ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் இணைப்பு, குடிநீர் வசதி, சிமெண்ட் ரோடு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, இங்கு வசித்த மக்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவையும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் வசித்த அனைவருமே தினக்கூலித் தொழிலாளர்களாக மிக வறுமையில் இருந்தவர்கள்தான். இந்த நிலையில், ‘நீர்நிலைப் புறம்போக்கு’ எனக் காரணம் காட்டி, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகம், குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி அங்கு வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
மாற்று இடம் வழங்கப்படாததால், வீடுகளை இழந்த மக்கள் அகதிகளைப்போல கண்ணீரும் கம்பலையுமாக குழந்தை குட்டிகளுடன் எங்குச் செல்வது எனத் தெரியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் தான் கடந்த மாதம் 23-ம் தேதி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கெதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ‘‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிலம் ஆர்ஜிதம் செய்து, வீடு கட்ட போதிய கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும்’’ எனவும் வலியுறுத்தியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இதைத்தொடர்ந்து, இந்த மாதம் 22-ம் தேதி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர், சாதிக்பாட்ஷா நகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
அதன்பிறகு, ஆளும்தரப்பும், மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் செவி சாய்த்தது. கடந்த 23-ம் தேதி, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆகியோரே நேரிடையாக களத்தில் இறங்கினர். தென் நந்தியாலம் கிராமத்தில் முதற்கட்டமாக சிலருக்கு மாற்று இடம் வழங்குவதற்கான இடத்தையும் தேர்வு செய்து பார்வையிட்டிருக்கின்றனர். ‘‘விரைவில், இங்கு வீடுகள் கட்டப்பட்டு குடிபெயர்வதற்கான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்’’ என்று அமைச்சர் காந்தி உத்திரவாதம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அதே சமயம், ‘‘அமைச்சரின் இந்த உத்திரவாதம் மீது தங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை’’ எனப் பாதிக்கப்பட்ட மக்களே குமுறியிருக்கின்றனர். இதுபற்றி அவர்கள் பேசுகையில், ‘‘முதலில், கூராம்பாடி என்ற கிராமத்திலுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை இவர்களே தான் தேர்வுசெய்தனர். பின்னர், ‘மேய்க்கால் நிலம்’ எனச் சொல்லி, அந்த நடவடிக்கையை நிலுவையில் போட்டுவிட்டனர். இதையடுத்து, வேப்பூர் கிராமத்தில் பட்டா நிலம் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர், அந்த நிலம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகச் சொல்லி அதிலிருந்தும் வெளியேறிவிட்டனர். அதைத்தொடர்ந்து, கத்தியவாடி கிராமத்தில் நிலம் வழங்க உத்தேசிக்கப்பட்டதாகவும், பிறகு ‘தொலைவு’ ஒரு காரணம் என்பதால் அந்த பரிசீலனையில் இருந்தும் பின்வாங்கிவிட்டனர். இவர்களுக்கு ஒரு இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பாகவே அங்குள்ள பிரச்னைகள் குறித்து தெரியாதா அல்லது இடம் வழங்கக் கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் கதைக்கட்டுகிறார்களா?’’ என்றனர் வருத்தத்தோடு.
இதுசம்பந்தமாகப் பேசிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.எம்.சுகுமார், ‘‘ஒன்றரை ஆண்டுகளாக மாற்று இடம் தருவதாகச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் முன்பே மாற்று இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நடைமுறை. எங்கள் தலைவர் எடப்பாடியிடம் இந்த விவகாரத்தைக் கொண்டுச் சென்ற பிறகே இந்த மாவட்ட அமைச்சரும், ஆட்சியரும் மாற்று இடம் வழங்கும் நடவடிக்கையில் வேகம் காட்டுகிறார்கள். இப்போதும்கூட இவர்கள் நாடகமாடுவார்கள் என்பதால், மக்களைத் திரட்டி வரும் 28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொள்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரை அ.தி.மு.க அவர்கள் உடன் நிற்கும்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com