்டிருக்கிறோம். நம்மை ஒழிக்க தி.மு.க எவ்வளவோ பாடுபட்டது. இப்போது துரோகிகளும் அவர்களுடன் கைகோத்துக்கொண்டார்கள். அதையும் தொண்டர்களின் ஆதரவுடன் வென்றுகாட்டினோம்.
தொண்டர்களும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் நேர்மைக்கு ஆதரவாக நின்றார்கள். தமிழ்நாட்டிலேயே அதிக தொண்டர்களைக் கொண்ட இயக்கம் இது. சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் நமது கட்சியில் இணைந்திருக்கிறார்கள். புதிய உறுப்பினர்களில் பெண்கள், கணவரை இழந்தவர்கள், படித்தவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் அதிகம் இணைந்திருக்கிறார்கள். தொண்டர்கள்கூட கட்சியின் தலைமைப் பதவிக்கு வரமுடியும் என நிரூபித்தக் கட்சி, நமது கட்சி மட்டும்தான். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க-தான்.
நன்றி
Publisher: www.vikatan.com