இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் நடந்துவந்த போரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இந்தப் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தன. இதற்கிடையில், இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் பேரில், 4 நாள்களில் ஹமாஸ் 51 பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீனக் கைதிகளையும் விடுதலை செய்திருந்தன.
இந்த நிலையில், மேலும் இரண்டு நாள்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, நேற்றிரவு கடைசிக் கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கிடையில், 29-ம் தேதி இஸ்ரேலுக்குச் சென்றிருந்த எலான் மஸ்க், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் அதிபர் ஐசக், “யூதர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துவருவதை எதிர்த்துப் போராடவேண்டியது மிகவும் அவசியம்” என எலான் மஸ்க்கிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஹமாஸ் அமைப்பால் கைதுசெய்யப்பட்ட பிணைக் கைதிகளின் குடும்பத்தினரை, எலான் மஸ்க் சந்தித்து உரையாடினார். பிணைக் கைதி ஒருவரின் தந்தை, `எங்கள் இதயங்கள் காஸாவில் பிணைக்கைதிகளுடன் இருக்கின்றன’ என்று பொறிக்கப்பட்ட நாய் சங்கிலியை (Dog Tag) எலான் மஸ்குக்கு வழங்கினார். அந்த அன்பளிப்பை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க், அதைக் கழுத்தில் அணிந்துகொண்டார். மேலும், “உங்கள் அன்புக்குரியவர்கள் விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் இந்த நாய்ச் சங்கிலியை அணிந்துகொள்வேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான ஒசாமா ஹம்தான், “எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு மட்டும் சென்று, அங்க நிலைமையை அறிந்துகொண்டார். எனவே, அவர்மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, இஸ்ரேல் வீசிய குண்டுகளால் ஏற்பட்ட அழிவின் அளவையும் அவர் காண வேண்டும். காஸா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் அழிவின் அளவைக் காண அவரை காஸாவுக்கு வருமாறு அழைக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com