விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், கூட்டணிக்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அதற்கான குழுக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன.
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்துள்ள தமிழக பா.ஜ.க, புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதில் எந்தெந்த கட்சிகளெல்லாம் இணையும் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், சில தொகுதிகளை குறிவைத்து பா.ஜ.க முன்னதாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அதில் முக்கியமானது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி. அ.தி.மு.க-வில் ராஜ் சத்யன், தி.மு.க கூட்டணியில் மீண்டும் மாணிக்கம் தாகூர், அல்லது துரை வைகோ, பா.ம.க-வில் திலகபாமா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இங்கு போட்டியிட கடந்த சில மாதங்களாக தேர்தல் வேலைகளை பா.ஜ.க பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தொடர்ந்து செய்து வருகிறார்.
இத்தொகுதியை குறிவைத்து கடந்த சில ஆண்டுகளாக சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் தொடர்ந்து சுற்றி வந்தவர், தொழில்ரீதியாக இப்பகுதியினர் சந்தித்து வந்த பல பிரச்னைகளில் மத்திய அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று சுமூகமாக தீர்த்து வைத்து பெயர் வாங்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலிருந்து வாகன பிரசாரத்தை தொடங்கியவர், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டார்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக நேற்று மோடி 3.0 என்ற முழக்கத்துடன் ‘விருதுநகர் நாடாளுமன்றம் வென்று சென்று நாடாளுவோம்’ என்ற தலைப்பில் மதுரையில் பா.ஜ.க-வின் சமூக ஊடக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை இராம ஸ்ரீநிவாசன் நடத்தினார்.
அக்கூட்டத்தில் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி, 400 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நாம் எம்ய்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளோம். சிவகாசி ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்வதற்கும், சாத்தூரில் தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை காத்து மீண்டும் அந்த தொழிலை மீட்டு கொடுத்துள்ளோம்.
பட்டாசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி-யை குறைக்கவும், பட்டாசுக்கு தடை எற்பட்ட நேரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்த தடையை நீக்கியுள்ளோம். வீரன் அழகு முத்துகோன் தபால் தலை வெளியிட்டது, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது, விருதுநகரில் 2000 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்ததுடன், மறவர் மற்றும் வலையர் நல வாரியம் அமைக்க தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.
தேவேந்திரர் என்ற அரசாணையை பெற்று தந்தது என இன்னும் ஏராளமான நலத்திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
இவைகளையெல்லாம் நாம் ஊடகம் மற்றும் சமூக ஊடகம் வாயிலாக அதி தீவிரமாக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.’விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியை வென்று நாடாளுவோம்’ என்ற கோஷத்துடன் விருதுநகரை வென்றெடுக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட தலைவர்கள் மகா சுசிந்திரன், ராஜசிம்மன், சசிக்குமார், ஊடக பிரிவு மாநில செயலாளர் நாகராஜன், சமூக ஊடக பிரிவு மாநில துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com