டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங்கும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சஞ்சய் சிங் கைதுசெய்யப்பட்டதாகவும், மதுபானக் கொள்கை முறைகேட்டில் முக்கிய நபராக அவர் செயல்பட்டார் என்றும் அமலாக்கத்துறை கூறியது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபானக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. அதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டிய சி.பி.ஐ-யும், அமலாக்கத்துறையும், தனித்தனியாக வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகின்றன.
உச்ச நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரினார். அவரின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்தது. ரூ.338 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான தரவுகள் தற்காலிகமாக நிறுவப்பட்டிருப்பதால், அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இதே வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியிருக்கிறது. அதாவது, பி.எம்.எல்.ஏ எனப்படும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அவருக்கு சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்பியிருக்கிறது.
‘இந்த நடவடிக்கை, ஆம் ஆத்மி கட்சியின் கதையை அரசியல்ரீதியாக முடிப்பதற்கான சதி’ என்று ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சிக்கிறார்கள். அமலாக்கத்துறையின் சம்மனைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை இயக்குநர் அலுவலகத்தில் விசாரணைக்காக கெஜ்ரிவால் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ விசாரித்தது. ஆனால், அமலாக்கத்துறையால் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவது இதுதான் முதன்முறை.
கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, “ஆம் ஆத்மி கட்சியை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்பதால், விசாரணை, கைது போன்ற உத்திகள் மூலம் ஆம் ஆத்மியைக் குறிவைக்கிறார்கள்” என்றார். முன்னதாக, `நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்காக அமலாக்கத்துறை இயக்குநர் அலுவலகத்துக்குச் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு வைத்து கைதுசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது’ என்று அரசியல் வட்டாரத்தில் பரபரக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, “அரவிந்த் கெஜ்ரிவாலைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதற்காகவே, கெஜ்ரிவாலைக் கைதுசெய்வார்கள். பா.ஜ.க-வுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசக்கூடிய, போராடக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்பது பா.ஜ.க-வினருக்கே தெரியும். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்குக்காக அல்ல, அவர் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசுகிறார் என்பதற்காக அவரைக் கைதுசெய்வார்கள்” என்றார்.
மேலும், “சிறைக்கு செல்வதற்கோ, பொய் வழக்குகளுக்கோ ஆம் ஆத்மி கட்சியினர் அஞ்சுபவர்கள் அல்ல. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, தங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை ஆம் ஆத்மி கட்சியினர் போராடுவார்கள்” என்று அதிஷி கூறியிருக்கிறார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் மற்றொரு அமைச்சரான சௌரவ் பரத்வாத் அளித்திருகும் பேட்டியில், “முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது, அரசியல்ரீதியாக ஆம் ஆத்மி கட்சியை தண்டிப்பதற்கான சதி” என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டால், ஆம் ஆத்மி கட்சியை வழிநடத்துவது யார்?’ என்ற கேள்விக்கு, “இப்போதைக்கு, அது குறித்து விவாதம் எதுவும் எழவில்லை. கெஜ்ரிவால்தான் எங்கள் தலைவர். அவருடைய தலைமையின் கீழ் நாங்கள் பணியாற்றுவோம்” என்றார்.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சில மணி நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேசமயம் அவர் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள கிளம்பிவிட்டதாகச் தகவல்கள் கூறுகின்றன.
நன்றி
Publisher: www.vikatan.com